பாலியல் உடல்நலம்: 'ஃபேன்டசி செக்ஸ்' எனப்படும் பாலியல் கற்பனைகள் திருமண உறவை பாதிக்குமா?

பட மூலாதாரம், Getty Images
துணையுடன் பாலுறவு கொள்ளும்போது வேறொருவரையோ, வேறொரு சூழலையையோ கற்பனை செய்து கொள்வது பலருக்குப் பிடிக்கும். இதை ஃபேன்டசி செக்ஸ் என்கிறார்கள்.
இது தேவையற்றது என்றும், பாலுறவில் திருப்தி ஏற்படாதவர்கள் மட்டுமே இதுபோன்ற கற்பனைகளைச் செய்து கொள்கிறார்கள் என்று சிலர் கருதுகிறார்கள். குற்றவுணர்வுக்கு ஆளாவதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
உண்மையில் பாலியல் கற்பனை என்பது இயற்கைக்குப் புறம்பானதா, ஏதேனும் குறைபாடா, இதனால் திருமண வாழ்க்கைக்குப் பாதிப்பு ஏற்படுமா என்பது போன்ற பல்வேறு கேள்விகளும் எழுகின்றன.
ஆனால் 90 சதவிகிதம் பேருக்கு இதுபோன்ற பாலியல் கற்பனை உணர்வுகள் உண்டு என்கிறார் பாலியல் மற்றும் மகப்பேறு நிபுணர் ஜெயராணி காமராஜ்.
"பல ஆய்வுகளில் 100 க்கு 90 சதவீத ஆண் பெண்களுக்கு பேன்டசி செக்ஸ் உணர்வுகள் உள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பலர் இதை வெளியில் சொல்வதில்லை. இது தவறில்லை. பாதிப்புகளையும் உருவாக்குவதில்லை." என்கிறார் அவர்.
"இது பாலுறவின் ஒரு வகை அல்ல. இது பாலுறவின் ஒரு பகுதி மட்டுமே. செக்ஸை போலவே இதுவும் இயற்கையே. தன்னுடைய உறவுக்கு தூண்டுதலாக ஒரு விஷயம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதை கற்பனையாக மனதில் நினைத்து பாலுறவில் ஈடுபடுவது பேன்டசி செக்ஸ். இந்த கற்பனை ஒரு வித மகிழ்ச்சியை கொடுக்கிறது. உலக அளவில் பேன்டசி செக்ஸ் தவறாக கருதப்படுவதில்லை. மகிழ்ச்சியான பாலுறவுக்கு பேன்டசி செக்ஸ் கூடுதல் திருப்தியை கொடுக்கிறது."

பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழுக்காக ஹேமா ராக்கேஷிடம் ஜெயராணி காமராஜ் பகிர்ந்து கொண்ட மேலும் சில தகவல்களைக் கீழே காணலாம்.
பேன்டசி செக்ஸ் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விஷயம் தானா?
உணர்வு ரீதியாக தம்பதிக்குள் ஆழமான உணர்வுகளை பேன்டசி செக்ஸ் தூண்டுகிறது. நாங்கள் மருத்துவ துறையில் செக்சில் ஆர்வம் குறைவாக இருக்கும் தம்பதிகளிடையே சிலருக்கு போர்னோகிராபி படங்களை பார்க்குமாறு மருத்துவ காரணங்களுக்காக பரிந்துரைக்கிறோம்.
இதேபோல பேன்டசி செக்ஸ் மூலம் உணர்வுகள் அதிகமாக தூண்டப்படுவதால் பல தம்பதிகளுக்கு இடையே திருப்திகரமான பாலுறவு ஏற்படுகிறது. அறிவியல் ரீதியாக பார்த்தால் இதில் தவறு இல்லை. தம்பதிக்குள் முறையான பாலுறவில் பேன்டசி செக்ஸ் அவர்களுக்குள் நெருக்கத்தை அதிகரிக்கிறது. இதில் குற்ற உணர்வுக்கு இடம் இல்லை.
பேன்டசி செக்ஸ் குழந்தையின்மை பிரச்சனையை சரி செய்கிறதா?
பேன்டசி செக்சை நாங்கள் மருத்துவ ரீதியாகவும் அணுகுகிறோம். தம்பதிகள் தன் துணையின் மீது ஆர்வமின்மை, பாலுறவில் நாட்டமின்மை போன்ற பிரச்சனைகளுக்காக வரும்போது, பேன்டசி செக்ஸ் தீர்வாக அமைகிறது. பல ஆய்வுகளில் ஆண் உறுப்புகள் மற்றும் பெண் உறுப்பில் சில கருவிகளை வைத்து, அவர்களுடைய பேன்டசி சிந்தனையை தூண்டினால் உணர்வுகள் அதிகரிக்கிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதே போல் பாலுறவுக்காக வேறு ஓர் உறவை நாடுவதும் இதன் மூலம் தடுக்கப்படுகிறது. ரத்த அழுத்தம், சர்க்கரை அதிகரிப்பு போன்றவையும் குறைவதாக அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன.
மருத்துவ ரீதியாக குற்ற உணர்வு இல்லாமல் பேன்டசி செக்சை எப்படி அணுகுவது?
பேண்டசி செக்சை பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. நம் சமூகத்தில் செக்சை பற்றி பேசினாலே குற்றமாகக் கருதுகிறார்கள். ஆனால் அது அப்படி அல்ல. உலக நாடுகளில் பேன்டசி செக்ஸ் பற்றி ஆய்வுகள் நடக்கிறது. மருத்துவ ரீதியாக மகிழ்ச்சியான பாலுறவுக்கு ஒரு வழியாக பேன்டசி செக்ஸ் இருக்கிறது. செக்ஸ் பற்றிய பல கற்பிதங்களையும் மூட நம்பிக்கைகளையும் நாம் அகற்ற வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

பட மூலாதாரம், Getty Images
போர்னோகிராபியும் பேன்டசி செக்ஸ்ம் ஒன்றா?
இல்லை இரண்டும் தனி தனி தான். போர்னோகிராபி நாம் நேரிடையாக பார்க்கும் காட்சிகள் மூலமாக உணர்வுகளை தூண்டுகிறது. பேண்டசி செக்ஸ் நம் சிந்தனையின் வழியே ரசிக்கும் ஆசைகளை வைத்து உணர்வுகளை தூண்டுகிறது. இன்றும் பல தம்பதிகளுக்கும் இடையே செக்சில் தனக்கு என்ன பிடிக்கும் என்பதை மனம் விட்டு பேசுவதில்லை. அப்படி தங்கள் கற்பனைகளை மனம் விட்டு பேசினால் பாலுறவில் உச்சகட்டம் அதிகளவில் கிடைக்கும்.
1999 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் திருமணமான இளவயதில் ஆர்கசம் அதிகம் அடைந்த பெண்களுக்கு பேன்டசி செக்ஸ் தான் தூண்டுகோலாக இருந்தது என்று சொல்லி இருக்கிறார்கள். ஆர்காஸ்மி எனப்படும் உச்சகட்டம் அடைவதில் பிரச்சனை உள்ள பெண்களுக்கு பேன்டசி செக்ஸ் குறித்து மருத்துவர்கள் பரிந்துரைத்து அவர்களின் செக்சுவல் பிரச்சனைகளை தீர்கிறார்கள். ஆனால் தம்பதிகள் இதை முழுமையாக புரிந்து கொள்வது அவசியம்.

பட மூலாதாரம், Getty Images
கணவன் மனைவிக்கு இடையே பரஸ்பரம் பேன்டசி செக்ஸ் குறித்து விவாதிக்க முடியுமா?
இதற்கான இடத்தை கணவன் - மனைவி கண்டிப்பாக உருவாக்க வேண்டும். தம்பதிகள் தங்களுடைய உறவை ஆழப்படுத்த பல்வேறு வழிகளில் ஒன்றாக பேன்டசி செக்ஸ் குற்ற உணர்வு இல்லாததாக இருக்கிறது. இருவருக்குள்ளும் புரிதலை ஆழப்படுத்தி மகிழ்ச்சியான பாலுறவுக்கு செக்ஸ் குறித்த கட்டுக்கதைகளை புறந்தள்ளி மனம் விட்டு தன்னுடைய தேவைகளை பேசினால் மேன்மேலும் அந்த உறவு பூத்துக் குலுங்கும்.
ஜெயராணி காமராஜின் முழுமையான பேட்டியைக் காண:
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்














