இந்தியா Vs ஆஸ்திரேலியா: வகுப்பெடுத்த ரோஹித் ஷர்மா, தலைவலியான ஜடேஜா; சோர்ந்தது ஆஸி

ஜடேஜா

பட மூலாதாரம், BCCI

    • எழுதியவர், விவேக் ஆனந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர்களின் கச்சிதமான திட்டத்தை எப்படி அணுகுவது என்பதில் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறியுள்ளனர். ஆம். ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் மட்டுமல்ல, பந்துவீச்சில் சுழற்பந்து மும்மூர்த்திகளை எதிர்கொள்வதில் தத்தளித்துள்ளது. அதுவே இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

நாக்பூர் டெஸ்ட்டை பொறுத்தவரை முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது ஆஸ்திரேலியா. ஆனால் அதன் பின்னர் வெறும் 15 ரன்களில் அந்த அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்து விட்டது.

நாக்பூர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 144 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. ஜடேஜா மற்றும் அக்சர் படேல் அபாரமாக அரை சதம் அடித்து விளாசினார்.

வர்ணனையாளரின் பார்வையை மாற்றிய ஆட்டம்

இந்தியா விளையாடும் போதும் கிட்டத்தட்ட இதே நிலை தான். 168 ரன்களுக்கு இந்தியா ஐந்து விக்கெட்டுகளை இழந்து விட்டது.

ரவீந்திர ஜடேஜா

பட மூலாதாரம், ICC

அப்போது அங்கிருந்து 75 ரன்கள் கூடுதலாக எடுத்தாலே பெரிய விஷயம்., அது இந்திய அணிக்கு பெரும் பலமாக அமையும். அதே சமயம் 'ஆஸ்திரேலியா உத்வேகத்துடன் ஆடி 30 - 40 ரன்களில் சுருட்டி விட்டால் அந்த அணியின் ஆதிக்கம் ஓங்க ஒரு நல் வாய்ப்பு' என வர்ணனையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் இந்திய அணியோ இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 144 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்னமும் மூன்று விக்கெட்டுகள் கைவசம் உள்ளன. களத்தில் உள்ள இரு வீரர்களும் அரை சதத்துடன் பேட்டிங்கை தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சிறு புள்ளியில் இருந்து ஆட்டம் மெல்ல மெல்ல இந்தியா வசம் நகர்ந்து கொண்டிருக்க காரண கர்த்தா யார் எனக் கேட்டால் ரவீந்திர ஜடேஜாவையுயம் ரோகித் ஷர்மாவையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

ஆம், ஐந்தாம் விக்கெட்டுக்கு பிறகு ஜோடி சேர்ந்த ரோகித் - ஜடேஜா கூட்டணி ஆஸ்திரேலிய அணியின் திட்டத்தை தவிடு பொடியாக்கியது.

ஏற்கெனவே பந்து வீச்சில் ஸ்மித்தின் விக்கெட்டை அற்புதமாக வீழ்த்தியது மட்டுமின்றி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த ஜடேஜா, இன்று பொறுப்புடன் பேட்டிங்கிலும் அசத்தி அரை சதம் கண்டார்.

ரவிந்திர ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

முன்னதாக இந்திய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் ஷர்மா அபாரமாக விளையாடி சதமடித்தார். இந்த பிட்சில் எப்படி பேட்டிங் செய்வது என முழுமையாக சுதாரித்து ஆடுவதற்கு முன்னரே பல பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை பறிகொடுத்திருந்தார்கள். இதில் ஆஸ்திரேலிய வீரர்கள், இந்திய வீரர்கள் என பேதம் இருக்கவில்லை.

இத்தகைய சூழலில் தான் ரோகித் ஷர்மா எப்படி பேட்டிங் செய்வது என வகுப்பெடுக்கும் விதமாக தற்காப்பு ஆட்டத்திலும் சரி, அடிக்க வேண்டிய பந்துகளை பௌண்டரிக்கு விரட்டுவதிலும் சரி திறம்பட செயல்பட்டார்.

நேற்றைய தினம் அரை சதம் கண்டவர் இன்றைய தினம் சதத்தை கடந்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஒன்பதாவது சதமாகும்.

நேற்றைய தினம் ராகுல் விக்கெட்டை மட்டும் இழந்திருந்த நிலையில் இன்று அஷ்வினும் ரோகித் ஷர்மாவும் இன்னிங்க்ஸை தொடர்ந்தனர்.

ஒருமுனையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரும் கேப்டனுமான கம்மின்சும், மறுமுனையில் அனுபவமிக்க நேதன் லியனும் மாறிமாறி பந்துவீசினர். முதல் சில ஓவர்களில் பொறுமையாக இருந்த அஷ்வின் - ரோகித் ஜோடி பின்னர் அதிரடி காட்டியது.

கம்மின்ஸ் ஓவரில் ரோகித் ஒரு சிக்ஸர் அடிக்க, நேதன் லியன் வீசிய அடுத்த ஓவரிலேயே அஷ்வின் ஒரு சிக்ஸர் வைத்தார்.

இதையடுத்து போலண்ட், முர்ஃபி கூட்டணி பந்துவீச வந்தது, அதற்கு ஆஸ்திரேலியாவுக்கு ஒரு பலன் கிடைத்தது. அஷ்வின் 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

ரவிந்திர ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

அதன்பின்னர் முர்ஃபி ராஜ்ஜியம் தான். அறிமுக வீரரான முர்ஃபி அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்களான புஜாரா மற்றும் விராட் கோலியையும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தார்.

இந்தியாவின் முதல் நான்கு விக்கெட்டுகளையும் அறிமுக போட்டியிலேயே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பந்துவீச்சாளர் கைப்பற்றுவது இதுவே மூன்றாவது முறை. 64 ஆண்டுகால நெடிய இடைவெளிக்கு பிறகு முர்ஃபி இந்த சாதனையை செய்திருக்கிறார்.

கைகொடுக்காத சூரியகுமார்

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தனி ஆவர்த்தனம் காட்டி, ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட சூரியகுமார் யாதவ் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கினார். பௌண்டரி அடித்து தனது டெஸ்ட் கணக்கை தொடங்கிய சூரியகுமார் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. நேதன் லியன் பந்தில் ஏமாந்து வெறும் 8 ரன்களில் போல்டானார்.

இந்தியாவின் விக்கெட்டுகள் ஒரு முனையில் சரிய, முர்ஃபி பந்தில் பௌண்டரி அடித்து ரோஹித் ஷர்மா தனது சதத்தை பூர்த்தி செய்தார்.

இதன்மூலம் கேப்டனாக மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையை பெற்றார் ரோஹித்,.

தேநீர் இடைவெளிக்கு பிறகு இன்றைய நாளின் மூன்றாவது செஷன் ஆட்டம் தொடங்கியபோது, கம்மின்ஸ் இரண்டாவது புதிய பந்தை எடுத்தார், அவரே பந்து வீசவும் செய்தார்.

முதல் பந்தே நோ பால் ஆனது. அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ரோஹித் கொடுத்த கேட்சை ஸ்மித் தவறவிட்டார்.

ஆனால் அடுத்த பந்திலேயே கம்மின்ஸ் ரோஹித்தை வெளியேற்றினார். ஆஃப் ஸ்டம்ப் பறந்தது.

212 பந்துகளில் 15 பௌண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 120 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரோஹித் போல்ட் ஆகி வெளியேறினார்.

ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

அதைத்தொடர்ந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பரத்தை எட்டு ரன்கள் வெளியேற்றினார் முர்ஃபி. இது முர்ஃபியின் ஐந்தாவது விக்கெட். இதன்மூலம் 'அறிமுக போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள்' பட்டியலில் இணைந்தார்.

ரோஹித், பரத் விக்கெட் விழுந்தபிறகும் ஆஸ்திரேலிய வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விடமுடியவில்லை. ஏனெனில் அதன்பின்னர் தான் ஜடேஜா மற்றும் அக்ஷர் படேல் அரை சதமடித்தனர்.

இரண்டாம் நாள் முடிவில் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி.

சோர்வடைந்த ஆஸி அணி

கடைசியில் சோர்வுடன் ஆஸ்திரேலிய வீரர்கள் பெவிலியன் நோக்கி நடந்தனர்.

நாளைய நாள் ஆட்டம் இந்த டெஸ்ட் போட்டியின் போக்கை முழுமையாக தீர்மானிக்கும் நாளாக அமையக்கூடும்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்