CSK vs KKR ஐபிஎல் 2021 கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது

பட மூலாதாரம், BCCI/IPL
அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம் ஐபிஎல் 2021 புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் முதல் இடத்திற்கு சென்றுள்ளது.
கடைசி ஓவரின் கடைசி பந்து வரை பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட்டத்தில் மட்டுமல்லாது அதன் ரசிகர்கள் மனதையும் வென்றுள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது.
கொல்கத்தா அணிக்காக அதிகபட்சமாக ராகுல் த்ரிபாதி 45 ரன்களும், நிதிஷ் ரானா ஆட்டமிழக்காமல் 37 ரன்களும் தினேஷ் கார்த்திக் 26 ரன்களும் எடுத்தனர்.
பந்துவீச்சாளர்களை பொருத்தவரை சென்னை அணியின் ஜோஷ் ஹேசல்வுட் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
நான்கு ஓவர்கள் வீசிய தாக்கூர் வெறும் 20 ரன்கள் மட்டுமே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு விட்டுக் கொடுத்தார். அதில் ஒரு ஓவர் மெய்டன் ஓவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்கம் நன்றாகவே இருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரிதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் 40 ரன்களும், பஃப் டூப்ளெசீஸ் 30 பந்துகளில் 43 ரன்களும் எடுத்தனர்.

பட மூலாதாரம், Bcci / ipl
அடுத்து களமிறங்கிய மொயீன் அலி 28 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். ஆனால் சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக ஜொலிக்கவில்லை.
16-வது ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன்பின்பு மளமளவென விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது.
மகேந்திர சிங் தோனி 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து வருண் சக்ரவர்த்தியின் பந்தில் பவுல்டு-அவுட் ஆனார்.
ஆட்டத்தின் இறுதி கட்டம் நெருங்க நெருங்க பரபரப்பும் அதிகரித்தது .18-வது ஓவரில் சுரேஷ் ரெய்னா மற்றும் எம்.எஸ். தோனி ஆகிய இருவருமே ஆட்டமிழந்தனர். 15 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு சென்னை அணி தள்ளப்பட்டது.
கடைசி ஓவரின் போது சென்னை அணியின் வெற்றிக்கு நான்கு ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் அந்த ஓவரின் முதல் பந்திலேயே சாம் கரன் ஆட்டமிழந்தார்.
இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டும் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த பொழுது கடைசி ஓவரின் 5வது பந்தில் 22 ரன்கள் எடுத்திருந்த ரவீந்திர ஜடேஜா வெளியேற்றப்பட்டார்.
சென்னை வெல்லுமா, சூப்பர் ஓவர் தேவை வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், சூப்பர் ஓவர் வீச வேண்டிய தேவை ஏற்படவில்லை.
ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழந்த பின்பு அவருக்கு அடுத்ததாக களமிறங்கிய தீபக் சஹார், சுனில் நரைன் பந்து வீச்சில் கடைசி ஓவரின் கடைசி பந்தில் அந்த ஒற்றை ரன்னை எடுத்து சென்னை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
புள்ளிப்பட்டியலில் சென்னை முதலிடம்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்த சீசனில் இதுவரை தாம் விளையாடியுள்ள 10 ஐபிஎல் போட்டிகளில் 8 போட்டிகளில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இதே போல பத்துக்கு எட்டு போட்டிகளில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் 16 புள்ளிகளை பெற்றிருந்தாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணியை விட பின்தங்கி இருப்பதால் தற்போது அந்த அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதுவரை விளையாடியுள்ள ஒன்பது போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி இடத்திலும், பத்தில் நான்கு போட்டிகளில் மட்டுமே வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்திற்கு முந்தைய இடம் அதாவது 7-வது இடத்திலும் உள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












