இந்தியா - இலங்கை கிரிக்கெட்: 9-0 - இந்தியாவின் அபார வெற்றிக்கு 5 முக்கிய காரணங்கள்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே கொழும்பில் புதன்கிழமை நடந்த டி-20 சர்வதேச போட்டியில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 என இலங்கை சுற்றுப்பயணத்தில் நடந்த 9 போட்டிகளிலும் வென்று 100% வெற்றியை ஈட்டியுள்ளது.

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் முதல்முறையாக நடைபெற்ற அனைத்து சர்வதேச போட்டி வடிவங்களிலும் இந்தியா வென்றுள்ளது.

இலங்கை போன்ற பலமிக்க அணியுடன் இந்தியா மோதும் போட்டிகள் கடும் சவால் நிரம்பியதாக இருக்கும். ஆனால், இம்முறை 9-0 என அனைத்து போட்டிகளிலும் இந்தியா எளிதாக வென்றதற்கு காரணம் இந்திய அணியின் பலமா அல்லது இலங்கை அணியின் பலவீனம் மற்றும் நம்பிக்கையின்மையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் முழுமையான வெற்றிக்கும், இலங்கை அணியின் படுதோல்விக்கும் என்ன காரணங்கள் என்று இங்கே காண்போம்.

  • ஆரம்பம் முதலே தடுமாறிய இலங்கை அணி

இந்த சுற்றுப்பயணத்தில் மிக ஆபூர்வமான தருணங்களை தவிர இலங்கை அணி மகிழ்வடைய அதன் பங்கு அமையவில்லை.

கடந்த மாதத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், 3 டெஸ்ட் போட்டிகளையும் சிறப்பாக வென்று இலங்கை அணிக்கு இந்திய அணி பெரும் அதிர்ச்சியளித்தது.

இலங்கை மண்ணில் 3-0 என்று முதல்முறையாக டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணிக்கு, டெஸ்ட் தொடரின் மகத்தான வெற்றி ஒருநாள் போட்டி தொடரை நம்பிக்கையுடன் தொடங்க உதவியது.

அதற்கு பிறகு நடந்த ஒருநாள் தொடரில் , ஓரிரு போட்டிகளில் இலங்கை அணி சவால் அளித்தாலும், இறுதியில் இந்தியா 5-0 என ஒருநாள் தொடரை வென்றது.

தற்போது டி20 போட்டியையும் வென்று இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணத்தில் 100% வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணம் டெஸ்ட் தொடர் முதலே இலங்கை அணி கடுமையாக தடுமாறிவந்த்தும், நம்பிக்கையின்றி விளையாடியதும்தான்.

  • 'தேவைப்பட்டால் நிதான ஆட்டம், இல்லையெனில் அதிரடி பாணி'

இலங்கை சுற்றுப்பயணத்தில் முதலில் நடந்த டெஸ்ட் தொடரிலும், ஒருநாள் போட்டி தொடர், டீ-20 போட்டி என இந்திய அணி 100% வெற்றி பெற்றதற்கு இந்திய மட்டைவீச்சாளர்களின் அதிரடியும், நிதானமும் கலந்த பாணி பெரிதும் உதவியது.

இந்த தொடரில் தனது அதிரடி கலந்த பக்குவமான ஆட்டத்தை பல போட்டிகளில் அணித்தலைவர் கோலி வெளிப்படுத்தியுள்ளார். இந்த தொடரில் இந்திய தரப்பில் மிக குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர்களில் கோலியும் ஒருவர் ஆவார்.

இத்தொடரில் முக்கிய தருணங்களில் விக்கெட்டுக்களை இழந்து இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்த போது, ரோகித், தவான் போன்றோரின் அதிரடி ஆட்டம், புவனேஸ்வர்குமார் மற்றும் டோனியின் நிதான ஆட்டம் ஆகியவை உதவியுள்ளன.

இதேபோல் அவ்வப்போது கே. எல். ராகுல், மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ் ஆகியோரும் சிறப்பாக பங்களித்தனர்.

துல்லியம் தவறாத இந்திய பந்துவீச்சாளர்கள்

இலங்கை தொடரில் இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் மற்றும் வேகப் பந்துவீச்சாளர்கள் என இரு தரப்பும் சிறப்பாக செயல்பட்டன.

விக்கெட்டுகள் வீழ்த்துவது மற்றும் ரன்களை கட்டுப்படுத்துவது என்று தங்கள் பணியில் சிறந்து விளங்கிய இந்திய பந்துவீச்சாளர்கள் இலங்கை அணிக்கு கடும் சவால் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தினர்.

அண்மையில் முடிவடைந்த ஒருநாள் தொடரில், நான்கு போட்டிகளில் இந்தியா இரண்டாவதாக பேட் செய்த நிலையில், குறைந்த அளவு இலக்கு நிர்ணயிக்க முடிந்ததற்கு முக்கிய காரணம் இந்திய பந்துவீச்சாளர்கள்தான்.

இதே போல், டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 என்று வென்றதற்கு இந்திய சுழல் பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சு உதவியது.

  • அனுபவமில்லாத இலங்கை மட்டைவீச்சாளர்கள்

இத்தொடரில் பல போட்டிகளிலும் இந்தியா இரண்டாவது பேட் செய்து வென்றதற்கு காரணம் இலங்கை அணி சவால் தரும் வகையில் ரன்களை குவிக்காததுதான் .

மூத்த மற்றும் அனுபவம் மிகுந்த வீரர்கள் அணியில் அதிகம் இல்லாதது இலங்கை அணிக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கியது.

சில போட்டிகளில் அணியின் வலுவான நிலையை பின்னர் களமிறங்கிய வீரர்கள் வீணடித்துவிட்டனர். இதே போல் நிலைத்து விளையாடாத இலங்கை மட்டைவீச்சாளர்களால் பெரும் எண்ணிக்கையை குவிக்கமுடியவில்லை.

  • இலங்கையின் சுழல் மற்றும் வேகப்பந்துவீச்சு வீழ்ச்சி?

டெஸ்ட் தொடரில் ஓரிரு இலங்கை பந்துவீச்சளர்கள் நன்றாக செயல்பட்டனர்.

ஆனால், பின்னர் நடந்த ஒருநாள் போட்டி தொடரில் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டுக்களை வீழ்த்துவது மற்றும் ரன்களை கட்டுப்படுத்துவது என இரு அம்சங்களிலும் இலங்கை பந்துவீச்சளர்கள் பெரிதும் தோல்வியடைந்தனர்.

தனஞ்ஜயவை தவிர இலங்கை பந்துவீச்சாளர்களில் மற்ற யாரும் எந்த தாக்கமும் ஏற்படுத்தவில்லை.

நம்பிக்கை குறைந்த நிலையில் காணப்பட்ட இலங்கை பந்துவீச்சளர்களால் தங்கள் அணிக்கு கிடைத்த வலுவான நிலையை பயன்படுத்த முடியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :