டி20 தொடர்: இங்கிலாந்தை இந்தியா வீழ்த்தியது எப்படி? 5 சுவாரசிய தகவல்கள்

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டித் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வெல்ல, நேற்று பிரிஸ்டோலில் நடந்த வெற்றியை நிர்ணயிக்கும் முக்கியமான போட்டியில் இந்தியா வென்று தொடரையும் கைப்பற்றியது.

இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டி, 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

நேற்று பிரிஸ்டோலில் நடந்த போட்டியின் 5 முக்கிய அம்சங்கள்:

1. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இங்கிலாந்தின் தொடக்க வீரர்களான பட்லர் மற்றும் ராய் முதல் எட்டு ஓவர்களுக்கு இந்திய அணியின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் அடிக்க, பட்லர் 34 ரன்களிலும், ராய் 67 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

2. அதன் பிறகு களமிறங்கிய வீரர்களான ஹேல்ஸ் (30), ஸ்டோக்ஸ் (14), பேர்ஸ்டோவ் (25) ஆகியோர் விரைவில் பெவிலியனுக்கு திரும்ப, மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இருபது ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை குவித்தது. இந்திய வீரர்களில் பாண்டியா 4, கௌல் 2 விக்கெட்டுகளையும் சாகர் மற்றும் உமேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

3. அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஷிகர் தவான் (5) ஆட்டமிழந்ததால் தொடக்கமே சொதப்பலாக இருந்தது. இருந்தபோதிலும், ரோஹித் ஷர்மா முதல் ஓவரிலிருந்தே சிக்ஸரும், பௌண்டரியுமாக விளாச அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் அதிகரித்தது. இடையில் ராகுல் 19 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த விராத் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.

4. எதிர்பாராத விதமாக அடுத்து களமிறங்கிய பாண்டியா தொடக்கம் முதலே அடித்து விளையாட, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டியில் தனது மூன்றாவது சதத்தை 56 பந்துகளில் பதிவு செய்தார். இந்நிலையில், ஆட்டத்தில் 8 பந்துகள் மீதமிருந்த நிலையில், ஹர்திக் பாண்டியா சிக்சர் அடித்து இந்திய அணியை வெற்றிக் கோட்டுக்கு இட்டுச்சென்றார்.

5. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்துடனான டி20 தொடரை 2-1 கணக்கில் இந்தியா வென்றது. மேலும், இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு சர்வதேச இருபது ஓவர் தொடர்களை வென்று சாதனை படைத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :