2017: விளையாட்டு உலகின் சாதனைகள், சுவாரஸ்யங்கள் மற்றும் சர்ச்சைகள்

விளையாட்டு உலகில் 2017- ஆம் ஆண்டு நடந்த சாதனைகள், சுவாரஸ்ய நிகழ்வுகள் மற்றும் சர்ச்சைகளை விளக்கும் தொகுப்பு இது.

வரலாற்று சாதனை நிகழ்த்திய ரஃபேல் நடால்

10-ஆவது முறையாக ஃபிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று ரஃபேல் நடால் சாதனை படைத்தார்.

2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014 மற்றும் 2017 ஆண்டுகளில் ஃபிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார் நடால்.

சாதித்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

இந்தியாவில் ஆண்கள் கிரிக்கெட் அணிக்கே பெரும்பாலும் அங்கீகாரம் மற்றும் பாராட்டுகள் கிடைப்பது வழக்கம். ஆனால், விதிவிலக்காக 2017-ஆம் ஆண்டில் இந்திய மகளிர் அணியின் சாதனைகள் பெரிதும் பாராட்டப்பட்டன.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில் நூலிழையில் தோற்ற இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டாலும், ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியை எட்டியதற்கு இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜின் பங்கும், தலைமையும் காரணமாக கூறப்பட்டது.

மெஸ்ஸியின் திருமணமும், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையும்

அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லயோனல் மெஸ்ஸி, தனது குழந்தை பருவ அன்புத்தோழியை திருமணம் செய்துகொண்டார். அவரது சொந்த ஊரில் நடந்த இத்திருமணம் ''நூற்றாண்டின் திருமணம்'' என வர்ணிக்கப்பட்டது.

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் பலோன் டி ஆர் (Ballon d'Or) விருதை பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்தாவது முறையாக வென்றார்.

கால்பந்து அரங்கில் மிகவும் மதிக்கப்படும் விருதுகளில் இந்த விருதை ஏற்கனவே 2008, 2013, 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் ரொனால்டோ வென்றிருந்தார்.

பேட்மிண்டன் சாதனையாளர்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, 2017-ஆம் ஆண்டில் மேலும் பல சாதனைகள் நிகழ்த்தினார்.

சில பட்டங்களை அவர் தவறவிட்டாலும், தற்போது ஒற்றையர் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் சிந்து உள்ளார்.

இந்தோனேசியா சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற கிடாம்பி ஸ்ரீகாந்த், தொடர்ந்து ஆஸ்திரேலிய சூப்பர் சீரீஸ், டென்மார்க் ஓபன் மற்றும் ஃபிரஞ்சு ஓபன் என பல பட்டங்களை பெற்றார்.

மேலும் தரவரிசையில் தற்போது நான்காவது இடத்தில் உள்ள ஸ்ரீகாந்த் இந்தியாவில் பேட்மிண்டன் விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தினார் என்பது மிகையாகாது.

அதிக வயதில் விம்பிள்டன் பட்டத்தை வென்ற பெடரர்

2017-ஆம் ஆண்டுக்கான விம்பிள்டன் பட்டத்தை வென்றதன் மூலம், ஆண்கள் பிரிவில் மிக அதிக வயதில் விம்பிள்டன் பட்டத்தை வென்றவர் என்ற சாதனை உட்பட பல்வேறு சாதனைகளை ரோஜர் பெடரர் படைத்தார்.

விம்பிள்டன் வரலாற்றில் 8 முறை கோப்பை வென்ற முதல் ஆடவர் என்ற பெருமையும் ரோஜர் பெடரருக்கு கிடைத்தது. 35 வயதாகும் ரோஜர் பெடரர் வென்றுள்ள 19-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

ஊக்க மருந்து சர்ச்சையால் ரஷ்யாவுக்கு தடை

தென் கொரியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவிற்கு சர்வதேச ஒலிம்பிக் குழு தடை விதித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு சூச்சி நகரில் ரஷ்யா சார்பில் நடத்தப்பட்ட ஒலிம்பிக் போட்டியில் அரசு ஆதரவுப்பெற்ற ஊக்க மருந்து பயன்பாடு இருந்தததாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையையடுத்து சர்வதேச ஒலிம்பிக் குழு இதனை அறிவித்துள்ளது.

ஆனால், ஊக்க மருந்து சோதனையை எதிர்கொண்டு தங்களை நிரூபிக்கும் பட்சத்தில் ஒரு நடுநிலை கொடியுடன் ரஷ்ய தடகள வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று அக்குழு தெரிவித்துள்ளது.

விடைபெற்றார் உலகின் அதிவேக மனிதன்

வரலாற்றின் மிக அதிக வேக மனிதர் என்று கருதப்பட்ட ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் லண்டனில் நடைபெற்ற சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியுடன் தடகள விளையாட்டு போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்.

தனது தடகள வாழ்வின் கடைசி சர்வதேசப் போட்டியில் தங்கம் வெல்ல விரும்பிய ஜமைக்க வீரர் உசைன் போல்ட்டின் கனவு நிறைவேறாமல் போனது.

2017-இல் தொடர்ந்த இந்திய அணியின் வெற்றி பயணம்

2017-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது என்றே கூற வேண்டும்.

2017-இல் 4 டெஸ்ட் தொடரில் விளையாடி நான்கிலும் இந்திய அணி வென்றது. இலங்கைக்கு எதிராக 2 முறை வென்ற இந்தியா, வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியது.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடர்களில் வென்ற இந்தியா, சாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது.

அனுபவம் வாய்ந்த மட்டைவீச்சாளர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் மட்டுமல்ல, இளம் வீர்களான கேதார் ஜாதவ், குல்தீப், அக்சர் பட்டேல், சாஹல் மற்றும் பூம்ரா போன்றோரும் சிறப்பாக பங்களித்தனர்.

கர்ப்பகாலத்தில் கடின விளையாட்டு: சாதனை நிகழ்த்திய செரீனா

2017-ஆம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை செரீனா வில்லியம்ஸ் வென்றார். கர்ப்பமாக இருந்தபோதே அவர் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றுள்ளார் என்பதை பலரால் நம்பமுடியவில்லை.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் செரீனா வில்லியம்ஸூக்கு .புளோரிடா மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

23 முறை கிராண்ட்ஸ்லாம்கள் வென்றுள்ள நட்சத்திர வீராங்கனையான செரீனா, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக அண்மையில் தெரிவித்தார்.

கோலிக்கு 'டும்..டும்..டும்..'

2017-ஆம் ஆண்டு இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை இத்தாலியில் டிசம்பர் 11-ஆம் தேதியன்று திருமணம் செய்துகொண்டார்.

இந்த ஆண்டு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் ஜொலித்த கோலியின் திருமண வரவேற்புக்கு ஏரளாமானோர் நேரில் வாழ்த்து தெரிவித்த நிலையில், சமூகவலைத்தளங்களிலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :