அஸ்வின் ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்த பந்துவீச்சில் திட்டமிட்டது எப்படி?

ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம், Getty Images

`ரவிச்சந்தரன் அஸ்வினுடன் விளையாடுவது என்பது சதுரங்கம் விளையாடுவதைப் போன்றது` டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுஷேன் கூறிய வார்த்தை இது.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் தங்களின் சிம்ம சொப்பனமாக ஆஸ்திரேலிய அணி கருதியது அஸ்வினைதான். ஆஸ்திரேலியா வீரர்கள் தங்களின் ஒவ்வொரு பேட்டியின்போதும் உச்சரித்த பெயரும் அஸ்வின்தான்.

முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் என மொத்தம் 8 விக்கெட்களை ரவிச்சந்திரன் அஸ்வின் கைப்பற்றினார்.

முதல் இன்னிங்ஸில் ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் ஆஸ்திரேலிய அணி சிக்கி வரிசையாக விக்கெட்டுகளை இழந்துகொண்டிருந்தது. அதில் அஸ்வினால் பெரியளவில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் இருந்தது. தனது முதல் விக்கெட்டையே பத்து ஓவர்கள் கடந்த பின்னர்தான் அஸ்வின் எடுத்தார். முதல் இன்னிங்கிஸில் ஜடேஜா 5 விக்கெட்களையும் அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர்களை வசமாகப் பந்தாடினார் அஸ்வின். அதில், அவர் ஐந்து விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

அஷ்வினை எதிர்கொள்வது கடினம். அவர் நிறைய வித்தியாசங்களை வெளிப்படுத்தும் திறன் கொண்ட ஒரு புத்திசாலித்தனமான பந்துவீச்சாளர், அவர் அவற்றை நன்றாகப் பயன்படுத்துகிறார் என்று இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்ரேலியாவின் மேட் ரென்ஷா கூறியிருந்தார்.

மேலும், இடது கை ஆட்டக்காரர்களுக்கு அஸ்வின் சிக்கலை ஏற்படுத்துவார். அவர் வீசும் பந்து சுழலும்பட்சத்தில் கேட்ச் ஆகும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை சுழலவில்லை என்றால் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க நேரிடலாம் என்றும் அவர் கணித்திருந்தார். அவரது கணிப்பு 2வது இன்னிங்ஸில் சரியாகவே இருந்தது.

பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் தவிர்த்து அஸ்வின் கைப்பற்றிய பிற நான்கு விக்கெட்களுமே (உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், மேட் ரென்ஷா, அலெக்ஸ் கேரி) இடது கை ஆட்டக்காரர்களுடையது. இதேபோல், 5 விக்கெட்களில் 4 விக்கெட்கள் எல்பிடபிள்யு முறையில் கிடைத்தது.

மேலும், சொந்த மண்ணில் அதிக முறை 5 விக்கெட்களை வீழ்த்தியவர்களின் பட்டியலில் இந்தியாவின் கும்ப்ளே சாதனையை (25 முறை) சமன் செய்துள்ள அஸ்வின், இந்தத் தொடரிலேயே கும்ப்ளே சாதனையை முறியடித்து ஹெராத் (26 முறை) சாதனையை சமன் செய்வாரா என்றும் இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த வரிசையில் 45 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முத்தையா முரளிதரன் முதல் இடத்தில் உள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முதல் நாள் டெஸ்ட் போட்டியில் அலெக்ஸ் கேரியின் விக்கெட்டை எடுத்த பிறகு சக வீரர்களோடு கொண்டாடும் ரவிச்சந்திரன் அஸ்வின்

வேகப்பந்துவீச்சாளர்கள் ஜோடியாக வேட்டையாடுவார்கள் எனக் கூறப்படுவது உண்டு. அதே வாக்கியத்தை நாம் இந்த டெஸ்ட் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பொருத்திப் பார்க்க முடியும். அந்த வகையில் அஸ்வினும் ஜடேஜாவும் கூட்டு சேர்ந்த ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை வேட்டையாடினார்கள்.

முதல் இன்னிங்ஸில் ஜடேஜா அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியபோது அவருக்கு உறுதுணையாக அஸ்வின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிறகு இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் அதிக விக்கெட்டுகளை வேட்டையாடியபோது ஜடேஜா உறுதுணையாக இருந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

"ஜட்டுவிடம்(ஜடேஜா) இருந்து பெரிய உதவி கிடைத்தது எனக் கூறுவதுகூட அதைக் குறைத்து மதிப்பிடுவதுதான். அவர் அபாரமான ஃபார்மில் உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளில், அவர் பேட்டிங்கும் சரி பந்துவீச்சும் சரி, களத்தில் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறார், அணிக்கு எவ்வளவு கூடுதல் மதிப்பாக இருந்தார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை," என்று டெஸ்ட் முடிந்த பிறகு பேசியபோது அஸ்வின் கூறினார்.

ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல் ஆகியோரின் பந்துவீச்சைப் பாராட்டிய அஸ்வின், அவர்கள் பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்டதாகக் கூறினார்.

ரவீந்திர ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

"அவரைப் போன்ற ஒரு பந்துவீச்சாளர் எனக்குக் கிடைத்ததற்கு நான் மிகவும் நன்றியோடு இருக்கவேண்டும். அக்ஷரும் சாதாரண பந்துவீச்சாளர் இல்லை. எங்களிடம் மிகச் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அதோடு, எங்களால் பேட்டிங்கும் செய்யமுடியும்," என்று அஸ்வின் கூறினார்.

போட்டிக்கு முன்னும் பின்னும், ஆஸ்திரேலிய வல்லுநர்கள் ஆடுகளத்தின் பேட்டிங் கிரீஸை சுற்றியுள்ள கரடுமுரடான பகுதிகள் பந்து மீது எப்படி ஆதிக்கம் செலுத்தும் என்று விவாதித்தார்கள். ஆனால், அஸ்வின், ஜடேஜா இருவரும் அந்தக் கரடுமுரடான பகுதிக்குப் பதிலாக ஆடுகளத்தின் மையப்பகுதியில் பந்துகளை பிட்ச் செய்து, ஆட்டத்தைத் தங்கள் வசப்படுத்தி விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் 37 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்து 31வது முறையாக ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். அலெக்ஸ் கேரியின் விக்கெட் மூலம் அவர் டெஸ்ட் போட்டிகளில் 450வது விக்கெட்டை கைப்பற்றினார்.

அஸ்வினுடைய சுழற்பந்தின் கலைத்திறன் ஆஸ்திரேலியாவின் திறனுக்கு அப்பாற்பட்டது. அஸ்வின் பந்துவீச வரும்போது அவரிடம் ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கு ஒவ்வொரு திட்டம் இருப்பதைப் போல் அவரது பந்துவீச்சு இருக்கும்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மூன்றாவது நாள் டெஸ்ட் போட்டியில் பந்து வீசும் அஸ்வின்

இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே அஸ்வின் விடுக்கக்கூடிய அச்சுறுத்தல் குறித்து ஆஸ்திரேலியா எச்சரிக்கையாக இருந்தது. அதனால்தான் அவரைப் போன்ற பந்துவீச்சாளரைக் கொண்டே பயிற்சில் ஆஸி வீரர்கள் ஈடுபட்டனர்.

டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி, அஸ்வினை போன்றே பந்துவீசக்கூடிய 21வயதான மகேஷ் பித்தியா என்னும் பந்துவீச்சாளரைக் கொண்டு வலை பயிற்சியில் ஈடுபட்டார்கள். அப்போது அதை அவரது ரசிகர்கள் 'அஸ்வின் என்ற சுழற்பந்து மந்திரவாதியை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் தயார் ஆவதாக' குறிப்பிட்டார்கள்.

இருப்பினும், இது எதுவும் அந்த அணிக்குப் பலனளிக்கவில்லை. 5 நாட்கள் நடைபெறவேண்டிய டெஸ்ட் போட்டி மூன்று நாட்களிலேயே முடிவுக்கு வந்தது. அஸ்வின், ரவிந்திர ஜடேஜா ஆகியோரின் சுழலில் சிக்கிய ஆஸ்திரெலிய அணி முறையே முதல் இன்னிங்கிஸில் 177 ரன்கள், இரண்டாவது இன்னிங்கிஸில் 99 ரன்கள் எடுத்து முதல் டெஸ்டிலேயே இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்தது.

ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அஸ்வின் வீசிய பந்தை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி

ஆஸ்திரேலிய அணியில் இருந்த பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் அஸ்வினுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு இல்லை என்றே தோன்றியது. அவரது 27.5 ஓவர்களில், 79 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார், இதன் மூலம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஒருபோதும் தனது பிடியை விட்டு நழுவிவிடாமல் இருப்பதை உறுதி செய்தார்.

ஆட்டம் முடிந்த பிறகு பேசிய அஸ்வின், தனது பேட்ஸ்மேன்களை டிரைவ் ஷாட் ஆடுவதற்கு ஈர்த்து, அவர்களைத் தவறுகள் செய்யத் தூண்டுவதே தனது திட்டமாக இருந்தது எனக் கூறினார்.

"இந்த மைதானத்தில் விக்கெட் எடுப்பது மிகவும் தாமதமாகக்கூடும். மற்ற இடங்களைப் போல் இங்கு ஷார்ட் லெக் அல்லது சிறு வாய்ப்பில் விக்கெட்டுகளை எடுப்பது சிரமம். இங்கு விக்கெட்டுகளை எடுப்பதற்கு பேட்ஸ்மேன்களை இறங்கி டிரைவ் செய்ய வைக்க வேண்டும். ஆகவே ஒரு பந்தில் அவர்களுக்கு ரன் கொடுப்பதைப் போல் கொடுத்து, அவர்களை ஷாட் அடிக்கத் தூண்டி விக்கெட்டை எடுக்கவேண்டும்," எனக் கூறினார்.

அஸ்வின் பந்துவீசும்போது, அதை ஒரு சதுரங்க ஆட்டம்போலத் திட்டமிட்டுக் காய் நகர்த்துவார் எனக் கூறிய லபுஷேனின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: