"பல பளுதூக்கும் வீரர்களை என் மகன் உருவாக்குவான்" - தங்கம் வென்ற சதீஷின் தந்தை

பட மூலாதாரம், Satish Kumar Sivalingam/Facebook
'என் மகன் போல வரணும்னு இங்க உள்ள பசங்க ஆசைப்படுதுங்க. சதீஷும் அவங்களுக்கு பயிற்சி அளிக்க ஆர்வமா இருக்கான்' - வெள்ளந்தியான மொழியில் பேசுகிறார் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ் குமாரின் தந்தை சிவலிங்கம்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில், 77 கிலோ பளு தூக்கும் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சதீஷ் குமார் சிவலிங்கம் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ் குமார் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவர்.

சதீஷின் வெற்றி குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவரது தந்தை சிவலிங்கம், இரண்டு நாட்களாக பெறும் பதட்டத்துடன் இருந்ததாகவும், தற்போது அளவில்லா மகிழ்ச்சியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
"இதற்காக சதீஷ் கடினமாக உழைத்தார். தொலைக்காட்சியை பார்த்துதான் அவர் வெற்றி பெற்றார் என்று தெரிந்து கொண்டோம்" என சிவலிங்கம் தெரிவித்தார்.
முன்னாள் ராணுவ வீரரான சிவலிங்கமும் பளுதூக்கும் வீரர் ஆவார். அவரை பார்த்தே சதீஷுக்கும் இதில் ஆர்வம் வந்ததாக தெரிகிறது.

சதீஷ் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, பளு தூக்கும் போட்டியில் வென்றுள்ளார். அப்போது அவரது பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சதீஷின் ஆர்வம் குறித்து தன்னிடம் கூறியதாக குறிப்பிடுகிறார் தந்தை சிவலிங்கம்.
சிவலிங்கம் தற்போது வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வருகிறார்.
"சதீஷின் அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டிதான்" என்று சிவலிங்கம் உறுதியாக கூறுகிறார்.

பட மூலாதாரம், Satish Kumar Sivalingam/Facebook
தங்கள் ஊரில் இருக்கும் சிறுவர்கள் சிலர் "நாங்க சதீஷ் அண்ணா மாதிரி வரணும்னு ஆசைபடுறோம்" என்று கூறுவதாக பெருமையடைகிறார் சிவலிங்கம்.
பளுதூக்குவதில் ஆர்வம் இருந்தும் பயிற்சி எடுத்துக் கொள்ள முடியாத ஏழை மாணவர்களுக்கு நிச்சயம் சதீஷ் பயிற்சி அளிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சதீஷின் வெற்றி குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவரின் தாய் தெய்வானை, "இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே அவரது குறிக்கோளாக இருந்தது. அடுத்தது அவர் ஒலிம்பிக்கிலும் வெற்றி பெறுவார் என நம்புகிறோம்" என்றார்.

பள்ளிப் படிப்பு படிக்கும் போதே காலை 4 மணி நேரம், மாலை 4 மணி நேரம் அவர் பயிற்சி எடுப்பார் என்றும் தற்போது சதீஷ் நடத்தி வரும் ஜிம்மில் பலருக்கு சதீஷும் அவரது தந்தையும் பயிற்சி அளித்து வருகின்றனர் என்று தெய்வானை தெரிவித்தார்.
தற்போது நாட்டுக்காக சதீஷ் தங்கம் வென்றுள்ளது தமக்கு பெருமையாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












