ஃப்ரேயா வால்ரஸ்: அரியவகை உயிரினத்தை அரசு கருணைக்கொலை செய்தது ஏன்? மக்கள் கொதிப்பது எதற்காக?

பட மூலாதாரம், Reuters
- எழுதியவர், நதீம் ஷாத்
- பதவி, பிபிசி நியூஸ்
கடந்த ஜூலை மாத மத்தியில் 600 கிலோ எடை கொண்ட பனிக்கடல் யானை எனப்படும் வால்ரஸ், நார்வேயின் தலைநகரான ஓஸ்லோ ஃபிஜோர்ட் நகரில் தென்பட்டது. இதற்கு மக்கள் ஆசையாக வைத்த பெயர் ஃப்ரேயா.
சில நாள்களிலேயே இது மிகவும் பிரபலமடைந்தது. நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. ஆங்காங்கே அது நகர்ந்து செல்லும், படகுகளில் ஏறும் காணொளிகள் வைரலாகின.
இப்படிப் பிரபலமான ஃப்ரேயா இப்போது உயிருடன் இல்லை. பொதுமக்களுக்கு ஆபத்து என்று கருதி அரசு அதிகாரிகள் அதைக் கொன்றுவிட்டார்கள்.
மக்கள் இதை அப்படியே விட்டுவிடவில்லை. கொதித்துவிட்டார்கள். நார்வே அரசாங்கம் வால்ரஸை கொலை செய்து விட்டது என்று மக்கள் குற்றம்சாட்டும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.
வேறு சிலர் இந்த உயிரினத்துக்குச் வெண்கலச் சிலை வைப்பதற்காக ஆன்லைனில் நிதி திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். சில நாள்களிலேயே 24 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நிதி குவிந்தது.
மக்களின் சீற்றம் நார்வேக்குள் மாத்திரம் முடங்கிவிடவில்லை. வெளிநாடுகளில் இருந்து கோபம் கொப்பளிக்கும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நார்வேயின் பிரதமரே இது குறித்துக் கருத்துத் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் என்ன சொல்வார்? "ஃபிரேயாவைக் கொன்றது சரியான முடிவுதான்" என்றார்.
அதற்கெல்லாம் மக்கள் சமாதானம் ஆகவில்லை. ஃப்ரேயாவை கொல்லாமல் காப்பாற்றியிருக்க முடியுமா என்று அவர்கள் இன்னும் கேட்கிறார்கள்.
வால்ரஸ் தென்படும் இடம் சுற்றுலாத் தலமானது
ஃப்ரேயாவின் ஆஸ்லோ நோக்கிய பயணம் ஆர்க்டிக் பெருங்கடலில் தொடங்கியது. கடந்த ஆண்டில் அது ஐரோப்பாவின் பல பகுதிகளில் தென்பட்டிருக்கிறது. பிரிட்டன், ஹாலந்து, டென்மார்க், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளை ஒட்டிய கடல் பகுதிகளில் அதை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.
வால்ரஸ் சென்ற எல்லா இடங்களிலும் மக்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் நார்வேயில் மக்கள் கவனத்தையும் தாண்டி அதிகாரிகளின் கவலையையும் அதிகரித்தது.
ஃப்ரேயா வால்ரஸை பார்ப்பதற்காக கூடும் மக்கள் அதற்கு மிக அருகில் நின்று புகைப்படம் எடுப்பதைக் காண முடிந்து. ஒரு பெண்ணை நீருக்குள் துரத்துவது போன்ற செய்திகளும் வெளிவந்தன. கயாக்கில் சென்று கொண்டிருந்த ஒருவர் ஃப்ரேயா தன்னை நோக்கி வந்தபோது பதறிவிட்டதாகத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Norwegian Directorate of Fisheries
"வால்ரஸ்களின் நடத்தையை கணிக்க முடியாது" என்று கிரீன்லாந்து இயற்கை வளங்கள் தொடர்பான மூத்த விஞ்ஞானி எரிக் பார்ன் கூறுகிறார். "முன்புறம் தெரியும் சிறு தந்தங்களைப் போன்ற உறுப்புகளைக் கொண்டு ஒரு சீலை பிடித்து அதைக் குத்திக் கொல்லும் திறன் கொண்டவை."
வால்ரஸ் மக்களுடன் நெருக்கமாகிவிட்டதால் - அல்லது மக்கள் அதனுடன் நெருக்கமாகிவிட்டதால் - ஒரு பெரிய ஆபத்து இருந்தது.
"அரை டன் எடையுள்ள வால்ரஸ் - கூர்மையான தந்தங்களுடன் - மக்களிடையே நீந்துவது மிகவும் ஆபத்தானது" என்று பார்ன் கூறுகிறார்.
இது தவிர வால்ரஸ்கள் ஸ்கூபா டைவர்ஸ், சிறிய படகுகளைத் தாக்கும் என்று அறியப்படுகிறது.
வால்ரஸ்கள் தொலைதூர பகுதிகளில் வாழ்கின்றன. அவை பெரும்பாலும் மனிதர்களுடன் தொடர்பு கொள்வதில்லை. அதனால் அவை மனிதர்களைத் தாக்குவதில் ஆச்சரியமில்லை என்று கோபன்ஹேகன் வனவிலங்கு காப்பகத்தின் விலங்கியல் இயக்குநரான மேட்ஸ் ஃப்ரோஸ்ட் பெர்டெல்சன் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இதன் பொருள் என்னவென்றால், அவை "கடுமையான சேதத்தை" ஏற்படுத்தும் திறன் கொண்டவை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால் இதற்கெல்லாம் வால்ரஸ் மீது மட்டுமே பழிபோட முடியாது என்கிறார் கனடாவைச் சேர்ந்த வால்ரஸ்கள் தொடர்பான அனுபவமுள்ள ஆர்க்டிக் கடல் பாலூட்டி உயிரியலாளர் ஜெஃப் டபிள்யூ ஹிக்டன்.
"இந்த விஷயத்தில் மனித நடத்தையும் கணிசமாக ஆபத்தை அதிகரித்தது" என்று அவர் கூறுகிறார். பார்வையாளர்களிடையே பொது அறிவு ஏன் இல்லை என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
"அந்த விலங்கைப் பார்ப்பதற்காக குழந்தைகளைக் கூட்டிச் சென்றவர்கள், அவர்களையும் ஆபத்தில் தள்ளியுள்ளனர்." என்கிறார் அவர்.
கொல்லாமல் மாற்று வழிகள் இல்லையா?
ஃபிரேயாவை கருணைக்கொலை செய்வதைத் தவிர வேறு ஒரு சாத்தியமான மாற்றுவழியை நிபுணர்களுடன் விவாதித்தது நார்வே மீன்வளத்துறை.
ஆனால் அப்படி எந்த வழியும் கிடைக்கவில்லை.
ஃப்ரேயாவுக்கு மயக்க மருந்து கொடுத்து எங்காவது கொண்டு சென்று விட்டுவிடலாம் என்று முதலில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் மயக்க மருந்து கொடுக்க வேண்டாம் என்று நார்வே கடல் ஆராய்ச்சிக் கழக அதிகாரிகள் முடிவு செய்தனர். மயக்க மருந்து கொடுத்தால் தண்ணீருக்குள் வால்ரஸ் மூழ்கிவிடவோ, மறைந்து கொள்ளவோ வாய்ப்புள்ளது என்று அவர்கள் கருதினர்.
வால்ரஸின் உருவம் பெரியது. அதன் ரத்த நாளத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதும் சிரமம். அதனால் மயக்க மருந்து கொடுப்பதில் சிக்கல்களும் இருந்தன.
இந்தத் திட்டம் மாத்திரமல்ல. ஒரு படகின் கீழ் வலையை வைத்து அதன் மூலம் ஃபிரேயாவை பிடிக்கும் திட்டமும் பரிசீலிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Reuters
"இது ஒப்பீட்டளவில் அதிக ஆபத்தை ஏற்படுத்தும், ஏனெனில் வால்ரஸ் வலையில் எளிதில் சிக்கி பீதியடைந்து மூழ்கிவிடும்" என்று கடல் ஆராய்ச்சிக் கழகம் விளக்கியது.
தண்ணீருக்குள் மேல்திறப்பு கொண்ட ஒரு கூண்டை வைத்து அதன் மூலம் அதை பாதுகாப்பான வேறு இடத்துக்கு கொண்டுபோய் விட்டிருக்கலாம் என்று இது தொடர்பான சாத்தியங்களை பரிசீலித்த கடல் ஆராய்ச்சி நிறுவனம் கூறியது.
ஆனால் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
ஏனெனில் ஃபிரேயாவின் விதி குறித்த இறுதி முடிவை நார்வேயின் மீன்வளத்துறைதான் எடுத்தது.
அதிகமான பொருள் செலவு கருத்தில் கொள்ளப்பட்டது. நாள்கள் செல்லச் செல்ல மக்கள் கூட்டத்துக்கு ஏற்படும் ஆபத்தும் பரிசீலிக்கப்பட்டது. எச்சரிக்கைகளை மீறி மக்கள் வால்ரஸை நெருங்கிச் செல்வதும் அரசுக்குப் பிரச்னையானது.
"வால்ரஸ் மற்றும் மக்களின் நடத்தை ஆகிய இரண்டும் சமீபத்தில் மாறிவிட்டன. எனவே கருணைக்கொலைதான் சரியான நடவடிக்கை என்று நாங்கள் முடிவு செய்தோம்" என்று மீன்வளத்துறை பிபிசியிடம் கூறியது.
வால்ரஸ் இப்போது இறந்துவிட்டது. ஆனாலும் அதன் பயணம் இன்னும் முடிந்துவிடவில்லை.
நார்வே கால்நடைத்துறை அதற்கு உடல்கூராய்வு செய்ய இருக்கிறது. அதன் மூலம் மதிப்பு மிக்க தகவல்கள் கிடைக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
வால்ரஸ்கள் அருகிவரும் விலங்குகளுக்கான சிவப்புப் பட்டியலில் இருக்கின்றன. எனினும் ஃப்ரேயாவின் மரணம் வால்ரஸ் எண்ணிக்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
"வால்ரஸ் எண்ணிக்கையில் பெரிய ஆபத்து இல்லை. இந்த விலங்கின் இழப்பு, துரதிருஷ்டவசமானது, ஆனால் அழிந்துபோகும் என்ற அளவுக்கான கவலை அல்ல" கனடாவைச் சேர்ந்த உயிரியலாளர் ஹிக்டன் கூறுகிறார்.
ஆனால் பெர்டெல்சன் இன்னும் அழுத்தமான சிக்கல்கள் இருப்பதை வலியுறுத்துகிறார். ஏன் வால்ரஸ் கடலோரத்துக்கு வந்தது என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார்.
அவர் குறிப்பிடுவது, "புவி வெப்பமடைதல் மற்றும் கடல் மாசுபாடு."

கீழ்க்கண்ட கட்டுரைகளும் உங்களுக்குப் பிடிக்கும்
பெண்களைத் தொடர்புபடுத்தி நீண்ட காலமாகப் பேசப்படும் கன்னித்திரை பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக் கதைகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு இந்தக் கட்டுரை உதவும்
மனிதர்கள் இறப்பது ஏன்?
சாகாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் மனித குல வரலாற்றில் புதியது அல்ல. ஆனால், அதை நோக்கிய ஆய்வுகளில் காலந்தோறும் புதிய புதிய வெளிச்சங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில், சாகாமல் வாழ்வதற்கு உடலில் என்ன இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடையை வழங்கியிருக்கிறது ஹைட்ரா என்னும் நீர்வாழ் உயிரி.
மனித வாழ்வில் மறுபிறப்பு சாத்தியமா? அறிவியல் சொல்வது என்ன?
இது மாதிரி எகிப்தின் மக்கள் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்னரே வலிமையான பிரமிடை அமைத்துப் பதப்படுத்தப்பட்ட இறந்த உடலைப் பாதுகாத்து வைத்துள்ளனர். இது மட்டுமல்ல நம் ஊர் தாழிகளிலும் பிரமிடுகளிலும் இறந்தவர்கள் உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்துவைத்துள்ளனர். பண்டையகால மக்கள் ஏன் இப்படி இறந்தவர்கள் உடலைப் பாதுகாக்க வேண்டும்? உடலுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் சேர்த்து ஏன் பாதுகாக்க வேண்டும்? இதற்கான காரணம் சுவாரஸ்யமானது. அவர்கள் மறுபிறவியில் நம்பிக்கை உடையவர்களாக இருந்துள்ளனர். இதுபற்றிய சுவாரஸ்யமான கட்டுரை.
அதிசயக் கிணறு; தோண்டத் தோண்ட மர்மம்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே முதுமொத்தான் மொழி, ஆயன்குளத்தில் அதிசய கிணறு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை காலங்களில் நொடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கிணற்றுக்குள் சென்றது. அந்த கிணற்றுக்குள் பல நாட்களாக தண்ணீர் சென்றபோதும் அது நிரம்பவில்லை. இதையடுத்து அந்த இடத்தை 'அதிசய கிணறு' என உள்ளூர்வாசிகள் அழைத்தனர். அந்த கிணறு குறித்து ஐஐடி பேராசிரியர்கள் ஆய்வு நடத்தினர். இந்தக் கிணறு பற்றித் தெரிந்து கொள்ள
மனிதர்கள் ஏன் முத்தமிட்டுக் கொள்கிறார்கள்?
மனிதர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிடும்போது, அவர்களின் சுவாசம் ஆழமடைந்து சீரற்றதாக மாறும்; இதயத்துடிப்பு அதிகரிக்க தொடங்கும்; கண்கள் விரிவடையும். இது முத்தமிடும்போது பலரும் தங்கள் கண்களை மூடுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
முத்தமிடுவது பற்றி, ஒருவர் மூன்று விஷயங்களை தெரிந்துக்கொள்ளவேண்டும். அவை என்னென்ன என்பது பற்றித் தெரிந்து கொள்ள
உடல்நலம்: 100 ஆண்டுகள் வாழ என்ன செய்ய வேண்டும்?
ஜப்பானில் நூறு வயதைக் கடந்தவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அங்கு வயதானவர்களின் விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. உலகில் எல்லோராலும் நூறு ஆண்டுகள் வாழ முடியுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும். இந்தக் கட்டுரையைப் படியுங்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













