மனிதருக்கு பன்றி சிறுநீரகம்: அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் சாதனை

பட மூலாதாரம், NYU LANGONE
- எழுதியவர், மிஷெல் ராபர்ட்ஸ்
- பதவி, சுகாதார ஆசிரியர், பிபிசி இணைய செய்திகள்
அமெரிக்க அறுவை சிகிச்சை வல்லுநர்கள், ஒரு மனிதருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி சோதித்தனர். இது உடல் உறுப்பு தான பற்றாக்குறையை தீர்க்கும் என அவர்கள் நம்புகின்றனர்.
மூளைச்சாவு ஏற்பட்டு மருத்துவக் கருவிகளின் உதவியோடு சுவாசித்துவந்த நபருக்கு இந்த பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி அதை உடல் ஏற்றுக்கொள்கிறதா அல்லது நிராகரிக்கிறதா என்று மருத்துவர்கள் சோதித்தனர்.
முன்னதாக, பன்றியிடம் இருந்து வந்த சிறுநீரகத்தை, மனித உடல் நிராகரித்து விடக் கூடாது என்பதற்காக மரபணு ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
இந்த ஆய்வினை சக வல்லுநர்கள் சீராய்வு செய்யவில்லை. சீராய்வு செய்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடும் சஞ்சிகைகளிலும் இந்த ஆய்வு வெளியாகவில்லை. ஆனால், அதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றன.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை துறையில், இதுவரை மேற்கொள்ளப்பட்டவைகளில் இது ஒரு மிகப் பெரிய சோதனை முயற்சி என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பன்றியின் உறுப்புகளை மனிதர்களுக்கு பயன்படுத்துவது இது ஒன்றும் முதல் முறையல்ல. பன்றியின் இதய வால்வுகள் பரவலாக மனிதர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், NYU LANGONE
பொதுவாக பன்றியின் உடல் உறுப்புகள், அளவின் அடிப்படையில் மனிதர்களுக்கு சிறப்பாக பொருந்திப் போகக்கூடியவை.
அந்த சிறுநீரகத்தை மனிதருக்குப் பொருத்திய பிறகு அடுத்த இரண்டரை நாட்களுக்கு சிறுநீரகத்தை தீவிரமாக கண்காணித்து பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை வல்லுநர்கள் மேற்கொண்டனர்.
ஒரு பன்றியின் சிறுநீரகம், மனிதர்களின் சிறுநீரகத்தைப் போலவே செயல்படுவதைக் கண்டோம் என மருத்துவர் ராபர்ட் மான்ட்கொமெரி பிபிசி வேர்ல்ட் டுனைட் நிகழ்ச்சியில் கூறினார்.
"அந்த சிறுநீரகம் சீராக வேலை செய்தது, மனித உடல் அதை நிராகரிப்பது போலத் தெரியவில்லை" என்றார்.
அறுவை சிகிச்சை வல்லுநர்கள், சிறுநீரகத்தோடு பன்றியின் ஒரு சிறு பகுதி தைமஸ் சுரப்பியையும் மாற்றியுள்ளனர். நீண்ட காலத்தில், மனித உடல் சிறுநீரகத்தை நிராகரிப்பதிலிருந்து காப்பாற்ற, பன்றியின் திசுக்களோடு போராடும் மனித உடலின் எதிர்ப்புத் திறன் கொண்ட செல்களை திரட்டி, நிராகரிப்பைத் தடுக்க இந்த பாகம் உதவும் என மருத்துவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.
வழக்கமாக ஒருவர் உறுப்பு தானம் பெற வேண்டுமானால், தானம் கொடுப்பவர் இறக்க வேண்டும், அப்போது தான் மற்றொருவர் வாழ முடியும். இது நீண்ட காலத்துக்கு சரிப்பட்டு வராது என்கிறார் மருத்துவர் ராபர்ட்.
தற்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் 40 சதவீத நோயாளிகள், அவர்களுக்கான உறுப்பு கிடைப்பதற்கு முன்பே இறந்துவிடுகிறார்கள். நாம் பன்றியை உணவாக உட்கொள்கிறோம், பன்றியை மருத்துக்காகவும், அதன் ரத்த நாளங்களையும் பயன்படுத்துகிறோம். எனவே பன்றியின் உறுப்பை மனிதர்களுக்கு பயன்படுத்துவதும் பெரிய விஷயமல்ல என்கிறார் ராபர்ட்.
இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சிகள் தொடக்க கட்டத்தில்தான் இருக்கின்றன என்றும், இது குறித்து நிறைய ஆய்வுகள் தேவை என்றும் கூறியுள்ளார் மருத்துவர் ராபர்ட்.
இந்த அறுவை சிகிச்சையைப் மேற்கொள்ளப்பட்டவரின் குடும்பத்தினர், இந்த சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் எஃப்.டி.ஏ என்கிற உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பும் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் உறுப்புகளை இது போன்ற ஆய்வுகளுக்கு பயன்படுத்த அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பத்தாண்டு காலத்தில் பன்றியின் இதயம், நுரையீரல், கல்லீரல் மனிதர்களுக்கு வழங்கப்படலாம் என நம்புகிறார் மருத்துவர் ராபர்ட்.
பிற செய்திகள்:
- காரைக்கால் பாமக மாவட்டச் செயலாளர் வெட்டிக் கொலை
- டி 20 உலகக் கோப்பை: கோலி சிறப்பாக பிரியாவிடை பெற வரலாறு வழங்கும் வாய்ப்பு
- வைரமா, வனமா? ரூ.55,000 கோடி மதிப்புள்ள வைர சுரங்கம் பற்றிய ஆய்வு
- உண்ணக்கூடிய மண்ணையும் மலையையும் கொண்ட அற்புதத் தீவு - எங்குள்ளது?
- வங்கதேசத்தில் இஸ்லாம் இனி அதிகாரபூர்வ மதமாக இருக்காதா? மதச்சார்பற்ற அரசாகிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












