CSK vs RCB: விராட் கோலியும், தோனியின் சிஎஸ்கே பேட்ஸ்மேன்களும் - ஐபிஎல் 2020

    • எழுதியவர், சிவக்குமார் உலகநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

ஐபிஎல் 2020 RCB vs CSK

பட மூலாதாரம், BCCI/IPL

பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளங்களில் பல பேட்ஸ்மேன்களால் அதிக அளவு ரன்கள் குவிக்க முடியும். சாதனைகள் படைக்க முடியும். அது அவர்களின் கிரிக்கெட் வாழ்வின் இன்னொரு நாள், அவ்வளவே.

ஆடுகளத்தின் தன்மை பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் சமயங்களில்தான், ஒரு பேட்ஸ்மேனின் திறமை மற்றும் மனோதிடத்துக்கு உண்மையான சோதனை நடக்கும்.

அப்படிப்பட்ட சூழல்களில் தங்களை நிரூபித்து அணியின் வெற்றிக்கு உதவும் வீரர்கள் அதி சிறந்த பேட்ஸ்மேன்கள் என்றும், தனித்துவமான வீரர்கள் என்றும் பாராட்டப்படுவதுண்டு.

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிராக சனிக்கிழமையன்று துபையில் நடந்த ஐபிஎல் போட்டியில் இப்படிப்பட்ட கடும் சோதனை தேர்வை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி எதிர்கொண்டார்.

இப்போட்டியில் டாஸில் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்த நிலையில், போட்டியின் தொடக்கம் அவர் நினைத்தது போல அமையவில்லை.

தடுமாறிய பெங்களூரு, போராடிய கோலி

சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்கள் , குறிப்பாக மித வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹரின் துல்லியமான பந்துவீச்சால் ரன்கள் குவிக்க பெங்களூரு அணி பெரிதும் போராடியது.

தொடக்க ஆரோன் ஃபிஞ்ச் 2 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து விராட் கோலி களமிறங்கினார். ரன்கள் குவிப்பது ஒருபுறம் மிகவும் சிரமமாக இருந்த நிலையில், மறுபுறம் விக்கெட்களும் தொடந்து விழுந்தவண்ணம் இருந்தது.

11 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு, 67 ரன்களை எடுத்த ஆர்சிபி, தேவ்தத் படிக்கல் மற்றும் ஏ பி டிவில்லியர்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து ரன்கள் குவிக்க மிகவும் தடுமாறியது.

ஆனால், அப்போது களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி, இது போன்ற எண்ணற்ற தருணங்களை, தனது சர்வேதேச டெஸ்ட், ஒருநாள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சந்தித்துள்ளார்.

கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்று நிலையில், கோலியின் திறமையை நன்கு அறிந்தவர் என்ற முறையில், தனது பந்துவீச்சளர்களை அற்புதமாக தோனி பயன்படுத்தினார்.

இறுதி ஓவர்களில் ருத்ரதாண்டவம்

16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 103 எடுத்த பெங்களூரு, களத்தில் கோலி உள்ளார் என்ற ஒரே நம்பிக்கையில் விளையாடியது.

கடைசி 4 ஓவர்களில் 66 ரன்கள் எடுத்ததற்கு முக்கிய காரணம் கோலிதான். அதிரடியாக விளையாட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை துல்லியமாக கணித்த அவர், பந்துவீச்சளர்களின் சிறு தவறையும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். சில சமயங்களில் சிறப்பாக வீசப்பட்ட பந்துகளில் ரன் குவித்து வியப்பளித்தார்.

52 பந்துகளில், 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் குவித்த கோலி, இதை விட அதிரடியாக பலமுறைகள் விளையாடியுள்ளார். அதிக ரன்கள் குவித்துள்ளார். ஆனால், இக்கட்டான தருணங்களில் எப்படி விளையாட வேண்டும் என்று மற்ற பேட்ஸ்மேன்களுக்கு கற்றுக்கொடுப்பது போல அவரின் இந்த ஆட்டம் அமைந்தது.

விராட் கோலியின் அணுகுமுறைக்கு முற்றிலும் மாறுபட்டதாக சிஎஸ்கே வீரர்களின் பேட்டிங் இருந்தது எனலாம்.

வாட்சன் மற்றும் டுபிளஸிசிஸ் ஆகிய இரு தொடக்க வீரர்களும், பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த களத்தில் பெரிதாக போராடவில்லை. சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஐபிஎல் 2020 RCB vs CSK

பட மூலாதாரம், BCCI/IPL

தொடர்ந்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு மற்றும் தமிழக வீரரான ஜெகதீசன் ஆகிய இருவரும் ஓரளவு நிதானமாக விளையாடினர். வாய்ப்பு கிடைத்த சந்தர்ப்பங்களில் பவுண்டரிகள் அடித்தனர்.

கேதர் ஜாதவுக்கு பதிலாக அணியில் இடம்பெற்ற ஜெகதீசன், சில ஷாட்கள் அற்புதமாக விளையாடினார். குறிப்பாக சுழல் பந்துவீச்சை அவர் நன்றாக எதிர்கொண்டார். ஆனால் 33 ரன்கள் எடுத்த நிலையில், அவர் ரன் அவுட்டானார்.

பழைய தோனியை எப்போது பார்க்க முடியும்?

தோனி ஒரு சிக்ஸர் அடித்தார், மொத்தம் 10 ரன்கள் எடுத்த நிலையில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மற்றபடி அவரின் அசாத்திய பேட்டிங் திறன், இறுதி ஓவரில் வெல்லவைக்கும் மாயாஜாலம் ஆகியவை இதுவரை இந்த தொடரில், கடந்த கால நினைவுகள் போல ஆகிவிட்டன.

ஐபிஎல் 2020 RCB vs CSK

பட மூலாதாரம், BCCI/IPL

ஜடேஜா மற்றும் பிராவோ ஆகிய இருவரும் வெற்றி குறித்த நம்பிக்கை குறைந்து விளையாடியது போல அவர்களின் பேட்டிங் அமைந்தது.

பெங்களூரு அணியின் வெற்றிக்கு கோலியை போல தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரின் பங்களிப்பும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

அசத்திய வாஷிங்டன் சுந்தர்

பேட்டிங்கில் பெரிதாக சாதிக்காத அவர், தனது பந்துவீச்சை அற்புதமாக பயன்படுத்தினார். தான் பந்துவீசிய 3 ஓவர்களில், 16 ரன்கள் மட்டும் தந்து இரண்டு விக்கெட்டுகளை அவர் எடுத்தார்.

குறிப்பாக அனுபவம் வாய்ந்த சிஎஸ்கே அணியின் இரு தொடக்க வீரர்களின் விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் எடுத்தது பெங்களூரு அணிக்கு சாதகமாக அமைந்தது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

ஆட்டத்தின் பிற்பகுதியில் மோரிஸ் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை எடுத்த போதிலும், ஆரம்ப ஓவர்களில் வாஷிங்டன் சுந்தரின் துல்லியமான பந்துவீச்சு பெரிதும் பயனளித்தது.

கடந்த 8 முறைகள் சிஎஸ்கேயுடன் நடந்த போட்டியில், 7 முறை தோல்வியடைந்த ஆர்சிபி, இப்போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் பெருவெற்றி பெற்றது.

2020 ஐபிஎல் தொடரில் தான் விளையாடிய 7 போட்டிகளில், ஐந்தில் தோல்வியடைந்த சென்னை அணி, எஞ்சியுள்ள போட்டிகளில் அதிக அளவு வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

போட்டி முடிந்த பிறகு பேசிய தோனி, கடந்த போட்டியில் நடந்தது பற்றி கவலைப்படாமல், அதை மறந்துவிட்டு, அடுத்த போட்டியை சந்திக்க வேண்டும் என்று அணி வீரர்களிடம் தொடர்ந்து தான் கூறி வருவதாக குறிப்பிட்டார்.

உண்மை தான், சிஎஸ்கே வீரர்களின் பேட்டிங் பல போட்டிகளில் மறக்க வேண்டிய ஒன்றாகதான் உள்ளது. ஆனால், இந்த பங்களிப்பு இப்படியே தொடருமானால், 2020 ஐபிஎல் தொடரையே மறக்க வேண்டிய நிலை சிஎஸ்கே அணிக்கு ஏற்படலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: