இந்திய எல்லை அருகே பாதி வழியில் இறக்கிவிடப்பட்ட பாகிஸ்தான் பயணிகள்

பட மூலாதாரம், Twitter
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ்: "நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பாகிஸ்தான் பயணிகளுக்கு உணவு அளித்த இந்திய காவல்துறை"
இந்திய எல்லைக்குள் இருக்கும் அட்டாரி ரயில் நிலையம் அருகே நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பாகிஸ்தானி பயணிகளுக்கு இந்தியா சார்பில் உணவளிக்கப்பட்டதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"இந்தியாவுக்கு இயக்கப்படும் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்படுவதாக பாகிஸ்தான் நேற்று திடீரென அறிவித்தது.
இதனால் கராச்சியில் இருந்து நேற்று புறப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில், லாகூர் வரை வந்தது. அந்த ரயிலில் இந்தியாவுக்குப் பயணித்த 16 பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். அடுத்த அறிவிப்பு வரும் வரை சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படாது எனவும் பாகிஸ்தான் ரயில்வே அதிகாரிகள் அறிவித்தனர்.
இதனிடையே நடு வழியில் இறக்கிவிடப்பட்ட பாகிஸ்தான் பயணிகள், அட்டாரி ரயில் நிலையத்துக்கு வெளியே, அநாதரவாக நின்றனர். அமிர்தசரஸ் அருகே இருந்த அவர்களுக்கு இந்திய காவல்துறை சார்பில் உணவு அளிக்கப்பட்டது," என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி: "ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட முடியாது"

பட மூலாதாரம், ARUN SANKAR
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், "ஆலையால் எந்த பாதிப்பும் இல்லை என்பதை தேசிய பசுமை தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது. தற்போது ஆலையை உடனே திறக்க வேண்டும் என்று கேட்கவில்லை. ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திறக்க அனுமதிக்க வேண்டும்" என வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தற்போது ஆலை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், அபாயகரமான கழிவு மேலாண்மையில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பில், 'தொடர்ந்து மாசு ஏற்படுத்தியதால் தான் அந்த ஆலைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. இந்த ஆலையால் 28 ஆயிரம் அடி ஆழத்துக்கு நிலத்தடிநீர் மாசடைந்துள்ளது. ஆலையில் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பில்லை. அப்படி ஏற்பட்டால் அதற்கு அரசு பொறுப்பேற்கும்' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், 'ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எந்தவொரு இடைக்கால உத்தரவும் இப்போது பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் 27ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்' என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

தினமணி: அரசுப் போட்டித் தேர்வு எழுதி ஒரேநேரத்தில் பணி நியமனம் பெற்ற தாய், மகள்

பட மூலாதாரம், Facebook
தேனி மாவட்டம், தேவதானப்பட்டியைச் சேர்ந்த தாயும் மகளும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்- 4 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற்று ஒரே நேரத்தில் பணி நியமனம் பெற்றுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
"தேவதானப்பட்டி விவசாயி ராமச்சந்திரன் மனைவி சாந்திலட்சுமி (48). பி.எஸ்.சி.,படித்துள்ளார். மகள் தேன்மொழி (27) எம்.ஏ. படித்துள்ளார். ராமச்சந்திரன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். சாந்திலட்சுமி, தேன்மொழி ஆகியோர் தேனியில் திண்ணை அமைப்பின் சார்பில் செயல்பட்டு வரும் அரசு போட்டித் தேர்வு இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற குரூப்- 4 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை எழுதிய இருவரும் தேர்வில் வெற்றி பெற்றனர். கலந்தாய்வு மூலம் சாந்திலட்சுமி பொது சுகாதாரத் துறை மருந்தகப் பிரிவிலும், தேன்மொழி இந்து சமய அறநிலையத்துறையில் இளநிலை உதவியாளராகவும் பணி நியமன ஆணை பெற்றுள்ளனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "இன்ஜினியரிங் கலந்தாய்வைநடத்துவது யார்?"

பட மூலாதாரம், Getty Images
இந்தாண்டு முதல் தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்த முடியாது என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் அறிவித்துள்ள நிலையில், அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் நேற்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், இந்தாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முடிவை மறுபரிசீலனை செய்வதற்கு அதன் துணை வேந்தர் சூரப்பா வாய்ப்பே இல்லை என்று அறிவித்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி பல்வேறு தரப்பினரிடையே எழுந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












