இந்தியா v ஆஸ்திரேலியா: கேதர் ஜாதவ், தோனி பொறுப்பான ஆட்டம்: இந்தியா வெற்றி

தோனி

பட மூலாதாரம், DANIEL KALISZ

இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா மேற்கொண்டுள்ள சுற்றுப்பணத்தில் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என ஆஸ்திரேலியா வென்ற நிலையில் தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 1: 0 என்ற நிலையில் வெற்றியோடு தொடங்கியுள்ளது.

சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிடம் டி20 தொடரை பறிகொடுத்த நிலையில், ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியாவை தோல்வி அடையச் செய்யும் முனைப்பில் கோலி அணி இன்று விளையாடியது.

இன்று ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் அணித்தலைவர் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார்.

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்திருந்தது.

குல்தீப் யாதவ் பந்தில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்பை ஸ்டம்பிங் செய்த தோனி.

பட மூலாதாரம், Robert Cianflone

படக்குறிப்பு, குல்தீப் யாதவ் பந்தில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்பை ஸ்டம்பிங் செய்த தோனி.

237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய இந்தியாவுக்கு முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார் ஷிகர் தவான்.

தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் மெதுவாக ஆடி இந்தியாவின் ரன்களை அதிகரிக்க முயற்சித்தனர்.

இந்தியா 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோலியும் ஆட்டமிழக்க ரன் குவிப்பு மட்டுப்படுத்தப்பட்டது.

அம்படி ராய்டு 13 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

66 பந்துகளை எதிர்கொண்டு 37 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் ஷர்மாவும் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த தோனியும் கேதர் ஜாதவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் கேதர் ஜாதவ்

பட மூலாதாரம், Robert Cianflone/Getty Images

படக்குறிப்பு, பந்தை பவுண்டரிக்கு விரட்டும் கேதர் ஜாதவ்

கேதர் ஜாதவ் 87 பந்துகளில் 81 ரன்களும், தோனி 72 பந்துகளை சந்தித்து 59 ரன்களும் எடுத்து இந்த போட்டியை வெற்றியில் முடிவதை உறுதி செய்தனர்.

ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களான நாதன் கொல்டர்-நைல், ஆடம் சாம்பா இருவரும் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

முன்னதாக தொடக்க வீரர் ஆரோன் பின்ச்சை டக் அவுட் செய்தார் பும்ரா. பின்ச் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அஷ்டன் டர்னர்

பட மூலாதாரம், Robert Cianflone

படக்குறிப்பு, அஷ்டன் டர்னர்

பொறுப்புடன் விளையாடிய உஸ்மான் கவாஜா 76 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 37 ரன்களில் ஆட்டமிழந்தார்.

டி20 தொடரில் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு வழிவகுத்த மேக்ஸ்வெல் இப்போட்டியில் 51 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.

அஷ்டன் டர்னர் 23 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பௌண்டரி விளாசி 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

173 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது ஆஸ்திரேலியா. அதன் பின்னர் அலெக்ஸ் கரே, நாதன் கோல்டர் நைல் இருவரும் இணைந்து பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.

நாதன் கோல்டர் நைல் 27 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். அவரது விக்கெட்டை பும்ரா கைப்பற்றினார்.

தோனி

பட மூலாதாரம், Robert Cianflone/Getty Images

குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகளைச் சாய்த்தார். ஷமி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். பும்ரா 10 ஓவர்களில் 60 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்திய அணியில் விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டனர். ரிஷப் பந்த், லோகேஷ் ராகுல், சித்தார்த் கவுல், யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கிடைக்கவில்லை.

ஆஸ்திரேலிய அணியில் ஆன்ரூ டை, நாதன் லியன், ஜை ரிச்சர்ட்ஸன், டி ஆர்சி ஷார்ட் ஆகியோருக்கு இடம் கிடைக்க வில்லை.

உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்தியா விளையாடும் கடைசி ஒருநாள் தொடர் என்பதால் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: