2011 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்றது எப்படி? சேவாக் விக்கெட் முதல் தோனி சிக்ஸர் வரை

பட மூலாதாரம், Getty Images
"ஃபீல்டிங் சரியில்லை" "இன்னும் அதிரடியாக விளையாடலாம்" என 2011 உலகக் கோப்பையின் போது சில விமர்சனங்களை எதிர்கொண்டது மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. அந்த விமர்சனங்கள் சரி செய்யப்பட்டன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் சுரேஷ் ரெய்னா களமிறக்கப்பட்டதிலிருந்து, இந்தியாவின் ஃபீல்டிங் வேறு லெவலுக்குப் போனது.
ஒரு பக்கம் இலங்கை இங்கிலாந்தையும், நியூசிலாந்தையும் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மறு பக்கம் இந்தியா ஆஸ்திரேலியாவையும், பாகிஸ்தானையும் வென்று இறுதி போட்டிக்கு வந்து சேர்ந்தது.
இந்தியா மற்றும் இலங்கை என இரு நாடுகளும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கெடுப்பது, அதுவே மூன்றாவது முறை. எனவே இரு நாடுகளும் உலகக் கோப்பையை தங்கள் தோளில் சுமக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் சமரசமின்றி இருந்தனர்.
கோடான கோடி கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த பரபரப்பான நாளில் (ஏப்ரல் 02, 2011, சனிக்கிழமை) இரு அணிகளும் களமிறங்கின.
மும்பை வான்கடே மைதானத்தில் 104 டிகிரிக்கு கிரிக்கெட் ஜுரமடித்ததுக் கொண்டிருந்தது. மும்பை சாலைகளில் எல்லாம் கிரிக்கெட் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. உபுல் தரங்க மற்றும் திலகரத்ன தில்ஷான் களமிறங்கினர். தரங்க 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இரு சதங்களையும், ஒரு அரை சதத்தையும் பதிவு செய்திருந்தார். அதே போல தில்ஷானும் இரு சதம் மற்றும் இரு அரை சதங்களை விளாசி இருந்தார். ஆக இந்த இணையை அத்தனை எளிதில் வீழ்த்த முடியாது என்பதுதான் நிலைமை.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், ஜாகிர் கான் வீசிய 7-வது ஓவரில் தரங்க தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய ரசிகர்கள் மத்தியில் ஆரவாரம் பொங்கி வழிந்தது.
அவரைத் தொடர்ந்து இலங்கையின் நம்பகமான நட்சத்திர பேட்ஸ்மென் குமார் சங்கக்கரா களமிறங்கி விக்கெட் சரிவைத் தடுத்து ரன் குவிப்பில் இறங்கினார். ஹர்பஜன் வீசிய 17-வது ஓவரில் தில்ஷானின் விக்கெட் வீழ்ந்தது. ஓரளவுக்கு நிலை பெற்ற தில்ஷான், சங்ககரா இணை 43 ரன்களோடு பிரிந்தது இலங்கைக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது.
சங்கக்காரா போட்ட நங்கூரமும் வீழ்ச்சியும்
அச்சூழலை சரி செய்து ரன் குவிக்க, சங்ககராவுடன் கை கோர்த்தார் ஜெயவர்த்தனே. இந்த இணை நங்கூரமாக நின்று இந்திய பந்துவீச்சாளர்களின் பொறுமையைச் சோதித்தது. அந்த இக்கட்டான நேரத்தில் விக்கெட் எடுத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில், யுவராஜை பந்து வீச அழைத்தார் தோனி.
62 ரன்களைக் குவித்து இலங்கையின் மொத்த ரன்னை 122-க்கு கொண்டு சென்ற பின், யுவராஜ் சிங் வீசிய 28-வது ஓவரில், அவுட் சைட் எட்ஜ் ஆகி வந்த பந்தைப் பிடித்து சங்ககராவை பெவிலியனுக்கு அனுப்பினார் மகேந்திர சிங் தோனி. அதோடு, மீண்டும் ஒரு வலுவான பேட்டிங் இணையை உருவாக விடாமல் பார்த்துக் கொண்டது இந்திய பந்துவீச்சாளர்கள் படை.
சங்கக்காரா - ஜெயவர்த்தனே இணை முடிவுக்கு வந்தபிறகு, சமரவீர ஓரளவுக்கு ஜெயவர்த்தனேவின் ரன் குவிப்புக்கு உதவினார். இந்த இணை 57 ரன்களை எடுத்துப் பிரிந்தது. சமரவீராவின் விக்கெட் இழப்புக்குப் பிறகு அடுத்தடுத்து வந்த இலங்கை பேட்ஸ்மேன்கள் அதிக ரன்களைக் குவிக்க முடியாமல் திணறினர். 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களைக் குவித்தது இலங்கை. 275 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக வைத்தது இலங்கை.
"சச்சின் இருக்கிறார்... சேவாக் இருக்கிறார்..." என நம்பிக்கையோடு இருந்தது இந்தியா ரசிகர்கள் பட்டாளம். ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் சேவாக்.
மலிங்கா வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே எல் பி டபிள்யூ ஆனார். சேவாக் கேட்ட ரிவ்யூவிலும் அவர் எல் பி டபிள்யூ ஆனது உறுதி செய்யப்பட்டது. இந்திய ரசிகர்களின் கண்கள் இருண்டு விட்டன. வான்கடே சொல்லொனா சோகத்தில் மூழ்கியது.

பட மூலாதாரம், Getty Images
சரி எப்படியும் சச்சின் உட்பட மற்ற பேட்ஸ்மேன்கள் பார்த்துக் கொள்வார்கள் என இந்திய ரசிகர்கள் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். மறு முனையில் கெளதம் கம்பீர் களமிறங்கி நிதானம் காட்டினார். அப்போது தான் இந்தியாவுக்கு ஆட்டத்தில் ஒரு பிடி கிடைத்து இருந்தது. அதற்குள் மலிங்கா மற்றொரு பேரிடியை இந்திய ரசிகர்கள் தலையில் இறக்கினார்.
அவர் வீசிய 7-வது ஓவரின் முதல் பந்தில் சச்சின் அவுட் சைட் எட்ஜ் ஆகி வீழ்த்தப்பட்டார். ஆம். இந்திய கிரிக்கெட்டின் ஆதர்ஷ நாயகன், விக்கெட் பறிபோனது. 'லஸித் மலிங்கா இஸ் அன்ஸ்டாப்பபிள்' என்றார் அவர்.
இந்திய ரசிகர்களுக்கு சப்த நாடியும் அடங்கிவிட்டது. இனி ஜெயிப்பது எல்லாம் சாத்தியமா? என கேட்டுக் கொள்ளத் தொடங்கிவிட்டனர் இந்திய ரசிகர்கள். 6.1 ஓவரில் 31 ரன்களுக்கு இரு விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது இந்தியா. இலங்கை தரப்பிலோ, ஆரவாரம் பெருக்கெடுத்து ஓடியது.
அப்போதுதான் விராட் கோலி, கெளதம் கம்பீருடன் இணைந்து அதிரடி கலந்த ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார். கம்பீர் கோலி இணை 83 ரன்களைக் குவித்து இந்தியாவை நிலைப்படுத்தியது. கம்பீர் அரை சதத்தைப் பதிவு செய்தது இந்திய ரசிகர்களின் உலகக் கோப்பை கனவுக்கு மீண்டும் ஆக்சிஜென் கொடுத்தது போலிருந்தது.
கோலி கம்பீர் அடித்த ஒவ்வொரு ரன்னுக்கும் ரசிகர்கள் தரப்பிலிருந்து ஆரவாரம் பறந்தது. இதை வெற்றி பெற்ற பிறகு தோனியே பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
22-வது ஓவரில் தில்ஷான் வீசிய நான்காவது பந்தில், கோலி அடித்த பந்து தில்ஷானிடமே சரணடைந்தது. 114-க்கு 3 விக்கெட் இழந்தது இந்தியா. கோலி 35 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.
ஒரு இக்கட்டான சூழலில், மிகவும் அழுத்தம் நிறைந்த நேரத்தில் மகேந்திர சிங் தோனி களமிறங்கினார். இந்த வலது இடது இணை இலங்கை பந்து வீச்சாளர்களை சிரமப்படுத்தியது. சுழற்பந்து வீச்சாளர்களை வருத்தியது. மெல்ல வெற்றி இலக்கை நோக்கி ஸ்கோரை அழகாக கொண்டு சென்றது தோனி - கம்பீர் இணை. இந்த ஜோடி 109 ரன்களைக் குவித்தது.
பெரரா வீசிய 42-வது ஓவரில் இறங்கி ஆட விரும்பி போல்டானார் கம்பீர். அவர் தன் விக்கெட்டை 97 ரன்களில் பறிகொடுத்தார்.
52 பந்துகளில் 52 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு களத்தில் நின்று கொண்டிருந்தார் தோனி. யுவராஜ் களமிறங்கி தோனிக்கு பக்க பலமாக நின்றார். இருவரும் விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் பந்துகளை தேர்வு செய்து ரன்களைக் குவித்தனர். 49-வது ஓவரின் இரண்டாவது பந்தில் அந்த சம்பவம் நடந்தது.
11 பந்துகளில் நான்கு ரன்களை எடுக்க வேண்டும் என்கிற நிலையில், தன் பானியில் ஒரு ஹெலிகாப்டர் ஷாட் சிக்ஸர் அடித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவை நனவாக்கினார் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி. 1983-ம் ஆண்டில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்ற பின், 28 ஆண்டுகளுக்குப் பிறகு, 2011-ம் ஆண்டு மீண்டும் உலகக் கோப்பையை வென்றது இந்தியா.
பிற செய்திகள்:
- மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை
- தூக்கிப் போட்டு மிதித்தால்... கர்நாடக முகம் இருக்கு - அண்ணாமலை; தொட்டுப் பார் தம்பி - கனிமொழி
- "ரெய்டில் பிடிபட்ட மொத்த பணமே 5 சதவிகிதம்தான்" - அதிர வைக்கும் தகவல்கள்
- "கருத்துக் கணிப்புகள் பொய், மக்கள் ஏமாற மாட்டார்கள்" - அண்ணாமலை பேட்டி
- நந்திகிராமில் மல்லுகட்டிய மமதா பானர்ஜி - வாக்குச்சாவடியில் பதற்றம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








