உடல்நலம்: ஆண்களும் தாய்ப்பால் கொடுக்க முடியுமா?

தாய்ப்பால்

பட மூலாதாரம், Westend61 / Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்
    • எழுதியவர், ஹேமா ராக்கேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

பிறந்த குழந்தைக்கு 6 மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே உணவாக கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க செய்வதுடன் அவர்களின் உடலின் வளர்சிதை மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.

ஆனால், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றால் அதன் உண்மையான தாய் பிரசவிக்காமல் பால் கொடுக்க முடியுமா? இன்றைய நவீன மருத்துவத்தின் மூலம் பிரசவிக்காத பெண்கள் கூட தாய்ப்பால் கொடுக்க முடியும் என்கிறார், மகப்பேறு மற்றும் பாலூட்டுதல் ஆலோசகர் டீனா அபிஷேக்.

குழந்தை பெறாத பெண்கள் தூண்டப்பட்ட பாலூட்டுதல் (Induced Lactation) முறை மூலம் பாலூட்ட முடியுமா?

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றவர்கள் குழந்தை பிறந்த பிறகு தான் இதை பற்றி யோசிக்கிறார்கள். சிலர் குழந்தை பிறந்தவுடன் அதற்கு பாட்டிலில் பால் அறிமுகப்படுத்துகின்றனர். ஆனால், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுபவர்கள் பிரசவ தேதிக்கு 3 மாதங்கள் முன்பிருந்தே இது குறித்து திட்டமிட வேண்டும். ஹார்மோனல் தெரபி மூலம் நாங்கள் சிகிச்சை கொடுப்போம். குறிப்பிட்ட மாதங்களுக்கு மாத்திரை கொடுப்போம்.

பிறகு தாயின் உடல் அதை ஏற்றுக்கொண்டு உடலில் குழந்தை உள்ளது என அவரின் மனமும் உடலும் ஏற்றுக் கொண்டு பால் சுரக்கத் தொடங்கும். பின்னர் குழந்தையை இந்த தாயிடம் பால் குடிக்க சொல்லிக்கொடுப்போம். தாயின் அரவணைப்பு மற்றும் கதகதப்பு தொடரும் போது இயற்கையாகவே மார்பகங்களில் பால் சுரக்க தொடங்கிவிடும்.

தூண்டப்பட்ட பாலூட்டுதல் (Induced Lactation)முறையால் பக்க விளைவுகள் ஏற்படுமா?

நாம் தலைவலிக்கு சாப்பிடும் மாத்திரைகளில் கூட பக்கவிளைவுகள் உண்டு. Induced Lactation மூலம் பாலூட்டுவதால் மிக மிக குறைவான பக்க விளைவுகள் உண்டு. சில பேருக்கு உடல் எடை அதிகரிப்பு, சில பேருக்கு தலைவலி, சிலருக்கு மயக்கம் என சிறிய பக்க விளைவுகள் ஏற்படும். பிறகு சரியாகிவிடும். ஆனால், இப்படி பக்க விளைவுகள் ஏற்படுகிறது என்று மாத்திரைகளை உடனடியாக நிறுத்தக் கூடாது. மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாத்திரைகளை நிறுத்த முடியும்.

டீனா அபிஷேக்
படக்குறிப்பு, டீனா அபிஷேக்

தூண்டப்பட்ட பாலூட்டுதல் (Induced Lactation) மூலம் எவ்வளவு நாட்களுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் ?

Induced Lactation மூலம் குழந்தைக்கு எவ்வளவு வருடங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவ்வளவு வருடங்கள் கொடுக்கலாம். பிறகு எப்போது நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களோ அப்போது மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தலாம்.

ஏன் Induced Lactation மூலம் பால் கொடுக்க வேண்டும்?

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் தம்பதிகளுக்கு அந்த குழந்தை இடத்தில் ஒரு உணர்வுப் பூர்வமான பிணைப்பு (Emotional Bonding) உருவாக வேண்டும். அப்போது தான் அந்த குழந்தையின் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்கும். அந்த குழந்தையை தான் பிரசவிக்காத போதும், அது அவர்களுடைய கைக்கு வரும் போது அது அவர்களின் சொந்த குழந்தைதான். அதற்கு பாலூட்டும் போது இயற்கையாகவே அந்த குழந்தைக்கும் தாய்க்கும் பிணைப்பு ஏற்படும்.

Re Lactation என்றால் என்ன?

சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு மேற்கொண்ட அறுவை சிகிச்சை அல்லது ஏதாவது தொற்றுநோயால் குழந்தை பாதிக்கப்படும் போது இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கும் சூழ்நிலை வரும்போது அந்த சமயத்தில் பாலூட்ட முடியாமல் போகும். பிறகு 2 மாதங்கள் கழித்து குழந்தைக்கு பாலூட்டும் சூழல் வரும்போது திரும்பவும் Re Lactation முறையில் பாலூட்டலாம். எனக்கு மெதுவாக பாலூட்டினால் போதும் 1 மாதம் ஆனாலும் பரவாயில்லை எனக்கு மாத்திரை மருந்துகள் வேண்டாம் என்று சொல்வார்கள். அவர்களுக்கு உணவு மற்றும் சில பயிற்சிகள் கொடுப்போம். ஆனால் இதற்கு முழு அர்ப்பணிப்பு வேண்டும். சிலருக்கு உடனடியாக பாலூட்டும் சூழல் ஏற்பட்டால் அதற்கு சிகிச்சையும் வழங்குவோம்.

ஆண்களும் தாய்ப்பால் கொடுப்பது மருத்துவரீதியாக சாத்தியம் என்கிறார்களே, அது உண்மையா?

ஆம் உண்மைதான். இன்றைய நவீன மருத்துவத்தில் இதுவும் சாத்தியமே. தாய்ப்பால் கொடுப்பதற்கு மார்பகம் மற்றும் பிட்யூட்டரி க்ளாண்ட் இருந்தால் போதும். தாய்ப்பால் கொடுக்கலாம். தன்பாலின ஈர்ப்பு கொண்ட 2 பேர் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையை தத்தெடுத்து பின்னர் அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க விரும்பினால் ஒரு ஆண் தாராளமாக கொடுக்கலாம். அதற்கென தனி மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. ஏற்கெனவே மேலை நாடுகளில் இந்த முறை உள்ளது. நம் நாட்டுக்கு இதை பற்றி இன்னும் பெரிதாக யாருக்கும் தெரியாது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :