ராமநாதபுரம் நாட்டுப்படகு - விசைப்படகு மீனவர்கள் நடுக்கடலில் மோதல்: சிக்கலுக்கு தீர்வு என்ன? #பிபிசி கள ஆய்வு

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் விசைப்படகுகள் சுருக்குமடி வலை கொண்டு மீன் பிடிப்பதால், கரையோரங்களில் மீன்பிடிக்கும் நாட்டுப்படகு மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிப்படுவதாக கூறுகின்றனர்.
குறிப்பாக கடற்கரையில் இருந்து 5 நாட்டிகல் தொலைவுக்குள் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ள பகுதியில் இது நடப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ஆனால், இப்படி நடக்கவில்லை என்கிறார்கள் விசைப்படகு மீனவர்கள்.
இந்த சிக்கலால், நடுக்கடலில் இரு தரப்பு மீனவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காண, தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 281.47 கி.மீ நீளத்திற்கு நீண்ட கடற்கரை அமைந்துள்ளது. மாவட்டத்தில் மீன் பிடித்தொழில் முதன்மையானது என்பதால், ராமேஸ்வரம், மண்டபம், மூக்கையூர், பாம்பன், தொண்டி, தேவிப்பட்டினம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மறைமுகமாகவும் மீன்பிடித் தொழிலை நம்பி உள்ளனர். மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
பாரம்பரிய சிறு தொழில் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மீன்பிடி துறைமுகங்களில் இருந்து செல்லும் விசைப்படகு மீனவர்கள், கரையோரம் மீன் பிடிப்பதால் நாட்டுப் படகு சிறு தொழில் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்று நாட்டுப் படகு மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983-ல் உள்ள 21 விதிகளின் அடிப்படையில், தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலை, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது, கரை ஓரங்களில் மீன் பிடிக்கும் விசைப்படகுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறு தொழில் நாட்டுப்படகு மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியை சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து மீன் வளத்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சுருக்கு மடி வலை என்றால் என்ன
கரையிலிருந்து இழுக்கும் கரைமடி வலையின் அடுத்த பரிணாமம்தான் சுருக்கு மடி வலை. கடலில் உள்ள நீரோட்டங்களுக்குத் தகுந்த வகையில் இவ்வலை வீசப்படும். இந்த வலை சுவர் போன்று செங்குத்தாக இருக்கும். இதன் கீழ்ப் பகுதியில் உலோகப் பந்தும், மேல் பகுதியில் மிதவையும் பொருத்தப்பட்டிருக்கும்.இந்த வலையின் உயரம் 100லிருந்து 150 அடிவரையும், அகலம் 300 அடி முதல் தேவைக்கு ஏற்ப இருக்கும்.
சுருக்கு பை போன்ற வட்ட வடிவில் இறுகிக் கொண்டே செல்லும் என்பதால், இதற்கு சுருக்குமடி வலை என பெயர். கடலின் அடியில் இது 500 மீட்டர் வரை கீழே செல்லும். பெரிய சுருக்கு மடி வலை வீசினால் எல்லா மீன்களும் மாட்டிக்கொள்ளும். ஒரு வேளை மீன்கள் இவ்வலையை கிழிக்க முயன்றால் உடனடியாக அதற்கு இணையாக மற்றொரு வலை போட்டு மீன்களை லாவகமாக பிடிக்க முடியும்.
இவ்வகை வலைகளில் மீன் பிடித்தல், அதிக லாபம் கிடைப்பதால் மீனவர்கள் இதை அதிகம் பயன்படுத்த முன் வருகின்றனர். ஆனால், கடலில் உள்ள மீன் இனங்களை இவ்வகை வலைகள் அழிக்கும் என்று கருதி, இந்த வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க, தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983 தடை விதிக்கிறது.
மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் உள்ள விதிகள் என்ன?

அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி, சுத்து வலை, பேந்த வலை போன்றவைகளை பயன்படுத்தக் கூடாது. அனுமதிக்கப்பட்ட தளத்தில் மட்டும் மீன்பிடிக்க வேண்டும் ஆற்று முகத்துவாரத்தில் மீன் பிடிக்கக் கூடாது.
24 அடி கொண்ட விசைப்படகுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கடற்கரையில் இருந்து 5 நாட்டிக்கல் தூரத்தில், அதாவது சிறு தொழில் மீனவர்கள், மீன் பிடிக்கும் பகுதியில் அதிக குதிரை திறன் கொண்ட இன்ஜின் பொருத்திய விசைப்படகுகள் மீன் பிடிக்க கூடாது என்பது உள்ளிட்ட 21 விதிகள் உள்ளன.
ஆனால் இந்த விதிகளை முறையாக பின்பற்றாமல் மீன் பிடிப்பதாக குற்றச்சாட்டு எழுவதால், ராமேஸ்வரம் முதல் கடலூர் மாவட்டம் வரை நடுக்கடலில் விசைப்படகு மீனவர்களுக்கும் நாட்டுப்படகு மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
விசைப்படகு மீனவர்களால் வலைகள் சேதம் - குற்றச்சாட்டு

விசைப்படகுகள் கரையோரம் மீன் பிடிப்பதால் நேரடியாக பாதிக்கப்படுவதாக நாட்டுப்படகு மீனவர்கள் கூறுகின்றனர். இது குறித்து நாட்டுபடகு மீனவர் குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''கடந்த 23 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டுப்படகில் மீன் பிடி தொழில் செய்து வருகிறேன். நாட்டுப்படகு மீனவர்கள் அதிகாலை 3 மணிக்கு மீன்பிடிக்கச் சென்று வலைகளை விரித்து விட்டு, 8 மணிக்கு மீன் பிடித்து கரை திரும்புவோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து இரவு பகலாக விசைப்படகுகள் கரையோரங்களில் மீன் பிடிப்பதால் , நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
விசைப்படகுகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள் கடற்கரையிலிருந்து ஐந்து நாட்டிகல் தூரத்தில் மீன்பிடிக்க கூடாது என சட்டம் உள்ளது. ஆனால் இந்த சட்டத்தையும் மீறி விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து கரையோரம் மீன் பிடிப்பதால் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ள மீன் பிடி வலைகளும் சேதமடைகின்றன.
கரையோரம் மீன் பிடிக்கும் விசைப்படகுகளை நாட்டுப்படகு மீனவர்கள் நடுக்கடலில் வைத்து சிறைபிடித்து படகுடன் மீனவர்களை கரைக்கு அழைத்து வந்து பலமுறை மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தும், அதிகாரிகள் முறையான நடவடிக்கைகள் எடுக்காததால் தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கரையோர மீன் பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, கரையோரங்களில் மீன் பிடிப்பதால் விசைப்படகு மீனவர்களுக்கும், நாட்டுப்படகு மீனவர்களுக்கு நடுக்கடலில் அவ்வப்போது மோதல்கள் ஏற்படுகிறது. எனவே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பு தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மீனவர் குமார் தெரிவித்தார்.
மீன் வளத்துறை நடவடிக்கை எடுக்கவில்லையா?

சிறு தொழில் மீனவர்கள் பாதிக்கப்படும் போது, மீன் வளத்துறை நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டங்கள் நடத்திய, சிஐடியு கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி பிபிசி தமிழிடம் பேசுகையில்,
''நாட்டுபடகுகளில் சில வசதி படைத்த மீனவர்கள், தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதால் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. விசைப்படகு மீனவர்கள், கரையோரங்களில் மீன் பிடிக்க கூடாது, தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்த கூடாது என சட்டம் உள்ளது. ஆனால் அந்த சட்டம் வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளது. நடைமுறைக்கு வரவில்லை.
தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய மீன்வளத்துறை அதிகாரிகள் விசைப்படகு மீனவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனை கண்டித்து காதில் பூ சுற்றி போராட்டம், கழுதைக்கு மனு கொடுத்து போராட்டம், சங்கு ஊதி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட நூதனப் போராட்டங்கள் நடத்தி வருகிறோம். ஆனாலும் மீன்வளத்துறை அதிகாரிகள் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பது ஏன் ?.'' என கருணாமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டுப்படகு மீனவர்கள் எங்கள் சகோதரர்கள்

நாட்டுப்படகு மீனவர்களின் நேரடி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதி சகாயம், ''ஒருபோதும் விசைப்படகுகளில் கரை ஓரங்களில் மீன் பிடிப்பது இல்லை. அப்படி மீன் பிடிப்பதாக தகவல் கிடைத்தால், சம்பந்தப்பட்ட விசைப்படகுகளை அழைத்து கரையோரங்களில் மீன்பிடிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை விசைப்படகு மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தியதாக தெரியவில்லை, அவ்வாறு சேதப்படுத்தப்பட்டால், அதற்கான உரிய இழப்பீடு விசைப்படகு உரிமையாளர்களிடம் பெற்று பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்கபட்டுள்ளது. நாட்டுப்படகு மீனவர்கள் எங்களுடைய சகோதரர்கள். எனவே நடுக்கடலில் மீன் பிடிக்கும் போது அவர்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் மீன் பிடித்து வருகிறோம்.
சட்டவிரோத மீன்பிடியில் விசைப்படகு மீனவர்கள் ஈடுபடுவதாக நாட்டுப்படகு மீனவர்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை நாங்கள் ஏற்க தயாராக இல்லை. இரட்டை மடி வலைகளை பயன்படுத்தக்கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் மீனவ சங்கங்கள் தொடர்ந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களிடம் வலியுறுத்தி வருகிறோம். தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்கள் குறித்து தகவல் கிடைத்தால், நாங்களே நேரடியாக மரைன் போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் தகவல் கொடுத்து மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ராமேஸ்வரம் முதல் தஞ்சாவூர் மாவட்டம் வரை கரையோரங்களில் நாட்டுப்படகு,விசைப்படகு மீனவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக, வாரத்தில் மூன்று நாட்கள் விசைப்படகு மீனவர்களும், நான்கு நாட்கள் சிறு தொழில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்தால் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்.'' என்கிறார் மீனவர் சங்க பிரதிநிதி சகாயம்.
குற்றசாட்டுகள் உண்மையில்லை - மறுப்பு
தொடர்ந்து பேசிய சகாயம், ''விசைப்படகு மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி வருகின்றனர் ஆனால் அது உண்மை இல்லை. மீன்வளத்துறை அதிகாரிகள் மாத சம்பளம் ஒரு லட்ச ரூபாய் வரை பெற்று வரும் நிலையில், மீனவர்களிடம் அதிகாரிகள் ஏன் லஞ்சம் பெற வேண்டும்?. அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் அளவு மீனவர்களிடமும் பணம் இல்லை.'' என்கிறார் சகாயம்.
விதிகளை மீறினால் மீது கடும் நடவடிக்கை - மீன்வளத்துறை
மீன்வளத் துறையினர் மீது நாட்டுப்படகு மீனவர்கள் சுமத்திய குற்றச்சாட்டு குறித்து ராமநாதபுரம் மண்டல மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயனிடம் கேட்டபோது, "கடற்கரையிலிருந்து 5 நாட்டிக்கல் தூரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கூடாது என சட்டம் உள்ளது. எனவே அதனை பின்பற்றி மீனவர்கள் மீன் பிடிக்கும் முறையில் மீன் வளத்துறை அதிகாரிகள் நேரடியாக சென்று மீனவர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
மீன் இனங்கள் அழியும் வகையில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி, மீன் பிடித்த நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படகு மீதான வழக்கு முடியும் வரை, அரசால் வழங்கப்படும் மானிய டீசல் மற்றும் மீன்பிடி அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்படுகிறது. நடுக்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களை கண்காணிக்க மீன்வளத் துறைக்கு சொந்தமான ரோந்து படகுகள் மூலம் மெரைன் போலீசார் உதவியுடன் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறோம். அதேபோல் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் மீனவர்களை தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்.'' என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- கேரளாவில் 40 மணி நேரத்திற்கும் மேல் மலை இடுக்கில் சிக்கியிருந்த இளைஞர் மீட்பு
- சசிகலா மீதான ஊழல் வழக்கு: ஐஜி ரூபா குற்றச்சாட்டால் என்ன நடக்கும்?
- பாலியல் துன்புறுத்தல் வழக்குகளைக் கையாண்டதில் தவறுகள்: ஒப்புக்கொண்ட முன்னாள் போப்
- ஹிஜாப் Vs காவி துண்டு: கர்நாடகாவில் தீவிரமாகும் ஆடை விவகாரம் - அடுத்தது என்ன
- பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் அறிவிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்
- கோடநாடு எஸ்டேட்: ஸ்டாலின் அரசுக்கு ஆதாரத்தை திரட்டுவதில் பின்னடைவா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













