You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 50 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ள டெங்கு பாதிப்பு
இலங்கையில் நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாத காலத்தில் 29 ஆயிரத்து 700 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலத்துடன் ஓப்பிடும் போது 53 சதவீத அதிகரிப்பை இது காட்டுகின்றது.
கடந்த ஆண்டு முதல் மூன்று மாத காலத்தில் 13,829 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டனர். இந்த வருடம் அந்த எண்ணிக்கை 29 687-ஆக அதிகரித்துள்ளது. .
நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 10, 464 ஆக காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பிப்ரவரி மாதத்தில் 8,430-ஆக குறைந்து, மார்ச் மாதத்தில் 10,748-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பு . கம்பகா மற்றும் களுத்துரை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்திலே கூடுதலான டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
வடக்கு - கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரை மட்டக்களப்பு , திருகோணமலை , கல்முனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய சுகாதர சேவைகள் பிரிவிலும் கடந்த மாதத்தில் அதிகரிப்பை காண முடிகின்றது.
நாடு தழுவியதாக பெண்கள் , குழந்தைகள் உள்பட 3 மாத காலத்தில் சுமார் 55 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தாகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
"டெங்கு நோய் தற்போது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை சுகாதார அமைச்சினால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது . இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும் '' என்கின்றார் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன.
எச்1 என்1 வைரஸ்
இலங்கையில் டெங்கு காய்ச்சல் போன்று அண்மைக்காலமாக ஒருவித வைரஸ் காய்சலும் நாட்டின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றது.
இந்த வைரஸ் காய்ச்சல் காரணமாக பீடிக்கப்பட்டிருந்த 3548 பேரின் மாதிரிகள் மருத்துவ ஆய்வுக்குட்படுத்தப்பட்ட போது 528 பேர் மட்டுமே எச்1 என்1 தொற்றுக்குள்ளானது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
''எச்1 என்1 ஒரு வைரஸ் ஆகும். ரத்த மாதிரிகளை வைத்து இந்த வைரஸ் பரவுவதாக கூறிவிட முடியாது. மருத்துவ ஆய்வுகள் மூலம் அவை உறுதிப்படுத்தப்பட வேண்டும் '' என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
''சாதாரண தொற்றை கூட எச்1 என்1 என கருதி அஞ்சுகின்ற நிலை காணப்படுகின்றது .இந்த வைரஸ் நாட்டில் தீவிரமாக பரவும் நிலை இல்லை '' என்கின்றார் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன.
இது தொடர்பாக வெளியான தவறான தகவல்களினால் தான் கட்டார் தனது நாட்டு பிரஜைகளை இலங்கைக்கான பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் ராஜித சேனரத்ன குறிப்பிட்டுள்ளளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்