சேத்தன் ஷர்மா ஸ்டிங் ஆபேரேஷன்: இந்தியக் கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து அவரை விரட்டிய ஃபுல்டாஸ்

ஒரு தனியார் சேனலின் ஸ்டிங் நடவடிக்கையில் சேத்தன் ஷர்மா, விராட் கோலி மற்றும் செளரவ் கங்குலி இடையேயான உறவு மற்றும் வேறு பல விஷயங்களைப் பற்றி பேசுவதைக் காண முடிந்தது.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஒரு தனியார் சேனலின் ஸ்டிங் நடவடிக்கையில் சேத்தன் ஷர்மா, விராட் கோலி மற்றும் செளரவ் கங்குலி இடையேயான உறவு மற்றும் வேறு பல விஷயங்களைப் பற்றி பேசுவதைக் காண முடிந்தது.
    • எழுதியவர், ஆதேஷ்குமார் குப்தா
    • பதவி, விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்திக்காக

கடைசியில் எதிர்பார்த்தது நடந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் சேத்தன் ஷர்மா வெள்ளிக்கிழமை காலை தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் ஜெய் ஷா, சேத்தன் ஷர்மாவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.

தனது ஸ்டிங் ஆபரேஷனில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமைத் தேர்வாளர் சேத்தன் ஷர்மா, சர்வதேச அளவில் பிசிசிஐ மற்றும் இந்திய வீரர்களின் பிம்பத்திற்கு ஊறு விளைவிக்கும் பல விஷயங்களைக் கூறியதாக இந்த வாரம் ஒரு செய்தி சேனல் கூறியது.

இந்த ஸ்டிங் ஆபரேஷனின் போது, விராட் கோலிக்கும் செளரவ் கங்குலிக்கும் இடையிலான உறவு மற்றும் வேறு பல விஷயங்கள் குறித்து சேத்தன் ஷர்மா பேசுவதைக் காண முடிந்தது.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பதவி தொடர்பாக விராட் கோலி மற்றும் கங்குலி இடையே நடந்த மோதல் தொடர்பாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. விராட் கோலி செய்தியாளர் சந்திப்பில் கூட தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

பின்னர் விராட் கோலி, கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களின் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார். வீரர்கள் ஊசி போட்டுக்கொள்வது குறித்தும் சேத்தன் ஷர்மா இந்த ஸ்டிங் ஆபரேஷனில் கருத்து தெரிவித்திருந்தார்.

சேத்தன் ஷர்மா இந்தியாவின் பிரபலமான கிரிக்கெட் வீரர் ஆவார். பாகிஸ்தான் உடனான ஒரு போட்டியின் கடைசி பந்தை சேத்தன் ஷர்மா வீச, அதை ஜாவேத் மியாந்தாத் சிக்சராக மாற்றி தனது அணிக்கு வெற்றி தேடித் தந்தது மக்கள் மனதில் இன்னும் பசுமையாக உள்ளது.

1986-ம் ஆண்டு ஷார்ஜாவில் நடந்த ஆஸ்திரால்-ஆசியா கோப்பையின் இறுதிப் போட்டி இது. ஆட்டத்தின் கடைசி பந்தில் பாகிஸ்தானின் ஜாவேத் மியாந்தாத் சிக்ஸர் அடித்து பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார். சேத்தன் ஷர்மாவின் அந்த கடைசி பந்து ஃபுல் டாஸ் ஆனது. அந்த சிக்சர் இன்றளவும் இந்திய கிரிக்கெட் பிரியர்களுக்கு வேதனையை அளிக்கிறது.

இப்போது டிவி சேனலின் ஸ்டிங் ஆபரேஷனில் சேத்தன் ஷர்மா சர்ச்சைக்குரிய விஷயங்களைக் கூறி தனது கிரிக்கெட்டுக்குப் பிந்தைய வாழ்க்கையின் இரண்டாவது ஃபுல் டாஸை வீசியுள்ளார். அதன் பிறகு பிசிசிஐயிலிருந்து அவர் விலகுவது உறுதியானது. விராட் கோலி-சௌரவ் கங்குலி சர்ச்சை, ரோஹித் ஷர்மா-ஹார்திக் பாண்டியாவின் கேப்டன்சி, வீரர்கள் ஊசி போட்டுக்கொள்வது போன்ற விஷயங்களும் அவரது பேச்சில் இடம்பெற்றுள்ளன.

ஸ்டிங் ஆபரேஷனில் சேத்தன் ஷர்மா என்ன சொன்னார்

சேத்தன் ஷர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹார்திக் பாண்டியா மற்றும் ரோஹித் ஷர்மா குறித்துப்பேசிய சேத்தன் ஷர்மா, பாண்டியா தனது வீட்டிற்கு தொடர்ந்து வந்து போவதாகவும், ரோஹித் ஷர்மா தன்னிடம் இடைவிடாமல் தொடர்ந்து பேசுவதாகவும் கூறினார்.

ஒரு செய்தி சேனலின் ஸ்டிங் ஆபரேஷனில் சேத்தன் ஷர்மா, அதிர்ச்சியூட்டும் விஷயங்களை ஒன்றன் பின் ஒன்றாக பேசியபோது விஷயம் சூடுபிடித்தது.

"அப்போதைய பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி காரணமாக தான் கேப்டன் பதவியை இழக்க நேரிட்டதாக விராட் கோலி உணர்ந்தார். தேர்வுக் குழுவின் வீடியோ கான்பரன்சில் ஒன்பது பேர் இருந்தனர்," என்று கோலி-கங்குலி சர்ச்சை தொடர்பாக அவர் கூறினார்.

"கேப்டன் பதவியை கைவிடும் முடிவு குறித்து மீண்டும் ஒருமுறை யோசியுங்கள் என்று சௌரவ் கங்குலி, விராட் கோலியிடம் கூறியிருந்தார். விராட் கோலி அதைக் கேட்டிருக்க மாட்டார் என்று நான் நினைக்கிறேன்."

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு முன் நடந்த செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி தேவையில்லாமல் இந்த விவகாரத்தை எழுப்பியதாக சேத்தன் ஷர்மா கூறினார்.

"நான் கேப்டன் பதவியை விட்டுவிட வேண்டும் என்று ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே என்னிடம் கூறப்பட்டது," என்று கோலி குறிப்பிட்டார்.

பாண்டியா தனது வீட்டிற்கு தொடர்ந்து வந்து போவதாகவும், ரோஹித் ஷர்மா தன்னிடம் தொடர்ந்து நிறைய நேரம் பேசுவதாகவும் ஹார்திக் பாண்டியா மற்றும் ரோஹித் ஷர்மா குறித்து சேத்தன் ஷர்மா பேசுவதை பார்க்க முடிகிறது.

ஸ்டிங் ஆபரேஷனின் போது சேத்தன் ஷர்மா, இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களை உடற்தகுதியுடன் வைத்துக் கொள்ள ஊசி போட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

பெரிய வீரர்களை ப்ரேக் என்ற பெயரில் வெளியில் உட்கார வைக்கிறார்கள் என்றும் சேத்தன் ஷர்மா ஸ்டிங் ஆபரேஷனில் கூறினார். புதிய வீரருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், பெரிய வீரருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பெரிய சலசலப்பு ஏற்பட்டது. பிசிசிஐ இந்த விஷயத்தை கவனித்து வந்தது. இறுதியாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டி வந்தது.

சேத்தன் ஷர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை

சேத்தன் ஷர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பஞ்சாபின் லூதியானாவில் பிறந்த சேத்தன் ஷர்மா 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 396 ரன்கள், 61 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

57 வயதான சேத்தன் ஷர்மா இந்தியாவின் நடுத்தர வேகப்பந்து வீச்சாளராக இருந்தார்.

பஞ்சாபின் லூதியானாவில் பிறந்த சேத்தன் ஷர்மா 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 396 ரன்கள் எடுத்து, 61 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

இந்தியாவுக்காக 65 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார். இதில் 456 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி, 67 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

மறைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் யஷ்பால் ஷர்மா இவரது தாய் மாமா ஆவார். யஷ்பால் ஷர்மா தேர்வுக் குழு உறுப்பினராக இருந்ததோடு மட்டுமல்லாமல், கபில் தேவ் தலைமையில் இங்கிலாந்தில் 1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

உயரம் குறைவான சேத்தன் ஷர்மா முழு ஆவேசத்துடன் வேகமாக பந்துவீசுவதில் பெயர் பெற்றவர். 1986 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு விதத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

1987 ஆம் ஆண்டு நாக்பூரில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது சேத்தன் ஷர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனையாகும்.

சேத்தன் சர்மா ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதமும் அடித்துள்ளார். 1989 ஆம் ஆண்டு MRF உலகத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தச் சாதனையை நிகழ்த்தினார். அந்த போட்டியில் அவர் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்தார்.

அவரது சதம் காரணமாக இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவின் ஜோடி பந்து வீச்சாளராகவும் சேத்தன் ஷர்மா அறியப்படுகிறார். சேத்தன் ஷர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை 1996-97ல் முடிந்தது. முதல்தர கிரிக்கெட்டில் 121 போட்டிகளில் 433 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 3714 ரன்களையும் அவர் எடுத்துள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சேத்தன் ஷர்மா தொலைக்காட்சியில் வர்ணனை செய்ய ஆரம்பித்தார். இது தவிர, 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஃபரிதாபாத் தொகுதியில் போட்டியிட்டார்.

ஒரு காலத்தில் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சிகளை அவர் வழங்கிவந்த அதே நியூஸ் சேனலின் ஸ்டிங் ஆபரேஷன் காரணமாக பிசிசிஐ தேர்வுக் குழுத் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பது ஒரு முரணான விஷயம்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்