ஜூனியர் செரீனாவை பெற்றெடுத்தார் செரீனா வில்லியம்ஸ்

டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸூக்கு .புளோரிடா மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

35 வயதாகும் செரீனா, வெஸ்ட் செயின்ட் மேரிஸ் மருத்துவ மையத்தில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

ரெட்டிட் இணையதள நிறுவனத்தின் இணை நிறுவனராக இருக்கும் அலெக்சிஸ் ஒஹனியன், செரீனாவின் துணைவர் ஆவார்.

23 முறை கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ள நட்சத்திர வீராங்கனையான செரீனா, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக கடந்த மாதம் தெரிவித்தார்.

குழந்தை பிறந்துள்ளதால், விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்களிடம் இருந்து செரீனாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி ஆட்டம் ஒன்றில் விளையாடுவதற்கு செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ், விளையாட்டு மைதானத்திற்கு செல்ல தயாராக இருந்த வேளையில் செரீனாவுக்கு குழந்தை பிறந்த இந்த மகிழ்சியான செய்தி வெளியானது.

"நிச்சயமாக. நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன். வார்த்தைகளால் அதனை விளக்க முடியவில்லை" என்று வீனஸ் தெரிவித்துள்ளார்.

செரீனா தம்பதியர் தங்களுக்கு குழந்தை பிறந்துள்ளதை உறுதி செய்து இன்னும் தகவல் வெளியிடவில்லை.

ஆனால், செரீனாவின் பயிற்சியாளர் பேட்ரிக் மௌராடோக்லோவ் வெளிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்களின் மகிழ்ச்சியையும் உணர்கிறேன்" என்று எழுதியுள்ளார்.

"விரைவாக இயல்பு நிலைக்கு மீண்டு வர வாழ்த்துகிறேன். நமக்கு முன்னால் அதிக பணிகள் உள்ளன" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்செயலாக வெளியான செய்தி

"சினாப்சாட்" தளத்தில் தவறுதலாக பதிவிட்ட புகைப்படம் ஒன்றால், தற்செயலாக ஏப்ரல் மாதம் தான் கர்ப்பமாகி இருப்பதை செரீனா ஒப்பு கொண்டார்.

அவர் கர்ப்பமாக இருந்தபோது, விளையாடிய ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கோப்பையை வென்றார். கடந்த மாதம் 'வோக்" சஞ்சிகையில் வெளியான கட்டுரை ஒன்றில், அந்தப் போட்டியில் பெற்றிருக்கும் முதலிடத்தை தக்க வைத்து கொள்ள விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.

"இது பெரும் மூர்க்கத்தனமான திட்டம்" என்று தெரிவித்த அவர், "அந்த போட்டியில் விளையாட வேண்டும். அது ஏறக்குறைய குழந்தை பிறந்த மூன்று மாதங்களில் விளையாடுவதாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்,

கடந்த ஜூன் மாதம் வெளியான 'வேனிட்டி ஃபேர்' என்ற சஞ்சிகையின் முன்பக்க அட்டைப்படத்தில் நிர்வாணமாக தோன்றிய செரீனா, "ஒரு குழந்தையை பெற்ற பின்னர் என்ன செய்ய வேண்டுமேன தோன்றவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

குவியும் வாழ்த்துக்கள்

செரீனாவுக்கு குழந்தை பிறந்திருக்கும் செய்தி டென்னிஸ் விளையாட்டு உலகை உற்சாகம் அடைய செய்திருக்கிறது. ரஃபேல் நடால் தன்னுடைய வாழ்த்தை முதல் நபராக டுவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

"அவர் டென்னிஸ் விளையாட மாட்டார் என்று நம்புகிறேன்"

"பெண் குழந்தை? நல்லது, இந்த குழந்தை டென்னிஸ் விளாயாட மாட்டார் என்று நம்புகிறேன்" என்று கார்பைன் முகுருஸா நகைச்சுவையாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருப்பதாக ராய்ட்ர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

"வாழ்த்துக்கள் செரீனா" என்ற செய்தியுடன், செரீனா கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை பாடகர் பியோனஸ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :