You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
CAA Protest: 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' முழக்கம் எழுப்பிய மாணவியின் தந்தை பாஜக ஆதரவாளரா?
பெங்களூருவில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று கோஷம் எழுப்பிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது பெங்களூரு காவல் துறையால் தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
'சேவ் கான்ஸ்டிட்யூஷன்' எனும் கூட்டமைப்பினரால் வியாழன்று தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் ஒன்று பெங்களூருவில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
இதில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி கலந்து கொண்டார்.
ஒவைசி மேடைக்கு வந்த சமயத்தில், பேசிக்கொண்டிருந்த அமுல்யா லியோனா எனும் பெண் தனது உரையின் நடுவே 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று முழக்கமிடத் தொடங்கினார். அதற்கு ஒவைசி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவரிடம் இருந்த ஒலிபெருக்கியை பிடுங்கிக்கொண்டு அவரது உரையை பாதியில் நிறுத்தவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முயன்றனர்.
அப்போது 'இந்துஸ்தான் ஜிந்தாபாத்' என்று முழக்கமிடத் தொடங்கினார்.
இரு முழக்கங்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை கூற அவர் முற்பட்டபோது, மேடையில் இருந்து காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார்.
அவருக்கு பின் உரையாற்றிய ஒவைசி அப்பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் தனக்கோ தனது கட்சியினருக்கோ அவருடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று விளக்கமளித்தார்.
"நாங்கள் இந்தியாவை ஆதரிப்பவர்கள். எதிரி நாடான பாகிஸ்தானை ஆதரிக்கவில்லை. நமது நோக்கம் இந்திய அரசமைப்பு சட்டத்தை பாதுகாப்பது," என்று தெரிவித்தார்.
மாணவியின் தந்தை பாஜக ஆதரவாளரா?
பெங்களூருவில் உள்ள கல்லூரி ஒன்றில் பயிலும் லியோனா கன்னடத்தில் தனது ஆவேசமான பேச்சுகளுக்காக பிரபலமானார்.
லியோனா முழக்கமிடும் காணொளி சமூக ஊடகங்களில் பிரபலமானதும், சிக்கமங்களூருவில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற சிலர் அவரது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை 'பாரத் மாதா கீ ஜே' என்று கட்டாயப்படுத்தி கூறவைத்தனர்.
அவர் தனது மகளை சரியாக வளர்க்கவில்லை என்றும் அவரிடம் கூறினர். இந்த சம்பவம் காணொளியாக பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
"லியோனாவின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். பலரும் கூறுவதுபோல அவரை மிரட்டியவர்கள் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல," என்று சிக்கமங்களூரு காவல் கண்காணிப்பாளர் ஹரீஷ் பாண்டே பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியது முதல் என் மகள் படிப்பில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை என்று அவரது தந்தை ஆஸ்வால்டு நொரோனா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு பணியாற்றிய ஆஸ்வால்டு மக்களவைத் தேர்தலிலும் பாஜகவுக்கு வாக்களித்ததாக கூறுகிறார்.
"என் வீட்டுக்கு வந்து மிரட்டியவர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள். அவர்கள் எனது ஊரைச் சேர்ந்தவர்கள்தான். சில வெளியூர் காரர்களும் அவர்களில் இருக்கலாம். நான் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தேன். மோசமான சாலைகள் காரணமாக காவல்துறையினர் வந்து சேர தாமதம் ஆகியிருக்கலாம்," என்றார் அவர்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்