வேர்க்கடலை ஒவ்வாமைக்கு பிரிட்டிஷ் மருத்துவர்களின் சிகிச்சை

பட மூலாதாரம், BBC World Service
வேர்க்கடலை (கச்சான் கொட்டை அல்லது நிலக்கடலை) உண்ணும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ஒவ்வாமை (அலர்ஜி) நோய்க்கு சாத்தியமான சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளதாக பிரிட்டிஷ் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த பரீட்சார்த்த சிகிச்சை நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கெடுத்த பல குழந்தைகளின் வாழ்க்கை முறை மாறியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சிகிச்சை ஆய்வின் முடிவுகள் மருத்துவ சஞ்சிகையான த லான்சட்-இல் வெளியாகியுள்ளன.
மருத்துவர்கள் கிட்டத்தட்ட 100 சிறார்களுக்கு வேர்க்கடலையின் புரதச் சத்தை அதிகளவில் உண்ணக் கொடுத்துள்ளனர்.
அந்தச் சிறார்களின் உடல் வேர்க்கடலையை ஏற்றுக்கொள்ளும் தன்மையை அதிகரிப்பதற்கே படிப்படியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பரீட்சார்த்த சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டு 6 மாதங்கள் கடந்த நிலையில், அனேகமான சிறார்களிடத்தில் 5 வேர்க்கடலைகளை உடல் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பக்குவம் ஏற்பட்டிருந்தது.
உணவு ஒவ்வாமையில் வேர்க்கடலை ஒவ்வாமையே அனேகமாக உயிராபத்து ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு பாதிப்பை உண்டுபண்ணுகிறது.
இந்த ஒவ்வாமைக்கு இன்னும் முழுமையான சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












