You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
35 பந்துகளில் சதம்: டி20 போட்டிகளில் மில்லர் உலக சாதனை
தென் ஆப்ரிக்காவில் நடந்த ஒரு சர்வதேச டி20 போட்டியில் 35 பந்துகளில் சதமடித்து உலக சாதனை படைத்திருக்கிறார் டேவிட் மில்லர். அந்தப் போட்டியில் 36 பந்துகளில் அவர் 101 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடினார்.
அவர் எதிர்கொண்ட 36 பந்துகளில் ஏழு பந்துகள் எல்லைக்கோட்டைத் தொட்டன. ஒன்பது சிக்ஸர்களை அவர் விளாசினார்.
வங்கதேசம் அணி தென் ஆப்ரிக்க மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்ரிக்கா 2-0 என்ற கணக்கில் அபாரமாக வென்றது.
இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் துவங்கியது. இதிலும் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது தென் ஆப்ரிக்கா. டுமினி தலைமையில் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை எதிர்கொண்டது தென் ஆப்ரிக்கா.
முதல் போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்க வென்றிருந்தது. இரண்டாவது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று (ஞாயற்று கிழமை) சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடந்தது. இந்தச் சுற்றுப்பயணத்தில் வங்கதேசம் ஒரு வெற்றி கூட பெறாததால் இந்தப் போட்டி அந்த அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
வங்கதேசம் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. தென் ஆப்ரிக்க அணியின் தொடக்க வீரராக ஹாஷிம் ஆம்லாவும், மங்கலீசோ மோசேலும் களமிறங்கினர். வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் மங்கலீசோ ஐந்து ரன்களிலும் டுமினி நான்கு ரன்களிலும் அவுட் ஆயினர். டி வில்லியர்ஸ் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் ஆம்லாவும், டேவிட் மில்லரும் இணைந்து வேகமாக ரன்களைச் சேர்த்தனர்.
ஆம்லா 51 பந்துகளில் 11 பௌண்டரி, ஒரு சிக்ஸர் உதவியுடன் 85 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின்னர் மில்லர் அதிரடியாக ஆடினார். அவரைக் கட்டுப்படுத்த முடியாமல் வங்கதேச பந்துவீச்சாளர்கள் திணறினார்கள். 23 பந்தில் அரைச் சதம் அடித்து மில்லர் அசத்தினார்.
19-ஆவது ஓவரை சைஃபுத்தீன் வீசினார். அந்த ஓவரில் தொடர்ச்சியாக ஐந்து சிக்ஸர்கள் விளாசி மில்லர் மிரட்டினார். அந்த ஓவரில் மட்டும் 31 ரன்கள் சேர்த்தார் மில்லர். கடந்த 2007 ஆம் ஆண்டில் யுவராஜ் சிங் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டி20 போட்டியில் ஒரே ஓவரில் ஆறு பந்துகளிலும் சிக்ஸர் விளாசி 36 ரன்கள் குவித்தார்.
அதற்கடுத்தபடியாக ஒரே ஓவரில் அதிக ரன்கள் எடுத்தவர் எனும் சாதனையை மில்லர் படைத்திருக்கிறார். முன்னதாக கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஒரு போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லெவிஸ் இந்திய வீரர் ஸ்டூவர் பின்னியின் ஒரு ஓவரில் 31 ரன்கள் எடுத்திருந்தார். அந்தச் சாதனையை மில்லர் சமன் செய்திருக்கிறார்.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் மில்லர் தனது சதத்தை நிறைவு செய்தார். இது சர்வதேச டி20 போட்டியில் மில்லர் அடிக்கும் முதல் சதமாகும். இந்தப் போட்டியில் 83 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா வென்று தொடரையும் ஜெயித்தது.
நேற்றைய போட்டியில் மில்லர் அடித்த சதமே சர்வதேச டி20 போட்டியில் அடிக்கப்பட்ட அதிவேகமான சதமாகும். இதற்கு முன்னதாக நியூசிலாந்து வீரர் ரிச்சர்ட் லெவி 45 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்தது. ஃபாப் டு பிளசிஸ் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் 46 பந்துகள் சதமடித்திருந்தனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :