IND Vs PAK: மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள போகும் இந்திய அணியின் பலம் என்ன?

mithali raj

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆதேஷ் குமார் குப்த்
    • பதவி, விளையாட்டுத் துறைச் செய்தியாளர், பிபிசி ஹிந்தி சேவைக்காக

நியூசிலாந்தில் மார்ச் 4ஆம் தேதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின.

ஞாயிற்றுக்கிழமை காலை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இந்தத் தொடரில், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து தவிர ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.

இது 12வது பெண்கள் உலகக் கோப்பை. இந்த உலகக் கோப்பை கடந்த ஆண்டு பிப்ரவரி 6 முதல் மார்ச் 7 வரை நடைபெற இருந்தது, ஆனால் கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

போட்டி விவரங்கள்

இந்தப் பெண்கள் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கு பெறும் எட்டு அணிகள் இறுதிப் போட்டி வரை சுமார் 31 போட்டிகளில் விளையாடும். தொடக்கத்தில் அனைத்து அணிகளும் ஏழு சுற்றுகளில் ஒன்றையொன்று சந்திக்கும். முதல் சுற்று மார்ச் 4ம் தேதியும், 2வது சுற்று மார்ச் 7ம் தேதியும் தொடங்குகின்றன. இந்திய மகளிர் அணி மார்ச் 10ம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

மூன்றாவது சுற்று மார்ச் 11 ஆம் தேதி தொடங்கும். இந்தியப் பெண்கள் அணி மார்ச் 12 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறது.

நான்காவது சுற்றில் இந்திய அணி மார்ச் 16-ம் தேதி இங்கிலாந்தையும், ஐந்தாவது சுற்றில் மார்ச் 19-ம் தேதி ஆஸ்திரேலியாவையும், மார்ச் 22-ம் தேதி ஆறாவது சுற்றில் வங்கதேசத்தையும், மார்ச் 27-ம் தேதி ஏழாவது சுற்றில் தென்னாப்பிரிக்காவையும் எதிர்கொள்கிறது.

இதைத் தொடர்ந்து முதல் அரையிறுதிப் போட்டி மார்ச் 30ஆம் தேதியும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி மார்ச் 31ஆம் தேதியும், இறுதிப் போட்டி ஏப்ரல் 3ஆம் தேதியும் நடைபெறும். இந்த முறைப்படி, அனைத்து அணிகளும் தங்களுக்குள் ஒரு போட்டியில் விளையாடும். முதல் நான்கு அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். போட்டியின் இந்த முறை காரணமாக, ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமானதாக இருக்கும், மேலும் அந்தப் போட்டிகளில் நிகர ரன் விகிதமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

இந்தியப் பெண்கள் அணியின் பலம்

மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு மிகவும் அனுபவம் வாய்ந்த மிதாலி ராஜ் தலைமை தாங்குவார். இவர்களைத் தவிர, அந்த அணியில் துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர், விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ், ஸ்மிருதி மந்தனா, ஷெஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, தீப்தி சர்மா, ஸ்னேஹ் ராணா, ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ரகர், ஏக்தா பிஷ்ட் மற்றும் சிம்ரன் தில் பகதூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்குச் சென்று கிட்டத்தட்ட ஒரு மாதமாகியிருப்பதால், இந்நேரம் அங்குள்ள சூழலுக்கு அது பழகியிருக்க வேண்டும். மகளிர் உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பு, நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு டி20 மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் வாய்ப்பு இந்த அணிக்குக் கிடைத்தது. ஒரே டி20 போட்டி பிப்ரவரி 9 அன்று நடைபெற்றது, இதில் நியூசிலாந்து பெண்கள் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

ஐந்தாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முழுத் தோல்வியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொண்டது இந்திய அணிக்குச் சற்று ஆறுதலான விஷயம். இந்தப் போட்டியில் அமெலியா கேனின் 66 ஓட்டங்களின் உதவியுடன் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 251 ஓட்டங்களை எடுத்தது. இதனையடுத்துக் களமிறங்கிய இந்திய மகளிர் அணி, ஸ்மிருதி மந்தனா 71, ஹர்மன்பிரீத் கவுர் 63, கேப்டன் மிதாலி ராஜ் ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் எடுத்து 46 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் இந்த வெற்றியின் மூலம் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்க வேண்டும், நியூசிலாந்துக்குப் புறப்படுவதற்கு முன்பு, "நியூசிலாந்தில் கேப்டன் பொறுப்பேற்றுச் செயல்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு கோடி மக்களின் நம்பிக்கை எங்கள் மீது இருப்பதை நாங்கள் உணர்கிறோம். நிறைய அழுத்தம் இருந்தாலும், சிறப்பாகச் செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்று கூறினார்.

உலகக் கோப்பையின் முதல் பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி, இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை 81 ரன்கள் வித்தியாசத்தில் மிக எளிதாக வீழ்த்தியது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஹர்மன்பிரீத் கவுர் 104 ரன்களும், யாஸ்திகா பாட்டியா 58 ரன்களும் எடுத்தனர். இதற்குப் பிறகு, மரபு வழி லெக் ஸ்பின்னர் ராகேஸ்வரி கெய்க்வாட் 2 ரன்கள் மட்டும் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

காயமுற்ற ஸ்மிருதி மந்தனா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனாவின் இடது காதில் பேட்டிங் செய்யும் போது பந்து தாக்கியது, ஆனால் அதிலிருந்து குணமடைந்த பிறகு, மார்ச் 1, செவ்வாய்கிழமை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் 66 ரன்கள் எடுத்தார். இவர்களைத் தவிர தீப்தி சர்மா 51 ரன்களும், கேப்டன் மிதாலி ராஜ் 30 ரன்களும், யாஸ்திகா பாட்டியா 42 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 258 ரன்கள் எடுத்தது, அதன் பிறகு மேற்கிந்திய தீவுகள் 9 விக்கெட்டுக்கு 177 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய தரப்பில் வலது கை மித வேகப் பந்து வீச்சாளர் பூஜா வஸ்த்ரகர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Smriti mandana

பட மூலாதாரம், Getty Images

நியூசிலாந்தில் இந்திய மகளிர் அணியின் செயல்பாடு

இந்திய மகளிர் அணி நியூசிலாந்தில் நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்தது, ஆனால் சில வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் உலகக் கோப்பையில் இன்னும் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் மிதாலி ராஜ் 59 ரன்களும், யாஸ்திகா பாட்டியா 41 ரன்களும் எடுத்தனர். இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் கேப்டன் மிதாலி ராஜ் ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் எடுத்தார். இவரைத் தவிர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிச்சா கோஷ் 65 ரன்களும், யாஸ்திகா பாட்டியா 31 ரன்களும் எடுத்தனர். இந்தப் போட்டியில் ஆஃப் ஸ்பின்னர் தீப்தி சர்மா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Sneh rana

பட மூலாதாரம், Getty Images

மூன்றாவது போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் ஷெஃபாலி வர்மா 51 ரன்களும், தீப்தி சர்மா ஆட்டமிழக்காமல் 69 ரன்களும் எடுத்தனர். இந்தப் போட்டியில், அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி தனது பங்குக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். நான்காவது போட்டி மழையால் இருபது ஓவர்கள் மட்டுமே ஆடப்பட்டது. இதில் ரிச்சா கோஷ் 52 ரன்களும், கேப்டன் மிதாலி ராஜ் 30 ரன்களும் எடுத்தனர். ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியில் ஸ்மிருதி மந்தனா 71 ரன்களும், ஹர்மன்பிரீத் கவுர் 63 ரன்களும் எடுத்தனர், கேப்டன் மிதாலி ராஜ் ஆட்டமிழக்காமல் 57 ரன்களும் எடுத்தனர்.

இதன் அடிப்படையில், உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணியின் பேட்டிங்கில் தொடக்க ஜோடியாக ஸ்மிருதி மந்தனா, ஷெஃபாலி வர்மா, கேப்டன் மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீத் கௌர், தீப்தி ஷர்மா, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிச்சா கோஷ் ஆகியோர் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

பந்துவீச்சில் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி தவிர, மேக்னா சிங் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மரபுவழி லெக் ஸ்பின்னர் ராகேஸ்வரி கெய்க்வாட், ஆஃப் ஸ்பின்னர்கள் தீப்தி சர்மா மற்றும் சினேஹ் ராணா, வலது கை லெக்பிரேக்கர் பூனம் யாதவ் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

வியப்பூட்டிய பாகிஸ்தான் மகளிர் அணி

மறுபுறம், பாகிஸ்தான் மகளிர் அணி முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தப் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 45 ஓவர்களில் 229 ரன்களுக்கு சுருண்டது. பாகிஸ்தான் அவர்களின் எட்டு பந்துவீச்சாளர்களைக் களமிறக்கியது. அதில் மரபு வழி லெக் ஸ்பின்னர் நஷ்ரா சந்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவரை 43 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்பின், நிடா டாரின் 54, அலியா ரியாஸின் ஆட்டமிழக்காமல் 62, தொடக்க ஆட்டக்காரர் ஸித்ரா அமீனின் 34 ரன்களினால் பாகிஸ்தான் மகளிர் அணி 49.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் ஒமைமா சோஹைலும் 34 ரன்கள் எடுத்தார். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணி அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான்

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 1973 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற நிகழ்வில் தொடங்கியது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இல்லாத ஏழு அணிகளுக்கு இடையே போட்டிகள் நடந்தன. புள்ளிகள் அடிப்படையில் இங்கிலாந்து சாம்பியன் ஆனது.

1978 ஆம் ஆண்டு, இரண்டாவது பெண்கள் உலகக் கோப்பை இந்தியாவில் நடத்தப்பட்டது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் மட்டுமே பங்கேற்றன. புள்ளிகள் அடிப்படையில் ஆஸ்திரேலியா சாம்பியன் ஆனது.

இதற்குப் பிறகு, 1997-ம் ஆண்டும், 2013-ம் ஆண்டும் பெண்கள் உலகக் கோப்பையை இந்தியா நடத்தியது.

indian team

பட மூலாதாரம், Getty Images

பெண்கள் உலகக் கோப்பையில், 1997ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி முதல் முறையாக விளையாடி, குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த 5 போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இந்திய மகளிர் அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

2005 ஆம் ஆண்டு, தென்னாப்பிரிக்கா நடத்திய மகளிர் உலகக் கோப்பையில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக இறுதிப் போட்டியை எட்டியது, அங்கு அது ஆஸ்திரேலியாவிடம் 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக மிதாலி ராஜ், அதே அணியில் ஜூலன் கோஸ்வாமியும் இருந்தனர். எட்டு அணிகள் கொண்ட அந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி இல்லை.

2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பையில், பாகிஸ்தான் மகளிர் அணியும் இந்த எட்டு அணிகளில் சேர்க்கப்பட்டு, இந்திய அணியுடன் பி பிரிவில் இடம் பெற்றிருந்தது. இரு அணிகளும் முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியில் 7 மார்ச் 2009 அன்று சந்தித்தது, இதில் இந்திய அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி 29 ஓவர்களில் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அனகா தேஷ்பாண்டேவின் ஆட்டமிழக்காமல் எடுத்த 26 ரன்கள் மூலம் இந்திய அணி பத்து ஓவர்களிலேயே பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா நடத்திய 2013 உலகக் கோப்பையில், எட்டு அணிகளில் பாகிஸ்தான் அணியும் இருந்தது. இரு அணிகளும் சூப்பர் சிக்ஸுக்கு செல்லாததால் ஏழாவது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. கேப்டன் மிதாலி ராஜின் 103 ரன்களால் இந்திய அணி 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது.

2017 ஆம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான் இரண்டும் 8 அணிகளில் இடம் பெற்றன. "மூன்றாவது" சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. தொடக்க வீராங்கனை பூனம் ரௌத்தின் 47 ரன்களின் காரணமாக இந்திய மகளிர் அணி 9 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது, ஆனால் பதிலுக்கு பாகிஸ்தான் அணி 38.1 ஓவரில் 74 ரன்களுக்குச் சுருண்டது. மரபு வழி லெக் ஸ்பின்னர் ஏக்தா பிஷ்ட் 18 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிப் பாதையை எளிதாக்கினார்.

இந்திய மகளிர் அணி மிதாலி ராஜ் தலைமையில் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது, ஆனால் இங்கிலாந்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்படியாக, இந்திய ஆண்கள் அணியைப் போலவே, பெண்கள் உலகக் கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தோல்வியைச் சந்திக்காமலே இருக்கிறது.

இம்முறை உலகக் கோப்பையில் இந்தியாவின் நம்பிக்கையைப் பற்றி, வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி கூறுகையில், தான் இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளதாகவும், ஆனால் வெற்றிக் கோப்பையை எட்டிப்பிடிக்க முடியவில்லை என்றும், அதற்காக வருத்தம் தெரிவித்தார். அணியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ள அவர், இம்முறையும் அணி சிறப்பாகச் செயல்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

பிசிசிஐ டிவியுடன் பேசிய இந்திய கேப்டன் மிதாலி ராஜ், அணியில், குறிப்பாக ஷெஃபாலி வர்மா, பூஜா வஸ்த்ரகர் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிச்சா கோஷ் ஆகியோரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகக் கூறினார். அவர் பேட்டிங்கில் தனது ஃபார்மில் திருப்தி அடைந்து அதை உலகக் கோப்பையிலும் தொடர விரும்புகிறார். உலகக் கோப்பையில் தனது கடந்தகால அனுபவங்களை மறக்க விரும்புகிற அவர், இளம் வீரர்கள் கிரிக்கெட்டில் இத்தனை உயர்ந்த நிலைக்கு வந்து விளையாடும் மகிழ்ச்சியுடன் பங்கு பெற வேண்டும் என விரும்புகிறார். இளம் வீரர்கள் மட்டுமல்ல, அனுபவம் வாய்ந்த வீரர்களும் தேவை என்றும் அவர் கூறுகிறார். அவர் நியூசிலாந்தில் பேட்டிங்கின் செயல்பாட்டில் திருப்தி அடைந்தாலும் பந்து வீச்சு திருப்திகரமாக இல்லை என்று கூறுகிறார்.

இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா உலகக் கோப்பை பற்றி கூறுகையில், "ஹர்மன்ப்ரீத் கௌரின் பேட்டிங், குறிப்பாக அவர் சிக்ஸர் அடிக்கும் விதம் மிகவும் திருப்திகரமாக உள்ளது. உலகக் கோப்பையில் அவருடன் நீண்ட பார்ட்னர்ஷிப் வைத்திருப்பது அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் இந்திய அணி 250 ரன்களுக்கு மேல் எடுத்தாலும் தோல்வியடைந்தது. இப்போது உலகக் கோப்பையில் ரன்களை எடுப்பது முக்கியம், எதிரணியை ரன் எடுக்க விடாமல் தடுப்பதில் சிறப்பாகச் செயல்பட வேண்டியது அவசியம்" என்று கூறுகிறார்.

இது தவிர, அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் சுபதீப் கோஷ், நியூசிலாந்தை அடைந்ததும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு செயல்படுவதே தனது முதல் நோக்கமாக இருந்தது என்று கூறுகிறார். அணியின் ஃபீல்டிங்கில் முன்னேற்றம், குறிப்பாக கடந்த போட்டியில் வீரர்கள் சிறப்பான கேட்ச்களை எடுத்த விதம் திருப்தி அளிப்பதாகவும் அவர் கூறுகிறார்.

இந்தியாவுக்காக அதிவேக அரைசதம் அடித்த ரிச்சா கோஷ் கூறுகையில், அந்த நேரத்தில் தான் சதத்தைப் பற்றி நினைக்கவில்லை என்றும் அணியின் தேவைக்கேற்ப பேட்டிங் செய்ததாகவும் கூறுகிறார். அவர் மகேந்திர சிங் தோனியால் ஈர்க்கப்பட்டு, அவரைப் போல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருக்க ஆசைப்படுகிறார். தோனியின் பவர் ஹிட்டிங் அவரை மிகவும் கவர்ந்தது.

இந்த மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி எப்படி விளையாடுகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணியிடம் இதுவரை தோற்றதில்லை. மகளிர் உலகக் கோப்பை பற்றி இப்போது அதிக விவாதம் இருப்பதில்லை. ஆனால் மார்ச் 6 ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் போட்டி, மகளிர் கிரிக்கெட்டை பேசு பொருளாக்கும் என்று நம்பப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: