CWG 2022: ஊக்கமருந்து சோதனையில் தோல்வி - தனலட்சுமி, ஐஸ்வர்யா பாபு இடைநீக்கம்

தடகள வீராங்கனை

ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால், தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை எஸ். தனலட்சுமி எதிர்வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். இதேபோல, தேசிய அளவில் சாதனை படைத்த கர்நாடகாவைச் சேர்ந்த மும்முறை தாண்டுதல் வீராங்கனை ஐஸ்வர்யா பாபுவும் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தை செலுத்திக் கொண்டது பரிசோதனை முடிவில் கண்டறியப்பட்டுள்ளதால் அவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க 36 பேர் கொண்ட இந்திய தடகள அணியில் 24 வயதான தனலட்சுமி சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில். சர்வதேச தடகள ஒருமைப்பாட்டு பிரிவு (AIU) நடத்திய ஊக்கமருந்து சோதனையில் தடை செய்யப்பட்ட ஸ்டீராய்ட் ஊக்க மருந்தை எடுத்துக் கொண்டதாக தெரிய வந்துள்ளது. தனலட்சுமி 100மீ அணியிலும், 4x100 மீட்டர் தொடர் ஓட்ட அணியிலும் டூட்டி சந்த், ஹிமா தாஸ் மற்றும் ஸ்ரபானி நந்தா ஆகியோருடன் இடம்பெற்றிருந்தார்.

ஜூன் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சென்னையில் நடந்த தேசிய மாநிலங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டியின் போது எடுக்கப்பட்ட ஐஸ்வர்யாவின் மாதிரிகளில் செலக்டிவ் ஆன்ட்ரோஜன் ரிசெப்டர் மாடுலேட்டர் (SARM) எனப்படும் Ostarine என்ற வகை மருந்தும், தனலட்சுமியின் ஊக்க மருந்து பரிசோதனையில், அவர் அனபோலிக் ஸ்டீராய்டுகளை பயன்படுத்தியதும் தெரிய வந்தது.

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் தனலட்சுமிக்கு இரு முறை சோதனைகள் நடத்தப்பட்டன - ஒன்று, உலக தடகளத்தின் தடகள ஒருமைப்பாடு பிரிவு (AIU) மூலமும் மற்றொன்று தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமை (NADA) மூலமும் நடத்தப்பட்டது.

ஏஐயு அமைப்பு, முதல் மாதிரியை துருக்கியில் சேகரித்தது. அங்கு அவர் ஏப்ரல்-மே மாதங்களில் இந்திய அணியின் அங்கமாக பயிற்சி பெற்றார். இரண்டாவது மாதிரி அவர் திருவனந்தபுரத்தில் இருந்தபோது எடுக்கப்பட்டது,

இந்த இரண்டு பரிசோதனைகளிலும் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டதால் அவருக்கு எதிராக இடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எண்ணிக்கையை குறைத்த ஒலிம்பிக் சங்கம்

தனலட்சுமி இந்திய அணியில் இருந்து விலக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக எம்.பி.ஜில்னா என்ற தடகள வீராங்கனை 4x100 மீட்டர் தொடர் ஓட்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, தொடர் ஓட்ட அணியில் டூட்டி சந்த், ஹிமா தாஸ், ஸ்ராபானி நந்தா, என்.எஸ். சிமி, ஜில்னா ஆகியோருடன் தனலட்சுமி இந்திய அணி சார்பில் பங்கேற்பார்கள் என்று இந்திய தடகள கூட்டணைப்பு தெரிவித்திருந்தது. ஆனால், 37 பேர் கொண்ட அணியின் எண்ணிக்கையை 36 ஆக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவுறுத்தியது.

இதையடுத்து பட்டியலில் இருந்த ஜில்னாவின் பெயர் விலக்கிக் கொள்ளப்பட்டது. இப்போது தனலட்சுமி மீதான நடவடிக்கையைத் தொடர்ந்து மீண்டும் அணிக்குள் வந்துள்ளார் ஜில்னா.

ஊக்க மருந்து

பட மூலாதாரம், Getty Images

தனலக்ஷ்மி, அமெரிக்காவின் யூஜினில் நடந்து வரும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார், ஆனால் விசா பிரச்னைகள் காரணமாக, அவரால் அதில் பங்கேற்கச் செல்ல முடியவில்லை. இதேவேளை கடந்த ஜூன் மாதம் துருக்கியில் உள்ள எர்சுரம் என்ற இடத்தில் உள்ள அட்டாடர்க் பல்கலைக்கழக மைதானத்தில் நடந்த சர்வதேச ஸ்பிரிண்ட் மற்றும் ரிலே கோப்பையில் 200 மீ ஓட்டத்தில் ஓடி வெற்றி பெற்றார் தனலட்சுமி.

கடந்த ஜூன் 26ஆம் தேதி கஜக்ஸ்தானின் அல்மாட்டியில் நடந்த கோசனோஃப் நினைவு தடகள போட்டியில் 200 மீட்டர் தங்கம் வென்ற தனலட்சுமி குறிப்பிட்ட இலக்கை 22.89 விநாடிகளில் பதிவு செய்தார். 24 வயதான ஐஸ்வர்யாவின் இரண்டு ஊக்க மருந்து மாதிரிகள் ஜூன் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் சென்னையில் நடந்த மாநிலங்களுக்கு இடையேயான தடகள சாம்பியன்ஷிப்பின் போது 'நாடா' எனப்படும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டது.

ஜூன் 13ஆம் தேதி நடந்த டிரிப்பிள் ஜம்ப் போட்டியில் 14.14 மீட்டர் தூரத்தை எட்டி தேசிய அளவிலான சாதனையை படைத்தார் ஐஸ்வர்யா. மறுநாள் நீளம் தாண்டுதல் விளையாட்டில் அவர் தங்கத்தை வென்றார். இந்த நிலையில், மாநிலங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டியின் போது எடுக்கப்பட்ட ஐஸ்வர்யா பாபுவின் மாதிரிகள் பரிசோதனை முடிவில் அவர் ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் (ஜூன் 10-14) ஈடற்ற நட்சத்திரமாக உருவெடுக்க ஐஸ்வர்யா, 14.14 மீட்டர் தூரத்தை தாண்டி டிரிபிள் ஜம்ப் தேசிய சாதனையை முறியடித்தார். சென்னை போட்டியின் போது நீளம் தாண்டுதல் தகுதிச் சுற்றில் 6.73 மீட்டரை அவர் எட்டினார். இந்திய முன்னாள் தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜுக்கு 6.83 மீ எட்டி சாதனை படைத்தார். அவருக்குப் பிறகு இந்திய வீராங்கனை ஒருவர் நீளம் தாண்டுதலில் செய்த இரண்டாவது சிறந்த சாதனை ஆக ஐஸ்வர்யாவின் சாதனை கருதப்பட்டு வருகிறது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :