டி20 பெண்கள் உலக கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

பட மூலாதாரம், Mike Hewitt/Getty
தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் டி20 பெண்கள் உலகக் கோப்பை பி பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 151 ரன் சேர்த்திருந்தது. பிறகு பேட்டுடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
42 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த இங்கிலாந்து ஆல் ரவுன்டர் நாட் சைவர் பிரன்ட் ஆட்ட நாயகியாக அறிவிக்கப்பட்டார். அவரது ஸ்கோரில் 5 பவுண்டரிகள் அடங்கும்.
இந்திய அணியில், துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா 41 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அவர் 7 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் விளாசியிருந்தார். இந்திய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 34 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
முன்னதாக இந்திய கேப்டன் ஹரமன்பிரீத் டாஸ் ஜெயித்து பௌலிங்கை தேர்வு செய்திருந்தார்.
இந்திய இன்னிங்ஸ் - ஏமாற்றிய கேப்டன்
இந்தியா பேட் செய்யத் தொடங்கிய உடனேயே, 4வது ஓவரின் கடைசி பந்தை வேகமாக அடிக்க முயன்ற ஷெஃபாலி வர்மா மிட் ஆன் திசையில் பிடிபட்டார். இங்கிலாந்து பௌலர் பெல் வீசிய பந்து அது. 11 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் ஷெஃபாலி.

பட மூலாதாரம், Getty Images
இதையடுத்து 10-வது ஓவரின் முதல் பந்தில் நம்பிக்கை நட்சத்திரம் ஜெமிமா ரோட்ரிக்யூஸ் 13 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அடுத்த ஓவரிலேயே இந்தியாவுக்கு பேரிடி காத்திருந்து. இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் வெறும் 4 ரன் எடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்திருந்தார். அது இந்திய அணியின் மூன்றாவது விக்கெட். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 63. இங்கிலாந்து பௌலர் சாரா கிளென் 4 ஓவர் வீசி, 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். லாரன் பெல், சோஃபி எக்லஸ்டோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.
இங்கிலாந்து இன்னிங்ஸ் - ஜொலித்த சைவர், அமி
இந்திய கேப்டன் பௌலிங்கை முதலில் தேர்வு செய்தது மிகச்சரி என்று தோன்றும்படி இங்கிலாந்தின் பேட்டிங் சொதப்பலாகத் தொடங்கியது. இந்திய அணியின் ரேணுகா முதல் ஓவரை வீச வந்தார். மூன்றாவது பந்திலேயே இங்கிலாந்து ஓப்பனர் டேனி வேட் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தமது அடுத்த இரண்டு ஓவரில் மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் ரேணுகா.
தமது இரண்டாவது ஓவரின் முதல் பந்திலேயே அவர், இங்கிலாந்தின் அலிஸ் கேப்சேவை பெவிலியனுக்கு அனுப்பிவைத்தார். தமது மூன்றாவது ஓவரின் நான்காவது பந்தில் இங்கிலாந்தின் மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்வுமன் சோஃபியா டங்க்ளேவையும் வீழ்த்தினார் ரேணுகா. முதல் 5 ஓவரில் இங்கிலாந்து 29 ரன்கள் மட்டுமே சேர்த்து மூன்று விக்கெட்டுகளைப் பறிகொடுத்து தடுமாறியது.

பட மூலாதாரம், Mike Hewitt/getty
இதன் பிறகு நிதானித்துக்கொண்ட இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் - நேட் சைவர் பிரன்ட் இணை கவனமாக விளையாடி விக்கெட்டைப் பாதுகாத்ததோடு வேகமாக ரன் குவிக்கவும் தொடங்கியது. 10 ஓவரில் இங்கிலாந்து 72 ரன்கள் சேர்த்தது. இந்த இணை 4வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தது. ஹீதர் நைட் 23 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து அவுட்டானார். ஆனால், நேட் சைவர் தன் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் இங்கிலாந்து 151 ரன்களை எடுத்தது. இந்தியாவின் ரேணுகா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷிகா பாண்டே தமது முதல் சர்வதேச விக்கெட்டை வீழ்த்தினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













