உலக தாய்ப்பால் வாரம்: தாய்ப்பாலை சேமிக்க மெஷினை பயன்படுத்தினால் மார்பகங்கள் பாதிக்கப்படுமா?
- எழுதியவர், ஹேமா ராக்கேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தாய்ப்பால் கொடுப்பதில் நிறைய சந்தேகங்கள் இருப்பதைப் போலவே, குழந்தை பிறந்து மூன்று அல்லது ஆறு மாதங்களில் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு அப்போதும் தாய்ப்பால் கொடுக்க வேண்டுமென்று நினைக்கும்போது அதற்கு பிரெஸ்ட் ஃபீடிங் பம்ப் உதவுகிறது.
குழந்தை பிறந்து 3 மாதங்களிலேயே வேலைக்குச் சென்றால், தாய்ப்பாலை எப்படிச் சேமிப்பது, பிரெஸ்ட் ஃபீடிங் பம்ப் எப்படி பயன்படுத்துவது, அதைப் பயன்படுத்தி தாய்ப்பாலை எடுத்து வைத்து குழந்தைக்குக் கொடுப்பது பாதுகாப்பானதா என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறார், மகப்பேறு மற்றும் பாலூட்டுதல் ஆலோசகர், டீனா அபிஷேக்.
தாய்ப்பாலை சேமிக்க எத்தனை வகையான மெஷின் உள்ளது?
2 வகையான பம்ப் மிஷின்கள் உள்ளன. Manual Pump, Machine Pump.
முதலாவது Manual Pump. இதை நீங்களே இயக்க வேண்டும். முதலில் Stimulator கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்ய வேண்டும். சில நிமிடங்களுக்கு பாட்டிலுடன் Flange என்று சொல்லக்கூடிய புனல் போன்ற அமைப்பிலான இந்த மிஷினை மார்பகத்தில் வைத்து Stimulator பிடித்து அழுத்தி கொண்ட வர வேண்டும்.
தாய்ப்பால் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கப்பட்ட பாட்டிலில் சேமித்து கொண்டே வரும். 5 நிமிடங்களுக்கு பிறகு மற்றொரு மார்பகத்தில் இதே முறையை பின்பற்ற வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஒரு நாளில் 2 அல்லது 3 மணி நேரம் வெளியே செல்பவர்கள் , கைகளால் மார்பகத்தை அழுத்தி பால் வரவைக்கும் போது வலி ஏற்பட்டவர்கள் Manual Pump ஐ பயன்படுத்தலாம்.

அடுத்து Electric Machine Pump. இது பேட்டரியால் இயங்ககூடியது. பேட்டரி தீர்ந்ததும் சார்ஜ் போட்டுக்கொள்ளலாம். இது 2 பம்ப்புகள் மற்றும் ஒரு பம்ப் என 2 வகைகளில் கிடைக்கிறது. Flange என்று சொல்லக்கூடிய புனல் போன்ற அமைப்பிலான இந்த மிஷினை மார்பகத்தில் வைத்து பட்டனை ஆன் செய்ய வேண்டும். இந்த மெஷினில் முதலில் மாசாஜ் Mode உள்ளது.
முதல் 3 நிமிடங்கள் மிஷினே உங்கள் மார்பகத்தை மசாஜ் செய்து பின்னர் பால் வரும் நிலையான Expression Mode க்கு சென்று விடும். இதில் அதுவே கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகப்படுத்தும். இதில் மார்பகங்களில் வலி ஏற்பட்டால் வேகத்தை குறைக்க, கூட்ட வசதிகள் உண்டு. மேலும் இதில் 2 வகையான Flangeகள் உள்ளன. மார்பத்திற்கு தகுந்த அளவுகளில் உள்ள Flange பயன்படுத்தினால் வலி இல்லாமல் இருக்கும்.
மெஷினில் இருந்து எடுத்த பாலை எப்படி சேமிக்க வேண்டும்?
26 செல்சியல் வெப்ப நிலைக்கு கீழ் உள்ள ஊரில் இருந்தால் 4 மணி நேரம் கூட வெளியில் பாலை வைக்கலாம். இல்லையென்றால் பிரிட்ஜில் வைக்க வேண்டும். அதே சமயம் பிரிட்ஜ் கதவில் வைக்க கூடாது. ஒரு முறை ஒரு வெப்பநிலையில் பால் எடுத்துவைத்தால் அதோடு மற்ற வெப்பநலையில் உள்ள பாலை கலந்து குழந்தைக்கு கொடுக்க கூடாது. அது குழந்தைக்குக வயிற்றுபோக்கை ஏற்படுத்தும்.


எப்போது குழந்தைக்கு கொடுக்க வேண்டும்?
குழந்தைக்கு தேவைப்படும் போது பிரிட்ஜில் இருந்து எடுத்த பாலை வெளிநாடுகளில் Warmer Machine கொண்டு சூடுபடுத்துவார்கள். நாம் ஒரு பாத்திரத்தில் சூடு தண்ணீர் வைத்து அதில் ஒரு கிண்ணத்தில் இந்த பாலை ஊற்றி இளஞ்சூடு ஆனதும் குழந்தைக்கு புகட்டலாம்.
எப்படி இதை சுத்தப்படுத்துவது?
பால் எடுத்து முடித்ததும் பாட்டிலை வெந்நீரில் கழுவி பயன்படுத்தலாம். அல்லது உங்களிடம் Sterlizer இருந்தால் அதையும் பயன்படுத்தி சுத்தப்படுத்தலாம்.
யாரெல்லாம் இந்த மெஷின்களை பயன்படுத்தலாம்?
குறிப்பாக வேலைக்கு செல்லும் தாய்மார்கள் இதை பயன்படுத்தலாம். குழந்தை பிறந்த பிறகு 3 அல்லது 6 மாதங்களில் வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தாய்ப்பால் எடுத்து வைத்துவிட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் பிறந்த குழந்தைக்கு 6 மாதங்கள் வரை முழுமையாக தாய்ப்பால் கொடுப்பது தான் மிகச்சிறந்தது. தாயிடம் இருந்து நேரடியாக தாய்ப்பால் கொடுப்பது தான் நல்லது. ஆனால் சில தாய்மார்களுக்கு பொருளாதார சூழல் காரணமாக விரைவாக வேலைக்கு செல்லும் போது இதை பயன்படுத்தலாம்.. PreMature குழந்தைகள் பிறக்கும் போது அவர்களால் நேரடியாக தாய்ப்பால் சில வாரங்களுக்கு பருக முடியாது. அந்த தாய்மார்கள் இதை பயன்படுத்தலாம்.
மெஷின் பயன்படுத்துவதால் மார்பகங்கள் தொய்ந்துபோயிவிடும், ஷாக் அடிக்கும் என்று சிலர் நம்புகிறார்களே?
இல்லை அது தவறு. பிரசவத்திற்கு பிறகு மார்பகங்கள் தொய்ந்து போவதற்கு காரணம் கர்ப்பகாலத்தில் உங்கள் எடை கூடியிருக்கும். தசைகள் விரிவடைந்து இருக்கும். பிரசவத்திற்கு பிறகு மெதுவாக உங்கள் எடை பழைய நிலைக்கு திரும்பும் போது உடலின் தசைகள் இலகுவாக தெரியும். அதற்கு நீங்கள் உடற்பயிற்சி செய்தாலே மீண்டும் பழைய நிலையில் மார்பகங்களை பெறலாம்.


சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














