You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெண் போலீஸ்காரரை அறைந்து அறை வாங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.
இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திய கூட்டம் ஒன்றுக்குச் சென்ற அக்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் பெண் போலீஸ்காரர் ஒருவரை கன்னத்தில் அறைவதாகவும், பதிலுக்கு அந்தப் போலீஸ்காரரும் எம்.எல்.ஏ. அறைவதாகவும் காட்டும் வீடியோ ஒன்றை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அந்த மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இது குறித்து ஆய்வு நடத்துவதற்கான கூட்டம் ஒன்று இமாச்சலப்பிரதேசத் தலைநகர் சிம்லாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வந்திருந்தார்.
இந்தக் கூட்டத்துக்கு வந்த டல்ஹௌசி தொகுதியின் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. ஆஷா குமாரி கூட்டத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நிகழ்விடத்துக்கு வெளியே கூட்டத்தில் சிக்கிக்கொண்ட அவர் பெண் போலீஸ்காரர் ஒருவரை அறைந்துள்ளார். இதையடுத்து அந்த போலீஸ்காரரும் அவரைத் திரும்பி அறைந்துவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ராகுல்காந்தி, காங்கிரஸ் அகிம்சை வழியில் செயல்படும் கட்சி என்றும், எந்தவொரு தலைவரும் கட்சியின் கொள்கைகளை மீறி நடப்பதை அனுமதிக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற விடயத்தை காங்கிரஸ் கட்சி சகித்துக்கொள்ளாது என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராகுல் காந்தி கூறினார். விஷயம் விபரீதமாக செல்வதை உணர்ந்த ஆஷா குமாரி மன்னிப்பு கோரியிருக்கிறார்.
இந்த நிகழ்வின் காணொளியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் டிவிட்டரில் வெளியிட்டது. இந்த விடியோ சமூகத் தளங்களில் வைரலாகப் பரவியபோது, தமது செயலுக்காக ஆஷா குமாரி கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.
ஆஷா குமாரியின் தந்தை மத்னேஷ்வர் சரண்சிங் தேவ் மத்தியப்பிரதேசத்தில் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் இருக்கிறார் ஆஷாகுமாரி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :