எட்டுமணி நேர தொடர்தூக்கம் அவசியமா?

ஒரு நாளைக்கு தொடர்ச்சியாக எட்டுமணி நேரம் தூங்குவது மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு அவசியம் என்பது தவறான புரிதல் என்று தூக்கம் குறித்து ஆராய்ந்த விஞ்ஞானிகளும், வரலாற்று ஆய்வாளர்களும் தெரிவித்திருக்கிறார்கள்.
மனிதன் ஆரம்பகாலம் தொட்டு ஒரு நாளைக்கு இரண்டுமுறை தூங்கியதாக கூறுகிறார் மனிதர்களின் தூக்கம் குறித்து ஆராய்ந்த வரலாற்றாய்வாளர் கிரெய்க் கோப்ஸ்லோஸ்கி. அதாவது இருட்ட ஆரம்பித்த இரண்டுமணி நேரத்தில் தூங்குவது மனிதர்களின் வாடிக்கை என்று கூறும் இவர், ஏறக்குறைய நான்குமணி நேர தூக்கத்துக்குப் பிறகு மனிதர்கள் தூக்கத்திலிருந்து விழிப்பது இயற்கை என்கிறார்.
இப்படி விழிக்கும் மனிதர்கள், சிறுநீர் கழிப்பது, தண்ணீர் குடிப்பது இல்லாவிட்டால் பாலியல் கலவியில் ஈடுபடுவது என்பது வாடிக்கையாக இருந்ததாகவும், உலகின் சில பகுதிகளில் இந்த சமயத்தில் அண்டை வீட்டுக்காரர்களுடன் சென்று பேசும் வழக்கமெல்லாம் கூட இருந்தது என்றும் வரலாற்று ஆதாரங்களுடன் இவர் கூறுகிறார். ஏறக்குறைய ஒரு மணி நேரம் நீளும் இப்படியான விழிப்பு நிலைக்குப் பிறகு மனிதர்கள் மீண்டும் தூங்கப்போவது இயற்கை என்றும் கூறுகிறார் கிரெய்க் கோப்ஸ்லோஸ்கி.
தூக்கத்தை மாற்றியமைத்த தெருவிளக்குகள்
இந்த நிலை 17 ஆம் நூற்றாண்டில் தான் முதன்முதலில் மாறத்துவங்கியது என்கிறார் அவர். 1667 ஆம் ஆண்டுதான் உலகிலேயே முதல்முறையாக பாரிஸ் நகரில் இரவு தெருவிளக்குகள் தொடர்ந்து எரியத்துவங்கியது. அதுவரை, இரவு என்பது கவுரவ மனிதர்கள் நடமாடக்கூடாத நேரம் என்றே கருதப்பட்டது.

ஆனால் இரவுநேர தெருவிளக்குகள் தொடர்ந்து எரியத்துவங்கியதும், ஐரோப்பிய கண்டத்தில் கிறித்தவத்தின் இருபெரும் பிரிவுகளுக்குள் நிகழ்ந்த தொடர்ச்சியான மோதல்களும் இரவுநேரத்தில் கவுரவமான மனிதர்கள் வெளியில் நடமாடுவதை நாகரிகமான செயலாக மாற்றியதாக கூறும் கிரெய்க் கோப்ஸ்லோஸ்கி, இதனைத் தொடர்ந்து, மனிதர்கள் தங்களின் நேரத்தை மேலதிகமாக சிக்கனாமாக பயன்படுத்த விரும்பியதாக கூறுகிறார்.
இதன் விளைவாக, பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் முன்னிரவில் அதிகநேரம் விழித்திருப்பது என்பது வாடிக்கையாகிவிட்ட சமூக வாழ்வுக்கு மனிதன் வெகுவாக பழகிவிட்ட்தாக கூறுகிறார். இதன் அடுத்த கட்டமாக, மனிதர்கள் தொடர்ச்சியாக இடைவெளியில்லாமல் எட்டுமணி நேரம் தூங்கவேண்டும் என்பதை மருத்துவர்கள் வலியுறுத்தத்துவங்கினார்கள். இருபதாம் நூற்றாண்டில் இந்த எட்டுமணி நேர கட்டாய தூக்கம் நல்லது என்கிற பொதுவான கருத்து உருவாகி வலுப்பெற்றுவிட்டது.
30 சத நோய்கள் தூக்கத்துடன் தொடர்புடையவை
ஆனால், இது சரியான புரிதல் அல்ல என்பதே தற்போதைய நவீன மருத்துவ கண்ணோட்டமாக இருக்கிறது. மனித இனம் தோன்றிய ஆதிகாலம் தொட்டே, இரண்டு தூக்கங்கள் தூங்கியே பழகிய மனித உடலானது, கடந்த இருநூறு ஆண்டுகளாக திணிக்கப்பட்ட தொடர்ச்சியான எட்டுமணி நேர ஒரேயடியான தூக்கம் என்கிற புதிய நடைமுறைக்கு ஓரளவுக்கு பழகி விட்டது.
ஆனாலும் மனிதர்களில் கணிசமானவர்களுக்கு இரவின் நடுவில் தூக்கத்தில் விழிப்பு வருவது இன்னமும் தொடர்கிறது என்கிறார்கள் மருத்துவ விஞ்ஞானிகள். இப்படி விழிப்பு வருவது தவறல்ல என்கிற புரிதலை மருத்துவர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
மனிதர்களைத் தாக்கும் நோய்களில் சுமார் 30 சதவீதமானவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தூக்கத்துடன் தொடர்புடையவை என்று கூறும் மருத்துவ ஆய்வாளர்கள், இந்த பின்னணியில் இரவின் மத்தியில் தூக்கத்திலிருந்து விழிப்பு வருவது நோயின் அறிகுறி என்று தேவையில்லாமல் பயப்படத் தேவையில்லை என்றும் வலியுறுத்துகிறார்கள்.
எனவே அடுத்தமுறை, இரவின் மத்தியில் விழிப்பு வந்தால் அதற்காக வீணாக கவலைப்படாமல், உங்களுக்குப் பிடித்தமானவற்றை செய்யுங்கள் என்பதே அவர்கள் சொல்லும் அறிவுரை.












