இந்தியா vs ஆஸ்திரேலியா: டெல்லி மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய 'அந்த ஒரு ஷாட்'

ஸ்வீப்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சந்திரஷேகர் லூத்ரா
    • பதவி, மூத்த விளையாட்டுப் பத்திர்கையாளர், பி பி சி ஹிந்திக்காக

ஞாயிற்றுக்கிழமை காலை டெல்லியின் கோட்லா மைதானத்தில் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லுபேஷன் பேட்டிங் செய்ய வெளியே வந்தபோது, அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை யாராலும் யூகித்திருக்க முடியாது.

12 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்த நிலையில் இன்னிங்ஸை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு இந்த இரு பேட்ஸ்மேன்கள் மீதும் இருந்தது. இந்த ஸ்கோருடன் தொடங்கிய இன்னிங்ஸ் 31.1 ஓவரில் 113 ரன்களுக்குச் சுருண்டது. 115 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்த நிலையில் ஆஸ்திரேலியாவின் 9 விக்கெட்டுகள் வீழ்ந்தன.

சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் பலவீனம் மீண்டும் ஒருமுறை வெளிப்பட்டது. குறைந்த பவுண்டரி ஆடுகளத்தில் ஸ்வீப் ஷாட்களை விளையாட முயன்று ஆட்டமிழந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள், இப்போது தொடரின் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குப் பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கோட்லா மைதானத்தை அறிந்தவர்கள், இந்த முறை விக்கெட் மிகவும் சிறப்பாக இருந்தது, பந்து சராசரி பவுன்ஸ் பெறுகிறது என்பதை முதல் இரண்டு நாள் ஆட்டத்திலேயே உணர்ந்துவிட்டனர். முகமது ஷமி முதல் நாளில் 60 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இன்னிங்ஸின் வெற்றிகரமான பந்துவீச்சாளராகத் தன்னை நிரூபித்துக் கொண்டதற்கு இதுவே காரணம்.

ஷமியின் பந்துவீச்சைப் பார்த்து பேட் கம்மின்ஸ் அணியினர் யோசனையில் இருந்தனர். ஏனென்றால் 2017க்கு பிறகு முதல் முறையாக ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் டெஸ்ட் விளையாடக் களமிறங்கியது இந்த அணி. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளின் போது முதல் நாள் ஆட்டத்தில் சராசரியாக 277 ரன்கள் எடுத்த இந்த அணி, கோட்லாவில் எடுத்த முதல் நாள் ஸ்கோர் மிகவும் குறைவு.

ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி முதல் இன்னிங்ஸிலேயே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களைத் திணறடித்தனர். அஸ்வின் 57 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 68 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இரண்டாவது நாள் காற்று யார் பக்கம்

இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கும் போது, இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸைத் தொடர்ந்தது. இந்த விக்கெட்டில் தங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் என்ன செய்வார்கள் என்பது ஆஸ்திரேலிய அணியின் கவலையாக இருந்தது.

கோட்லா ஆடுகளத்தில் ஸ்வீப் ஷாட்களை ஆடுவது ரிஸ்க் எடுப்பது போன்றது என்று எந்த டெல்லி கிரிக்கெட் வீரரும் சொல்லலாம். இந்திய கிரிக்கெட் வீரர்கள் நிதானம் காட்டியதற்கு இதுவே காரணம், ஆனால் நாதன் லியானும் தனது முழுத் திறமையுடன் களமிறங்கினார்.

தனது கேம் பிளான் மூலம் இந்திய பேட்ஸ்மேன்களை கிண்டல் செய்ய ஆரம்பித்தார். அவர் தனது பந்துகளின் வேகத்தை அதிகரித்தார்.

ரோஹித் சர்மாவை அவர் கிளீன் பவுல்டு செய்த பந்து மணிக்கு 95 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்டது. லியான் நான்கு ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த, கோட்லா மைதானத்தில் அமைதி பரவியது.

அக்சர் படேல் மற்றும் ஆர் அஷ்வின் இடையே முக்கியமான பார்ட்னர்ஷிப் இருந்திருக்காவிட்டால், ஆஸ்திரேலியா பெரிய அளவில் முன்னிலை பெற்றிருக்கும். இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில், ஆஸ்திரேலிய அணியின் கையே வலுவாக இருந்தது. அது, 62 ரன்கள் முன்னிலை பெற்று ஒன்பது விக்கெட்டுகளைப் பெற்றிருந்தது.

மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கிய போது, இந்திய அணிக்கு அழுத்தம் அதிகம் இருந்தது. காரணம், நான்காவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வேண்டியிருந்ததுடன், ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்து தனது இன்னிங்ஸை முன்னெடுத்திருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் ஆட்டம் தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்திலேயே சீட்டுக் கட்டு சீட்டுகளாகச் சரிந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 52 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. ரவிச்சந்திரன் அஷ்வின் முதல் இன்னிங்ஸைப் போலவே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார், ஆனால் ரவீந்திர ஜடேஜா தனது பந்துவீச்சில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியாவின் இந்த அவலநிலைக்கு ஜடேஜாவின் பந்துவீச்சு எவ்வளவு காரணமாக இருந்ததோ, அதை விட, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் செயல்பாடும் இருந்தது. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா ஸ்வீப் ஷாட் அடித்ததால் 6 விக்கெட்டுகளை இழந்தது.

கோட்லாவில் தடுமாறக் காரணம்

முதல் இன்னிங்ஸில் உஸ்மான் கவாஜா இந்த ஸ்வீப் ஷாட்டைப் பயன்படுத்தி நல்ல ரன்களை எடுத்தாலும், இரண்டாவது இன்னிங்சிலும் லாபுஷேன் நல்ல ஸ்வீப் செய்தார். ஆனால் கோட்லா ஆடுகளத்தில் இந்த ஷாட் எப்போது ஆபத்தாக முடியும் என்பதை யாரும் கணிக்க முடியாது.

டெல்லியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சுரிந்தர் கன்னா, "காலை ஈரப்பதத்தில் கோட்லா ஆடுகளம் வித்தியாசமாகச் செயல்படுகிறது. இது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்குப் புரியவில்லை. ஜடேஜா நேராகவும் வேகமாகவும் பந்து வீசுகிறார். அவரது பந்துவீச்சு எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஸ்வீப் ஷாட்களை விளையாட ஆசைப்பட்டதால், அந்த அணி இந்த நிலையை அடைந்தது.

ஜடேஜா 12.1 ஓவரில் 42 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே அவரது டெஸ்ட் வாழ்க்கையில் சிறந்த பந்துவீச்சாகும். முன்னதாக 2016ல் இங்கிலாந்துக்கு எதிராக 48 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கோட்லா ஆடுகளத்தில் நான்காவது இன்னிங்சில் 115 ரன்களை எடுப்பது எளிதல்ல. கேஎல் ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். மதிய உணவுக்குப் பிறகு, ரோஹித் சர்மா ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் லியான் பந்தில் ஒரு வலுவான சிக்ஸரையும் அடித்தார். ஆனால் அவர் விரைவில் ரன் அவுட் ஆனார்.

புஜாரா தனது இந்த நூறாவது டெஸ்டில் பெரிய ஸ்கோரை எடுக்க முடியவில்லை, ஆனால் இந்தப் போட்டியில் அணியின் வெற்றிக்கு அவரது பவுண்டரிகள் முக்கியக் காரணமாக இருந்தன. அவர் 74 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய 'அந்த ஒரு ஷாட்'

பட மூலாதாரம், Getty Images

விராட் கோலி தனது 20 ரன்களில் 25,000 சர்வதேச ரன்களை முடித்தார், ஆனால் அவர் டெஸ்ட்டில் முதல் முறையாக ஸ்டம்ப் அவுட் ஆனார். இதையடுத்து ஐயரும் வெளியேறினார். ஆனால் இறுதியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சமன்பாடு

டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம், தொடரை இழக்காது என இந்திய அணி முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அடைந்துள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான உரிமையையும் இந்திய அணி வலுப்படுத்தியுள்ளது.

இரண்டு டெஸ்டில் வெற்றி பெற்ற பிறகு, அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் விளையாட முடியுமா என்ற கேள்விக்கு தொழில்நுட்ப ரீதியாக 'ஆம்' என்று பதிலளிக்க முடியாது. அடுத்த இரண்டு டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்து, மறுபுறம், நியூசிலாந்தில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தினால், இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு வரலாம்.

இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய மூன்று அணிகளும் சாம்பியன்ஷிப்பில் முதல் இடத்தை அடையலாம். நான்கு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால், அதற்கும் சிரமங்கள் ஏற்படலாம். இருப்பினும் இந்திய அணி இன்னும் முதலிடத்தில் உள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா ஒரு போட்டியை சமன் செய்தால், அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய 'அந்த ஒரு ஷாட்'

பட மூலாதாரம், Getty Images

தொடரில் மீதமுள்ள இரண்டு போட்டிகள்

தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளுக்கும் அதே அணியை தேர்வுக் குழு தக்கவைத்துள்ளது. சேத்தன் சர்மா ராஜினாமா செய்த பிறகு, நான்கு தேர்வாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தொடர்ந்து தோல்வியடைந்தாலும் கே.எல்.ராகுலின் இடம் அணியில் நீடிக்கிறது. சதம் அடிக்கும் வரை அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிகிறது.

நடப்பு தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் 1ம் தேதி தொடங்குகிறது. இது தவிர ஒருநாள் தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப காரணங்களால் ரோஹித் சர்மா முதல் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாது, அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா அணிக்கு கேப்டனாக இருப்பார்.

டெல்லி டெஸ்டின் போது அணியில் இருந்து வெளியேறிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் இரு அணிகளிலும் இடம்பிடித்துள்ளார். உனட்கட் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா அணிக்காக பெங்கால் அணிக்கு எதிராக விளையாடினார்.

சௌராஷ்டிரா அணி ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் ரஞ்சி கோப்பையை வென்றது, இந்தப் போட்டியில் 129 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை வீழ்த்திய உனட்கட் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சமயம் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜாவும் ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளார்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: