எண்டோமெட்ரியோசிஸ்: லட்சக்கணக்கான பெண்களை பாதிக்கும் வலி நிறைந்த குணப்படுத்த முடியாத நிலை

எண்டோமெட்ரியோசிஸ்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஐமி கிராண்ட் கம்பர்பேட்ச்
    • பதவி, .

பெண்களில் சுமார் 10% பேருக்கு இந்த நிலை உள்ளது. இதில் அவர்களுக்கு பலவீனம் ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு வலி இருக்கும். ஆனால் இது பற்றி குறைவாகவே ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. இது இன்னமும் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. இதற்கு முழுமையான சிகிச்சையும் இல்லை.

என் 14 வது வயதில் வலிமிகுந்த மாதவிடாய் தொடங்கியது. நாள் முழுவதும் வலியை தாக்குப்பிடிக்க உதவும் என்ற நம்பிக்கையில் நான் பள்ளியில் ஹீட் பேட்ச்களை அணிந்தேன். சில சமயம் அது உதவியது. ஆனால் சில சமயங்களில் நான் வலியில் துடித்தபடி பள்ளியின் மருத்துவ அறையில் படுத்திருப்பேன். அங்கிருப்பவர்களுக்கு என்ன பரிந்துரைப்பது என்று தெரியவில்லை, ஏனெனில் எனது அப்பெண்டிக்ஸ் ஏற்கனவே அகற்றப்பட்டிருந்தது.

பத்து வருடங்களுக்குப் பிறகு எனக்கு எண்டோமெட்ரியோசிஸ் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டது. ஆனால் எனது பிரச்சனைகளுக்கு தீர்வு தரப்படவில்லை என்பதோடுகூடவே இந்த நோய் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை என்பது பல மருத்துவர் சந்திப்புகளின் போது தெரியவந்தது. மேலும் இந்த நோயை கண்டறிதல் மற்றும் அதற்கான சிகிச்சை, சிக்கலான மற்றும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஒரு செயலாக இருக்கலாம் என்பதை நான் உணர்ந்தேன்.

எண்டோமெட்ரியோசிஸ், இனப்பெருக்க வயதில் உள்ள 10 பெண்களில் ஒருவரை பாதிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எண்டோமெட்ரியோசிஸ், இனப்பெருக்க வயதில் உள்ள 10 பெண்களில் ஒருவரை பாதிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது

எண்டோமெட்ரியோசிஸ் என்பது மாதவிடாயுடன் தொடர்புடைய ஒரு நிலை ஆகும். இதில் கருப்பையின் புறணி போன்ற திசுக்கள், ஃபெலோபியன் குழாய்கள், இடுப்பு, குடல், யோனி மற்றும் குடல் உட்பட உடலின் மற்ற பகுதிகளில் காணப்படுகிறது. அரிதான சந்தர்ப்பங்களில் இது நுரையீரல், கண்கள், முதுகெலும்பு மற்றும் மூளையில் கூட இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில், உடலில் அது கண்டுபிடிக்கப்படாத ஒரே இடம் மண்ணீரல் மட்டுமே. கடுமையான, சில சமயங்களில் பலவீனமடையச்செய்யும் இடுப்பு வலி, சோர்வு மற்றும் அதிகமான மாதவிடாய் உதிரப்போக்கு ஆகியவை இதன் அறிகுறிகளில் அடங்கும். குறைவாக அறியப்படும் மற்றும் குறைவான ஆராய்ச்சியே செய்யப்பட்ட பல சுகாதார நிலைமைகள் உள்ளன என்றாலும் இதில் எண்டோமெட்ரியோசிஸ் மிகவும் பொதுவானது. இது உலகளவில் சுமார் 17 கோடியே 60 லட்சம் பேரை பாதிக்கிறது. மற்ற நாடுகளைப் போலவே அமெரிக்காவிலும் இது இனப்பெருக்க வயதுடைய 10 பெண்களில் ஒருவரை பாதிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60 லட்சம் டாலர்கள் ஆராய்ச்சி நிதியை இது பெறுகிறது. ஆனால் தூக்கம் பற்றிய ஆராய்ச்சி இதைக்காட்டிலும் 50 மடங்கு அதிக நிதியைப் பெறுகிறது.

எண்டோமெட்ரியோசிஸின் ஒரே விளைவு வலி மட்டும் அல்ல. இது கருவுறாமையுடன் தொடர்புடையதாக இருக்கலாம். பின்னர் வலியே நோயாளிகளை மற்ற நிலைமைகளுக்கு ஆளாக்கும் வாய்ப்பும் உள்ளது.

முதன்மையான அறிகுறி பொதுவாக காரணமின்றி ஏற்படும் கடுமையான இடுப்பு வலி ஆகும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முதன்மையான அறிகுறி பொதுவாக காரணமின்றி ஏற்படும் கடுமையான இடுப்பு வலி ஆகும்.

"கடுமையான வலி உங்கள் மைய நரம்பு மண்டலத்தை மாற்றுகிறது, எதிர்காலத்தில் வலியை எவ்வாறு தாங்குகிறீர்கள் என்பதை மாற்றுகிறது மற்றும் பிற நாள்பட்ட வலி நிலைமைகளுக்கு எளிதில் பாதிக்கப்படக்கூடியவராக உங்களை ஆக்குகிறது என்பதற்கு எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன" என்று வலி குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மூத்த நிபுணர் கேட்டி வின்சென்ட் கூறுகிறார். இந்நோயின் முதன்மையான அறிகுறி பொதுவாக காரணமின்றி ஏற்படும் கடுமையான இடுப்பு வலி ஆகும். ஆனால் இது பெண்கள் மட்டுமே அனுபவிக்கும் ஒரு உடல்நல நிலை மற்றும் மாதவிடாய் தொடர்புடையது. எனவே இது ஒரு புதிராகவே உள்ளது.

பண்டைய தோற்றம்

வலியினால் ஏற்படும் வலிப்பு போன்ற அறிகுறிகளை உள்ளடக்கிய 'ஹிஸ்டீரியா' என்று கூறப்பட்ட பல நிகழ்வுகளும், எண்டோமெட்ரியோசிஸ் ஆக இருக்கலாம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வலியினால் ஏற்படும் வலிப்பு போன்ற அறிகுறிகளை உள்ளடக்கிய 'ஹிஸ்டீரியா' என்று கூறப்பட்ட பல நிகழ்வுகளும், எண்டோமெட்ரியோசிஸ் ஆக இருக்கலாம்

1860 ஆம் ஆண்டில் செக் விஞ்ஞானி கார்ல் வான் ரோகிடான்ஸ்கி எண்டோமெட்ரியோசிசை கண்டுபிடித்தார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது சர்ச்சைக்குரியது. ஏனெனில் இதற்கு முந்தைய அடிப்படை கண்டுபிடிப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எண்டோமெட்ரியோசிஸ் அறிகுறிகளின் பதிவுகள், பழங்காலத்திலிருந்தே உள்ளன. இது 'ஹிஸ்டீரியா' நிலைமையுடன் கலந்துள்ளது. இது "கருப்பை" என்பதற்கான லத்தீன் வார்த்தையில் இருந்து பெறப்படுகிறது. "ஹிஸ்டீரியா" என்று கூறப்பட்ட பல நிகழ்வுகள் எண்டோமெட்ரியோசிஸாக இருக்கலாம் என்று மருத்துவ இலக்கியத்தில் இடுப்பு வலி பற்றிய ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டது. "இந்த சகாப்தத்தில் ஹிஸ்டீரியாவின் காரணமான வலிப்பு நிலை என்பது பொதுவாக பெண்கள் இரண்டாக மடிந்து தரையில் விழுவதைக் குறிக்கிறது. கடுமையான வயிற்று வலி காரணமாக இவ்வாறு அவர்கள் நடந்துகொண்டிருக்கக்கூடும்," என்று ஆய்வு குறிப்பிடுகிறது. எண்டோமெட்ரியோசிஸ் குறித்த குறைவான மதிப்பீடு மற்றும் தவறான புரிதல் நவீன மருத்துவத்திலும் தொடர்கிறது. மற்ற நிலைமைகளைக் காட்டிலும் இது குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. குறைவாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எண்டோமெட்ரியோசிசுக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை. நோய் என்ன என்று தெரிந்துகொள்ள பெரும்பாலும் ஒரு தசாப்தம் வரை எடுக்கும். உறுதியான நோயறிதலுக்கான ஒரே வழிமுறை, லேப்ராஸ்கோபி எனப்படும் கீஹோல் அறுவை சிகிச்சை ஆகும்.

எண்டோமெட்ரியோசிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்ட மூன்று பெண்களிடம் நான் பேசினேன். அவர்கள் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். முதலில் மூவருக்கும் பிற மருத்துவ நிலைமைகள் இருப்பதாக தவறாக அடையாளம் காணப்பட்டது. அவர்களின் அறிகுறிகள் நிராகரிக்கப்பட்டன அல்லது குறைத்து மதிப்பிடப்பட்டன. "எண்டோமெட்ரியோசிஸ்' என்ற வார்த்தையை ஒரு பொது மருத்துவர் அல்லது மருத்துவமனை மருத்துவர் சொன்னது எனக்கு நினைவில் இல்லை. அவர்கள் சரியான கேள்விகளை கேட்கக்கூட இல்லை," என்கிறார் 31 வயதான ஆலிஸ் போடன்ஹாம். " 'பெரும்பாலும் இதுவாக இருக்கலாம்' அல்லது 'நீங்கள் அதை கற்பனை செய்கிறீர்கள்' என்பதே அவர்களின் வார்த்தைகளாக இருக்கும்."

பெண்கள் பெரும்பாலும் தங்கள் வலி அறிகுறிகள் நிராகரிக்கப்படுவதை காண்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெண்கள் பெரும்பாலும் தங்கள் வலி அறிகுறிகள் நிராகரிக்கப்படுவதை காண்கின்றனர்.

எண்டோமெட்ரியோசிஸின் மிகவும் பொதுவான அறிகுறி வலியாக இருக்கும்போதும்கூட பெண்கள் அனுபவிக்கும் வலியை நிராகரிக்கும் போக்கு பிரச்சனையின் ஒரு பகுதியாக உள்ளது. இதை நானே என் அனுபவத்தில் கண்டேன். ஒரு உள் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மிகவும் வலிமிகுந்ததாக இருப்பதாக மருத்துவர்களிடம் சொன்னபோது, "ஸ்கேன் செய்யும் போது நோயாளி லேசான அசௌகரியத்தை அனுபவித்தார்" என்ற குறிப்புடன் எனது சோதனை முடிவை நான் பெற்றேன். அனுபவிக்கும் வலியின் அளவிற்கும் ஒரு நபரின் நிலையின் தீவிரத்திற்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்பது நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. உறுதியான நோயறிதலுக்கு உடலுக்குள் கருவிகளை செலுத்தும் வழிமுறைகள் மட்டுமே இருப்பதாலும், நோயாளியின் அறிகுறிகள் பற்றிய விளக்கத்தை மருத்துவர் நம்பாமல் இருப்பதன் காரணமாகவும், நோயறிதலுக்காக நிபுணர்களிடம் செல்லுமாறு பரிந்துரைக்கப்படுவதில்லை. பெண்கள் அனுபவிக்கும் அறிகுறிகள் " அவர்களின் கற்பனை" என்று பெரும்பாலும் நிராகரிக்கப்படுகின்றன."

எண்டோமெட்ரியோசிஸ் உள்ள 2,600 பெண்களில் 40 சதவிகிதம் பேர், நிபுணர்களிடம் செல்லுமாறு பரிந்துரைக்கப்படுவதற்கு முன், 10 அல்லது அதற்கும் மேற்பட்ட முறை மருத்துவர்களிடம் சென்றுள்ளனர்.,"என்று பிரிட்டிஷ் அரசு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. போடன்ஹானின் வலி தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன் அவர் பலமுறை மயங்கி விழுந்துள்ளார்.

மை எண்டோமெட்ரியோசிஸ் டைரி என்ற வலைப்பதிவை நடத்தும் 24 வயதான கெய்ட்லின் கோனியர்ஸ், தனக்கு இந்த நிலை இருக்கலாம் என்று தனது சொந்த ஆராய்ச்சியின் மூலம் சந்தேகிக்கத் தொடங்கினார். ஆனால் இது அவரது மருத்துவர்களால் நிராகரிக்கப்பட்டது. "சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் அவசர சிகிச்சை மையத்தில் தங்கினேன். நான் என் நிலைமைக்கான வெவ்வேறு காரணங்களை அறிய கூகிள் செய்து கொண்டிருந்தேன். அதில் ஒன்று எண்டோமெட்ரியோசிஸ். அந்த நேரத்தில் நான் இதை என் மருத்துவரிடம் சொன்னேன். ஆனால் அவர் 'ஓ, அது நிச்சயமாக இல்லை' என்று கூறினார். எனக்கு மிகவும் மோசமான மாதவிடாய் வலி மற்றும் பொதுவான வயிற்று வலி இருப்பதாக நான் விளக்கினேன். ஆனாலும் அவர் இல்லை என்றே சொன்னார்," என்கிறார் அவர்.

ஆரம்ப ஸ்கேன்களில் சிதைவு இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிய மருத்துவர்கள் சில சமயங்களில் தவறிவிடுவார்கள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆரம்ப ஸ்கேன்களில் சிதைவு இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிய மருத்துவர்கள் சில சமயங்களில் தவறிவிடுவார்கள்.

பாலினம் இதில் ஒரு பங்கை வகிக்கிறது என்பதில் ஆக்ஸ்போர்டின் கேட்டி வின்சென்ட்டிற்கு எந்த சந்தேகமும் இல்லை. "ஒவ்வொரு 14 வயது சிறுவனும், 'ஒவ்வொரு மாதமும் இரண்டு நாட்கள் பள்ளியை மிஸ் செய்கிறேன்' என்று பொது மருத்துவரிடம் சென்றால், அவர்கள் ஒவ்வொரு மாதமும் பள்ளியைத் தவறவிடுவார்கள்," என்று அவர் கூறுகிறார். ஆரம்ப ஸ்கேன்களில் குறிப்பாக சிதைவுகள் மேலோட்டமாக இருந்தால், அவை இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிய மருத்துவர்கள் தவறிவிடுவார்கள். இது விஷயங்களை மிகவும் சிக்கலாக்குகிறது. எண்டோமெட்ரியோசிஸ் மன்றங்கள் ஃபால்ஸ் நெகட்டிவ் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்களின் கதைகளால் நிரம்பியுள்ளன.

நோயாளியின் தரப்பில் விழிப்புணர்வு இல்லாதது நோயறிதலை தாமதப்படுத்தும். மாதவிடாய் தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லாமை இன்னும் தொடர்கிறது. நான் பேசிய பெண்களில் இருவருக்கு, குடும்பம் அல்லது பாலியல் கல்வி மூலம், மாதவிடாய் வலி சங்கடமானதாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஒரு சாதாரண மாதவிடாய் எவ்வளவு வேதனையாக இருக்கலாம் (அல்லது இருக்கக்கூடாது) என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவே இல்லை.

உலகெங்கிலும் உள்ள எண்டோமெட்ரியோசிஸ் தொண்டு நிறுவனங்களும் செயற்பாட்டாளர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்த உழைத்து வருகின்றனர். மேலும் அவர்களின் முயற்சிகள் பலன் அளித்துள்ளதாகத்தெரிகிறது. 2017 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய அரசு எண்டோமெட்ரியோசிஸிற்கான ஒரு தேசிய செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது "சிகிச்சை, புரிதல் மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்த" முயல்கிறது. 45 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் ஆக நிதியுதவியை அரசு அதிகரித்தது. ஆரம்ப சுகாதார நிபுணர்களின் மருத்துவக் கல்வியின் ஒரு பகுதியாக இதை மாற்றும் புதிய மருத்துவ வழிகாட்டுதல்களை அளித்தது. இங்கிலாந்தில், அரசு ஆலோசனைக் குழுவான நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் அண்ட் கேர் எக்ஸலண்ட் (NICE), நோயாளிகளுக்கான நோயறிதல் மற்றும் சிகிச்சையின் தரநிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் 2017 இல் வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

இது சரியான திசையில் ஒரு நல்ல நடவடிக்கை என்றாலும், பொது மருத்துவர்களுக்கு ஏற்கனவே பல வழிகாட்டுதல்கள் உள்ளன என்று ராயல் காலேஜ் ஆஃப் GPs இல் பெண்களின் ஆரோக்கியத்திற்கான மூத்த மருத்துவர் ஆனி கொனோலி கூறுகிறார். நிபுணத்துவ மையங்கள் இல்லாதது மற்றொரு உலகளாவிய பிரச்சனை என்று உலக எண்டோமெட்ரியோசிஸ் சொசைட்டியின் தலைமை நிர்வாகி லோன் ஹம்மெல்ஷோஜ் கூறுகிறார்.

விரைவான தீர்வு இல்லை

நோய் அடையாளம் காணப்பட்டபிறகும் அறிகுறி மேலாண்மையில் உடனடி தீர்வு இல்லை. தவறான தகவல் இங்கேயும் தொடர்கிறது.

சில மருத்துவர்கள் கர்ப்பம் தரிப்பது பயனுள்ள சிகிச்சை என்று இப்போதும் நோயாளிகளிடம் கூறுகிறார்கள். இந்த ஆண்டு ஒரு மருத்துவர் என்னிடம் உங்களுக்கு எண்டோமெட்ரியோசிஸ் இருக்கலாம் என்று கூறினார். கூடவே, "நீங்கள் கர்ப்பம் தரிப்பது ஒரு வழி. இது தவிர நாங்கள் அதிகம் செய்ய முடியாது" என்றும் அவர் கூறினார். இது தவறானது. ஏனென்றால் கர்ப்ப காலம் வரை மட்டுமே எண்டோமெட்ரியோசிஸின் அறிகுறிகள் இல்லாமல் இருக்கும்.

இதற்கிடையில், இதன் தீர்வாக அமெரிக்காவில் நடைமுறையில் உள்ள கருப்பை நீக்க அறுவைசிகிச்சையை தான் செய்துகொண்டது பற்றி எழுத்தாளரும் கலைஞருமான லீனா டன்ஹாம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் எழுதினார். ஆனால் எண்டோமெட்ரியோசிஸ் சிகிச்சையாக அதன் பயன்பாடு சர்ச்சைக்குரியது. கருப்பைக்கு வெளியேயும் சிதைவுகள் இருக்கக்கூடும் என்பதால் அதை அகற்றுவது எந்த வகையிலும் ஒரு சிகிச்சையல்ல. எண்டோமெட்ரியோசிஸ் பின்னர் மீண்டும் வரலாம்.

ஒரு சாதாரண மாதவிடாய் எவ்வளவு வேதனையாக இருக்கலாம் (அல்லது இருக்கக்கூடாது) என்பது பல பெண்களுக்கு தெரியாமல் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு சாதாரண மாதவிடாய் எவ்வளவு வேதனையாக இருக்கலாம் (அல்லது இருக்கக்கூடாது) என்பது பல பெண்களுக்கு தெரியாமல் உள்ளது.

எண்டோமெட்ரியோசிஸ் சிதை வளர்ச்சி ஈஸ்ட்ரோஜனால் கட்டுப்படுத்தப்படுவதால், பெரும்பாலும் ஹார்மோன் சிகிச்சை முதலில் பரிந்துரைக்கப்படுகிறது. இவை நிலைமையை நிர்வகிக்க உதவும். ஆனால் அதை குணப்படுத்தாது. மேலும் அது பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம். 2016 ஆம் ஆண்டு டென்மார்க்கில் நடத்திய ஆய்வில், ஹார்மோன் கருத்தடைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மனச்சோர்வுக்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டது.

மற்றொரு சாத்தியமான சிகிச்சை மருத்துவ மெனோபாஸ் ஆகும். இருப்பினும், இது ஒரு நீண்ட கால வழி அல்ல. ஏனெனில் இளம் வயதினரிடையே இது எலும்பு அடர்த்தியை பாதிக்கலாம். Zoladex பிராண்டால் குறிப்பிடப்பட்ட சாத்தியமான பக்க விளைவுகளில் ஒன்று, 'அரிதாக இருந்தாலும் தற்செயலான முழு மாதவிடாய் நிறுத்தம்'. இந்த சிகிச்சையைப் பயன்படுத்துவதில் தகவலறிந்த ஒப்புதல் இல்லை என குக் என்னிடம் கூறினார். " மருந்துகளை உட்கொள்வது அல்லது மருத்துவ மெனோபாஸுக்காக ஊசி போட்டுக்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று நான் கேள்விப்படுகிறேன். அது என்ன என்பதை அவர்கள் உணரவில்லை."என்கிறார் அவர்.

மாற்று வழிகள் பற்றி ஆராய்ச்சி

"எண்டோமெட்ரியோசிஸ் சிகிச்சைகள் முழுவதுமாக ஹார்மோன்களில் கவனம் செலுத்துகின்றன. ஆனால் இதற்கு மாற்று தேவை. ஏனென்றால் அது பெண்களிடையே சரியாக வேலை செய்வதில்லை," என்கிறார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இனப்பெருக்க மற்றும் மரபணு தொற்றுநோயியல் பேராசிரியரான க்ரினா ஃஸோண்டெர்வான். "இது பல பக்க விளைவுகளைத் தருகிறது. அதை பெண்கள் அனுபவிக்க விரும்பமாட்டார்கள்."

அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கும் வலி நிவாரணிகள் மற்றொரு வழி. ஆனால் அவற்றுக்கும் பக்க விளைவுகள் உள்ளன. கடந்த மூன்று வருடங்களாக தான் எடுத்துக்கொண்டிருக்கும் ஓபியாய்டு வலிநிவாரணிகள் "ரத்த சோகை மற்றும் உயர் ரத்த அழுத்தம்" உள்ளிட்ட பக்கவிளைவுகளை ஏற்படுத்தின என்று போடன்ஹாம் என்னிடம் கூறுகிறார். "நான் ஒவ்வொரு வாரமும் 3.1 மைல் ஓடுவேன்... இப்போது சில நாட்களாக ஒரு கிளாஸ் தண்ணீரை எடுக்க கீழே நடப்பதை மாரத்தான் ஓடுவது போல உணர்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார்.

வலிநிவாரணிகள் எண்டோமெட்ரியோசிஸ் அறிகுறிகளுக்கு உதவும் அதே வேளையில், அவற்றின் பக்க விளைவுகள் பெரியதாக இருக்கலாம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வலிநிவாரணிகள் எண்டோமெட்ரியோசிஸ் அறிகுறிகளுக்கு உதவும் அதே வேளையில், அவற்றின் பக்க விளைவுகள் பெரியதாக இருக்கலாம்

இருந்தபோதிலும் வலிநிவாரணிகள் தனக்கு கிடைப்பதை போடன்ஹாம் அதிர்ஷ்டமாக உணர்கிறார். வலுவான வலி நிவாரணிகளை பெற முயற்சிப்பது போதைப்பொருள் பயன்பாட்டு குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும் என்பது அவருக்குத் தெரியும். (ஓபியாய்டு வலிநிவாரணிகளின் பயன்பாடு சார்புநிலைக்கு வழிவகுக்கும் அபாயமும் உள்ளது. இருப்பினும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் அல்லது அடிமையாதல் வரலாறு இல்லாதவர்களிடையே இந்த அபாயம் மிகவும் குறைவு)

இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இடுப்பு வலி பற்றி பொது மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்குக் கற்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவ அறிவியல் மேலும் வளர நோயாளிகள் காத்திருக்கும்நிலையில் அவர்களின் அறிகுறிகள் இப்போதும் தவறாகவே புரிந்து கொள்ளப்படுகின்றன. கடுமையான மன மற்றும் உடல் ஆரோக்கிய பிரச்சனைகளாக தவறாக அடையாளம் காணப்படுகின்றன.

கருத்தடை என் மன ஆரோக்கியத்தை மோசமாகப் பாதித்தது என்பதைக் கண்டறிந்த பிறகு, மிரெனா காயிலின் குறைந்த அளவிலான ஹார்மோனின் மூலம் சிகிச்சையைத் தொடங்கலாமா அல்லது லேப்ராஸ்கோபி மூலம் உறுதியான நோயறிதலைத் தொடரலாமா என்பதைத் தீர்மானிப்பது என் அடுத்த கட்ட நடவடிக்கையாகும். ஆனால் லேப்ராஸ்கோபிக்கு பிறகு உடல்நிலை சரியாக பல வாரங்கள் தேவைப்படும். ஒரு ஃப்ரீலான்ஸ் எழுத்தாளரான என்னிடம் இருப்பதை விட அதிக சேமிப்பு தேவைப்படும். நாள்பட்ட இடுப்பு வலி உள்ள பெண்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் கடினமான தேர்வுகளுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: