டி20 பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 5 சுவாரஸ்ய அம்சங்கள்

கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கிய பெண்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வருகிறது.

இன்று, பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கி மார்ச் 8-ஆம் தேதி வரை இந்த ஆண்டு பெண்கள் டி20 உலகக்கோப்பை நடக்கவுள்ளது.

இந்த தொடரை ஆஸ்திரேலியா நடத்தவுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி சிட்னியில் நடக்கவுள்ளது.

இந்த ஆண்டு இந்த தொடரில் 10 அணிகள் விளையாடவுள்ளன. டி20 உலகக்கோப்பையை நீங்கள் ஏன் பார்க்க வேண்டும் என்பதற்கு இந்த ஐந்து காரணங்கள்.

1. அசத்த வைக்கும் பேட்டிங் வரிசை

ஹர்மன்ப்ரீத் கெளர் தலைமையில் இந்த டி20 உலகக்கோப்பையில் விளையாடவுள்ள இந்திய அணியில் ஹர்மன்ப்ரீத் கெளர் மற்றும் ஸ்ம்ரிதி மந்தானா ஆகிய இருவரும் அதிரடி பேட்ஸ்வுமன்கள். அதேவேளையில் பந்துவீச்சில் ராதா யாதவ், பூனம் யாதவ் மற்றும் ராஜேஸ்வரி கெய்க்வாட் ஆகிய வீராங்கனைகள் சிறப்பாக ஜொலித்து வருகின்றனர்.

இதற்கும் மேலாக தீப்தி சர்மா, ஷிகா பாண்டே மற்றும் பூஜா வாஸ்திராகர் ஆகிய மூவரும் பேட்டிங், பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் நன்கு பங்களித்து வருகின்றனர்.

2. முதல்முறையாக களமிறங்கும் தாய்லாந்து

பெண்கள் டி20 உலகக்கோப்பையில் 10 அணிகள் விளையாடுகின்றன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம், தாய்லந்து மற்றும் பாகிஸ்தான் ஆகியவைதான் இந்த 10 அணிகள்.

டி20 உலகக்கோப்பையில் விளையாட முதல்முறையாக தாய்லாந்து தகுதி பெற்றுள்ளது. அதனால் இந்த புதிய அணி மீதான கவனம் மற்றும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

3. இளம்வீராங்கனைகளின் சாகசம்

இந்த முறை அனைத்து அணிகளிலும் உள்ள இளம் வீரர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்திய அணியில் 16 வயதேயான ஷெஃபாலி வர்மா, 19 வயதில் உள்ள ஜெமிமா ரொட்ரிக்ஸ் மற்றும் ராதா யாதவ் ஆகியோர் மீது அதிக கவனம் உள்ளது.

இந்திய அணி மட்டுமல்ல நியூசிலாந்து அணியிலும் 18 வயதான அமெலியா கெர் அதிரடியாக விளையாடி வருகிறார். அயர்லாந்துக்கு எதிராக 2018 ஜுன் மாதத்தில் நடந்த போட்டியில் இவர் 155 பந்துகளில் 232 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

4. புதிய பயிற்சியாளர், புதிய திட்டங்கள்

இந்த ஆண்டு (2020) டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி புதிய பயிற்சியாளர் மற்றும் புதிய திட்டத்துடன் களமிங்குகிறது. இந்த தொடரில் அணியின் புதிய பயிற்சியாளராக டபுள்யு.வி. ராமன் அணியுடன் செல்கிறார்.

2018 டி20 உலகக்கோப்பையின்போது நடந்த சர்ச்சைகள் பலருக்கும் நினைவிருக்கலாம். இந்த தொடரில் அரையிறுதி போட்டியில் விளையாட தனக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று அப்போது இருந்த பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது கடுமையான குற்றச்சாட்டு சுமத்தினார் அணியின் மூத்த வீராங்கனையான மித்தாலி ராஜ்.

இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்து பயிற்சியாளராக டபுள்யு.வி. ராமன் நியமிக்கப்பட்டார். தலைமை பயிற்சியாளருக்கு பெரும் சவால் காத்திருக்கிறது. என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.

5. மார்ச் 8-இல் நடக்கும் இறுதி போட்டி

பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் மார்ச் 3 வரை நடக்கவுள்ளது. அரையிறுதி போட்டி மார்ச் 5-ஆம் தேதி தொடங்கவுள்ளது. சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8-ஆம் தேதியன்று பெண்கள் டி20 உலகக்கோப்பையின் இறுதி போட்டி நடக்கவுள்ளது. அதிக அளவில் மக்களை இறுதிப்போட்டிக்கு ஈர்க்கவே இறுதி போட்டி மார்ச் 8-ஆம் தேதியன்று நடத்தப்படுகிறது.

இதுவரை எந்த பெண்கள் விளையாட்டு தொடரின் இறுதி போட்டிக்கும் வந்த ரசிகர்கள் கூட்டத்தையும்விட அதிக கூட்டம் மார்ச் 8-ஆம் தேதி நடக்கும் இறுதிபோட்டிக்கு வரும் என்று இந்த போட்டி தொடரின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

1999-இல் அமெரிக்கா மற்றும் சீனா இடையே நடந்த கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் வந்த மக்கள் கூட்டத்தைவிட தற்போது நடக்கவுள்ள இறுதி போட்டியில் அதிகம் பேர் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: