ரவீந்திர ஜடேஜா விக்கெட் திருவிழாவான இரண்டாவது டெஸ்ட் - ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வியது எப்படி?

ரவீந்திர ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

டெல்லியின் அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 2-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.

இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 115 ரன்கள் என்ற இலக்கை இந்தியா எட்டியது. இதன் மூலம் மூன்றாவது நாளிலேயே வெற்றிக் கனியை இந்தியா சுவைத்தது. இந்திய அணியில் புஜாரா அவுட் ஆகாமல் 31 ரன்களை எடுத்திருந்தார்.

முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்திய இந்தியப் பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா மொத்தம் 110 ரன்கள் விட்டுக்கொடுத்து, 10 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாவது நாளிலேயே ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து ஆட்ட நாயகனாக ஆனார்.

இந்த போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகளை எடுத்தது மட்டும் இல்லாமல் முதல் இன்னிங்ஸில் 26 ரன்களும் எடுத்திருந்தார் ரவீந்திர ஜடேஜா.

நாக்பூரில் நடந்த முதல் போட்டியிலும் ஜடேஜாவே ஆட்ட நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தமது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய புஜாரா வெற்றிக்கு வழிவகுக்கும் 31 ரன்களை எடுத்துள்ளார்.

இரண்டு போட்டிகளிலும் மோசமாக தோற்ற ஆஸ்திரேலியா

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்களை எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 113 ரன்களை எடுத்திருந்தது. எதிர்த்து விளையாடிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 262 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில், நான்கு விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களையும் எடுத்தது. இரண்டு நாட்கள் மீதமிருக்கும் நிலையில் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 177 ரன்களை எடுத்திருந்தது. எதிர்த்து ஆடிய இந்தியா 400 ரன்கள் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆஸ்திரேலியா குறைந்த ரன்களையே எடுத்தது. அதாவது வெறும் 91 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்திருந்தது. முதல் போட்டியின் வெற்றிக்கு ரவீந்திர ஜடேஜா பெரும் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி தர வரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா நம்பர் ஒன் வரிசையிலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. இருப்பினும் இந்த இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி பெரிதாக சோபிக்கவில்லை. அதேபோல முதல் போட்டி நடைபெற்ற நாக்பூர் ஆடுகளத்தின் பிட்ச் குறித்தும் சில ஆஸ்திரேலிய ஊடகங்கள் கேள்விகளை எழுப்பின. ஆஸ்திரேலியாவின் மூத்த கிரிக்கெட் பத்திரிகையாளர் ராபர்ட் கேடாக், நாக்பூர் பிட்ச் ஒரே மாதிரியாக இல்லை என்றும் இந்திய அணிக்கு ஏதுவாக பிட்ச் தயார் செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

இதற்கிடையில் இந்தியாவின் ஓபனிங் பேட்ஸ்மேன் கே எல் ராகுல் இந்த போட்டியிலும் சரியாக சோபிக்கவில்லை என அவரின் தேர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர். எளிதான ரன்களை இலக்காக கொண்டிருந்ததால், இரண்டாவது இன்னிங்சில் எந்த அழுத்தமும் இல்லாமல் ஒபனிங் பேட்ஸ்மேன்கள் கே எல் ராகுலும் ரோஹித் ஷர்மாவும் இலக்கை எட்டி விடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஒரே ரன்னில் கே எல் ராகுல் அவுட் ஆனார். அந்த சம்யத்தில் இந்தியா 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது,ஒரே ரன்னில் பெவிலியன் திரும்பியதும் சமூக வலைத்தளங்களில் மக்கள் ராகுலை கேலி செய்ய தொடங்கிவிட்டனர்.

பல திறமையான வீரர்களின் வாய்ப்பை கே எல் ராகுலின் தேர்வு தட்டிப் பறிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டில் எந்த ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனும் இவ்வளவு குறைந்த சராசரியுடன் இத்தனை டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்திருந்தார்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: