ஜடேஜா, அஸ்வின் மாயாஜாலப் பந்துவீச்சில் 177 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா - டெஸ்ட் போட்டியில் இந்தியா அதிரடி

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உதிர்ந்து விழும் ஆஸ்திரேலியா விக்கெட்டுகள்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 177 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 7 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச களம் கண்ட ரவீந்திர ஜடேஜா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியா வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் தொடங்கியுள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக இருபது ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசத்தி வரும் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்டில் அறிமுகமானார். சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் உள்ள ரிஷப் பந்துக்குப் பதிலாக, அறிமுக வீரராக விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் களம் கண்டுள்ளார்.

கால் மூட்டில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்ட ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜ 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அணியில் இடம் பிடித்தார். இந்திய அணி 3 சுழற் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. சுப்மான் கில், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு அணியில் இடம் தரப்படவில்லை.

ஆஸ்திரேலியா சார்பில் 465-வது சர்வதேச டெஸ்ட் வீரராக 22 வயதே நிரம்பிய ஆஃப் ஸ்பின்னரான டாட் மர்ஃபி அறிமுகமானார். அவருடன் மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான நாதன் லயனும் அந்த அணியில் இடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி கடந்த 35 ஆண்டுகளில் 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் களம் இறங்கியிருப்பது இதுவே முதன் முறையாகும்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், பேட்டிங்கை தேர்வுசெய்தார். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர்.

அஸ்வின்

பட மூலாதாரம், Getty Images

கவாஜா ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் முகமது சிராஜின் வேகத்தில் ஆட்டமிழந்தார். அதிரடி வீரரான டேவிட் வார்னர், முகமது ஷமியின் பந்திவீச்சில் போல்டாகி வெளியேறினார்.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இரு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியை ஸ்மித்தும், லபுஷேனும் நிதானமாக ஆடி சரிவில் இருந்து மீட்டனர். உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 32 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. லபுஷேன் 47 ரன்களுடனும், ஸ்மித் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆனால், உணவு இடைவேளைக்குப் பின்னர் ஆட்டம் இந்தியாவின் பக்கம் மீண்டும் திரும்பியது. 6 மாதங்களுக்குப் பின்னர் சர்வதேச போட்டியில் ஆடும் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தனது பந்துவீச்சில் முத்திரை பதித்தார். நிலைத்து ஆடிய லபுஷேனையும், அடுத்து வந்த மேட் ரென்ஷாவையும் அடுத்தடுத்த பந்துகளில் ஜடேஜா காலி செய்தார். அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட லபுஷேனை 49 ரன்களிலும், ரென்ஷாவை ரன் ஏதும் எடுக்காத நிலையிலும் அவர் வெளியேற்றினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images

சிறிது நேரத்தில், ஸ்டீவன் ஸ்மித்தையும் 37 ரன்களில் ஜடேஜா வெளியேற்ற ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசை தடம் புரண்டது. ஆஸ்திரேலிய அணி 150 ரன்களை எட்டுவதற்குள்ளாக 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரே - பீட்டர் ஹென்ஸ்கோம்ப் ஜோடி சரிவை தடுத்து நிறுத்தி, ஆஸ்திரேலிய அணியை தூக்கி நிறுத்த போராடினர். அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை துரிதமாக உயர்த்த முயற்சித்த அலெக்ஸ் கேரேவை 36 ரன்களில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கிளீன் போல்டாக்கினார். அப்போது ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களாக இருந்தது.

இதையடுத்து ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்சை, அஸ்வின் அவுட்டாக்கினார். கம்மின்ஸ் வெறும் 6 ரன்களே எடுத்திருந்தார். அடுத்து வந்த அறிமுக வீரர் டாட் மர்ஃபி ரன் ஏதும் எடுக்காத நிலையில், ஜடேஜா பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து தடுமாறியது ஆஸ்திரேலியா.

மேலும் 3 ரன்களை சேர்ப்பதற்குள் ஆஸ்திரேலியா எஞ்சிய இரண்டு விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 5, அஸ்வின் 3, முகமது சமி 1, முகமது சிராஜ் 1, விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணியை 200 ரன்களுக்குள் சுருட்டியதால், முதல் டெஸ்டில் இந்திய அணியின் கை ஓங்கியுள்ளது.

அலெக்ஸ் கேரே விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட், 3,000 ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகியுள்ளார். ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே, இங்கிலாந்து வீரர் ஸ்டூவரட் பிராட் ஆகியோர் ஏற்கனவே இந்த மைல்கல்லை கடந்துள்ளனர்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: