இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: அஸ்வின், ஜடேஜாவின் 'மந்திரச் சுழலில் சிக்கி' வீழ்ந்த ஆஸ்திரேலியா

இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம், Getty Images

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்றது. அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சு இந்திய அணியை இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியதில் இருந்தே வெற்றிப்பாதைக்கு கைப்பிடித்து அழைத்துச் சென்றதைப் போல் இருந்தது.

அஸ்வின் அதிரடியாக வீசிய ஓவர்களை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் திக்குமுக்காடித்தான் போனார்கள் எனச் சொல்வது மிகையில்லை. அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டுகளும் அவரது பந்தை எதிர்கொள்ள முடியாமல் வியர்வையைத் துடைத்துக்கொண்டு நின்ற வீரர்களும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களை குவித்தது. இதன்மூலம் 233 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி இருந்தது.

மூன்றாவது நாளின் தொடக்கமே இந்திய அணிக்குச் சிறப்பாக அமைந்தது.

ஜடேஜா, அக்ஷர் கூட்டணியில் ஆட்டம் தொடங்கிய நிலையில், 70 ரன்களை எடுத்து ஜடேஜா அவுட் ஆனார். அதற்கு அடுத்து வந்த ஷமி 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என்று அதிரடியாக விளையாடினார். முகமது ஷமி 47 பந்துகளில் 37 ரன்களை குவித்த பிறகு கேட்ச் மூலம் அவுட்டானார்.

அக்ஷர் பட்டேல், முகமது ஷமி ஆகியோர் கூட்டணியில் 52 ரன்கள் எடுத்தனர். களத்தில் நீண்ட நேரத்திற்கு நின்று விளையாடிய அக்ஷர் பட்டேல், பேட் கம்மின்ஸ் போட்ட பந்தில் போல்ட் அவுட் ஆனார்.

இருப்பினும், சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய அக்ஷர் 174 பந்துகளில் 10 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என்று 84 ரன்களை எடுத்தார்.

மூன்றாவது நாளில் முடிவுக்கு வந்த முதல் இன்னிங்ஸின் இறுதியில் இந்திய அணி 139.3 ஓவர்களில் 400 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா, ஆஸ்திரேலிய அணியைவிட 223 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

டாட் மர்ஃபி 7 விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் நேதன் லயன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம், Getty Images

இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கமே அஸ்வினின் பந்துவீச்சில், கோலி கேட்சில் இரண்டாவது ஓவரின்போது உஸ்மான் கவாஜா முதலில் அவுட் ஆனார்.

அஸ்வின் பந்துவீச்சில் மார்னஸ் லபுஷேன், டேவிட் வார்னர் கூட்டணி விளையாடிக் கொண்டிருந்தது. அஸ்வினின் பந்துவீச்சில் டேவிட் வார்னர் அவுட் ஆகியிருக்க வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டது.

ஆனால், விராட் கோலி கேட்சை தவறவிட்டார். அஸ்வினுக்கு அது அதிர்ச்சியை ஏற்படுத்தியது அவரது முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது.

கேட்சை நழுவவிட்ட கோலி, அஸ்வினின் அதிர்ச்சி

விராட் கோலி மிகவும் எளிமையான ஒரு கேட்சை நழுவவிடுவார் என்று அஸ்வின் எதிர்பார்க்கவில்லை. பந்து கோலியின் உள்ளங்கையில் பட்டு வெளியேறியதால் வார்னர் தப்பித்தார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம், Getty Images

முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 16வது ஓவரின் முதல் பந்தை ஆடியபோதும் இது நடந்தது. அக்ஷர் பட்டேல் பந்துவீச்சில், சிக்சர் அடிக்க ஸ்டீவ் ஸ்மித் முயன்றார். அதற்குப் பதிலாக, அவரது பேட்டில் உரசிக்கொண்டு பந்து கோலியை நோக்கிச் சென்றது. ஆனால், அதை கோலி தவறவிட்டதால் ஸ்மித் நிம்மதிப் பெருமூச்சு விடமுடிந்தது.

இதேபோல், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் பேட்டிங் செய்யும்போதும் ஜடேஜாவின் பந்துவீச்சில் நடந்தது. ஆனால், கோலி தாமதமாகச் செயல்பட்டதால் பந்தைத் தவறவிட்டார். அந்த நேரத்தில் அது குறித்து விவரித்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய வர்ணனையாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான மார்க் வாக், "கோலியின் ஃபீல்டிங் நிலை தவறாக இருப்பதாகவும் விரைவாக நகர்வதற்கு கால்கள் மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டும்" என்றும் கூறினார்.

அதேபோல் டேவிட் வார்னரின் கேட்சையும் தவறவிட்ட நிலையில், மார்க் வாக், கோலி என்ன தவறு செய்தார் என்பது குறித்த தனது நுண்ணறிவை வழங்கினார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம், Getty Images

"கோலி தனது நிலையில் மிகவும் உயர்ந்து நின்றிருந்தார். அவர் கொஞ்சம் தாழ்வாக நின்றிருக்க வேண்டும். கோலி நின்றிருந்த நிலை பந்தை அவர் எதிர்பார்க்காததைப் போல் இருந்தது," என்று அவர் குறிப்பிட்டார்.

அதை ரீப்ளேவில் காட்டியபடி, "முன்னாள் இந்திய கேப்டனின் மேல்பகுதி உடல் மிகவும் நிமிர்ந்து இருந்தது, அவரது கைகள் முழங்கால்களுக்கு மேலே இருந்தன. இந்த நிலை, மிகவும் கூர்மையான ஒரு வாய்ப்புக்கு விரைந்து செயலாற்றுவதைச் சிரமமாக்குகிறது," எனத் தெரிவித்தார்.

ஸ்லிப்பில் நிற்கும்போது, நிமிர்ந்திருக்கும் ஒரு வீரர் வேகமாகக் கீழே தாழ்ந்து செயல்படுவதைவிட, உயரமான கேட்சுக்கு உடனடியாக மேலேழுந்து செயல்படுவது எளிது என்று நிபுணர்கள் கூறுகின்றன. ஆனால், கோலி நின்றிருந்த நிலை இந்த முறை அதற்கு ஏற்றாற்போல் இல்லை என்று கூறினார் மார்க் வாக்.

அஸ்வின் பந்துவீச்சில் தடுமாறிய டேவிட் வார்னர்

அஸ்வின் பந்துவீச்சில் ஒவ்வொரு பந்து வீசப்படும்போதும் டேவிட் வார்னர் மிகவும் தடுமாறினார். அவர் அஸ்வினின் ஒவ்வொரு பந்திலும் அவுட் ஆகாமல் தப்பிப்பதே போராட்டமாக இருந்ததைப் போல் தெரிந்தது.

இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அஸ்வின் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறும் டேவிட் வார்னர்

இதற்கிடையே 11வது ஓவரில் ஜடேஜா லபுஷேனுக்கு விடை கொடுத்தார். இரண்டாவது முறையாக மீண்டும் ஜடேஜாவின் கைகளாலேயே லபுஷேனின் விக்கெட் எடுக்கப்பட்டது. டேவிட் வார்னர் நீண்ட நேரம் போராடியபோதும் அவர் அஸ்வினின் பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாமல் அவுட்டானார்.

டேவிட் வார்னரை பொறுத்தவரை அஸ்வின் பந்துவீச்சில் அவர் பெரியளவில் ரன் எடுத்ததில்லை. கடந்த காலங்களில், ஸ்டம்புக்கு மேலேயும் அதைச் சுற்றியும் பந்துவீசி அஸ்வின் அவருக்கு போக்கு காட்டியுள்ளார். இந்த முறையும் சிரித்துக்கொண்டே, 14வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளுக்கு பந்தைத் தட்டிவிட்ட வார்னரின் விக்கெட்டை எடுத்தார்.

வார்னரை தொடர்ந்து மேட் ரென்ஷாவின் விக்கெட்டையும் அஸ்வின் வீழ்த்தினார். குறிப்பாக இடது கை பேட்ஸ்மேன்களை மைதானத்தில் இருந்து வெளியேற்றும் பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டு அவர் செயல்படுவதைப் போல் இருந்தது.

தனது ஐந்தாவது விக்கெட்டாக அஸ்வின் அலெக்ஸ் கேரியை வீழ்த்தினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பேட் கம்மின்ஸை ஒரே ரன்னில் ஜடேஜா கேஎஸ் பரத்தின் கேட்ச் மூலம் அவுட்டானார். விக்கெட் எடுக்கும் பவுலர்களின் வரிசையில் இவர்களைத் தொடர்ந்து அக்ஷரும் டாட் மர்ஃபியை இரண்டே ரன்களில் அவுட்டாக்கி இணைந்துகொள்ள, அவரைத் தொடர்ந்து முகமது ஷமியும் நேதன் லயனை வீழ்த்தி அந்த வரிசையில் இணைந்துகொண்டார்.

அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும் அக்ஷர் பட்டேல், முகமது ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இறுதியாக ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தியதன் மூலம் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, வெற்றி பெற்றது.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்