கொழுப்பை உறைய வைத்தல்: அழகு சிகிச்சையில் நிறைந்திருக்கும் ஆபத்து – எச்சரிக்கும் நிபுணர்கள்

அய்ல்சா

பட மூலாதாரம், AILSA BURN-MURDOCH

படக்குறிப்பு, மாடல் லிண்டாவைப் போல கொழுப்பை உறையச் செய்யும் சிகிச்சையை எடுத்துக் கொண்டார் அய்ல்சா
    • எழுதியவர், சாண்ட்ரின் லுங்கும்பு
    • பதவி, பிபிசி உலகச் சேவை

கொழுப்பை உறைய வைப்பது (Fat Freezing) தற்காலத்தில் பிரபலமான ஒரு அழகுச் சிகிச்சை முறையாகும். உலகம் முழுவதும் 80 லட்சம் பேர் இந்த முறையை மருத்துவமனைகளிலும் ஸ்பாக்களிலும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிரபலமான இந்த நடைமுறை, தவறான காரணங்களுக்காக அண்மையில் செய்தியில் அதிகமாக அடிபடத் தொடங்கியது.

1990களின் அசல் சூப்பர் மாடல்களில் ஒருவராக அறியப்பட்ட கனடாவின் லிண்டா எவாஞ்சலிஸ்டா இத்தகைய சிகிச்சையால் தனது உடல் "கொடூரமாக சிதைக்கப்பட்டதாக" கூறி 50 மில்லியன் டாலர் கேட்டு வழக்குத் தொடுத்திருக்கிறார்.

Paradoxical Adipose Hyperplasia (PAH) எனப்படும் "உறுதியளித்ததற்கு நேர்மாறான" ஒரு அரிய பக்க விளைவை தமக்கு ஏற்பட்டதாக அவர் கூறுகிறார். கொழுப்பு செல்கள் அதிகரிக்கும் இத்தகைய ஆபத்து குறித்து தமக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

லிண்டாவல் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிறுவனத்தின் கருத்தை அறிய பிபிசி முற்பட்டது ஆனால் நிறுவனம் இன்னும் பதில் கிடைக்கவில்லை. இப்போது அதன் இணையதளத்தில் "நோயாளியைப் பொறுத்து முடிவுகள் மாறுபடலாம்" மற்றும் "அரிதான பக்க விளைவுகளும் ஏற்படலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவை தங்களது சிகிச்சைக்குப் பிறகு சேர்க்கப்பட்டதாக லிண்டாவின் வழக்கறிஞர் கூறுகிறார்.

இந்தச் சிகிச்சையால் என்னென்ன அபாயங்கள் இருக்கின்றன? சிகிச்சையில் என்னென்ன அடங்கும்? இவை பற்றி மூன்று பேர் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

'Vaccum Cleaner மூலம் உறிஞ்சப்படுவது போல் இருந்தது'

அய்ல்சா

பட மூலாதாரம், AILSA BURN-MURDOCH

படக்குறிப்பு, சிகிச்சைக்குப் பின் அய்ல்சா

பிரிட்டனைச் சேர்ந்த 39 வயதான அய்ல்சா பர்ன்-முர்டோக்கிற்கு அழகுச் சிகிச்சைகள் ஒன்றும் புதிதல்ல.

அவர் தனது இளம் வயதிலிருந்தே தனது உடலமைப்புடன் போராடிக் கொண்டிருந்தார். 21 வயதில் கொழுப்பு நீக்கும் லிப்போசக்க்ஷன் மற்றும் மார்பக மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்தன. ஆனால் அப்போது அவை குறித்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் ரகசியமாக வைக்க முடிவு செய்தார்.

"எனக்கு தீவிரமான கொழுப்பு நீக்கும் சிகிச்சை நடந்தது. ஆனால், எனக்கு உண்ணும் குறைபாடு மற்றும் உடலை வெறுக்கும் டிஸ்மார்பிக் கோளாறு ஆகியவையும் இருந்தன.

"நான் கொழுப்பு நீக்கும் சிகிச்சை செய்து கொண்டிருக்கக் கூடாது. நான் மிகவும் சிறுத்துப் போயிருந்தேன்" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

கரீபியனுக்கு செல்ல வேண்டியிருந்ததால், உடல் குறித்த பழைய அச்சம் அவருக்கு ஏற்பட்டது. அதனால் கடந்த ஆண்டில் கொழுப்பு-உறைதல் சிகிச்சையை அவர் தேர்ந்தெடுத்தார். மூன்று மாதம் மூன்று அமர்வுகளாக முதுகு, வயிறு, கைகள், உள் தொடை ஆகியவற்றில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தச் சிகிச்சை பற்றி விரிவாக ஆய்வு செய்து அறிந்திருந்தபோதும், மலிவான இடத்தைத் தேர்வு செய்தார்.

"இரண்டு வாய்ப்புகள் இருந்தன. சிகையலங்கார நிபுணருக்குக் கீழே ஓர் அறையைக் கொண்ட ஒரே பெண் அறுவைச் சிகிச்சை செய்யும் இந்த இடம், அல்லது ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்குள் மிகவும் ஆடம்பரமான அழகு மையத்துக்குச் செல்வது."

"விலை என்னை அலைபாய வைத்தது. அதனால் நான் மிகவும் மலிவான இடத்துக்குச் சென்றேன்." என்கிறார்.

அய்ல்சா தனது சிகிச்சைக்காக மொத்தம் 875 அமெரிக்க டாலர்கள் செலவு செய்தார்.

மொத்த அமர்வுகள் மற்றும் சிகிச்சையளிக்கப்பட்ட உடல் பகுதிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, பிரிட்டனில் கொழுப்பு-உறைதல் சிகிச்சையின் செலவு 1090 அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும்.

சிகிச்சைக்கு முன் தனக்கு ஆலோசனை எதுவும் அளிக்கப்படவில்லை என்று கூறும் அய்ல்சா, சிகிச்சையின் முதல் நாளில்தான் சிகிச்சையளிப்பவரைச் சந்தித்ததாகவும் கூறுகிறார்.

அமர்வுகள் பொதுவாக உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் சுமார் 45 நிமிடங்கள் நீடிக்கும். உறிஞ்சும் கருவிகள் உடலில் பொருத்தப்பட்டன.

"ஒரு தூசு உறிஞ்சும் கருவியால் உறிஞ்சப்படுவது போல் உணர்ந்தேன்."

"என் வயிறு உறைந்த வெண்ணெய் தொகுப்பு போல் இருந்தது - தொடுவதற்கு மிகவும் குளிர்ச்சியாகவும் பாறைபோலக் கடினமாகவும் இருந்தது"

"எனது உடலில் கறுத்த செவ்வக வடிவில் கன்றிப்போன காயங்கள் இருந்தன. அவற்றில் மோசமானவை முதுகில் இருந்தன. அவை சில நாட்கள் அடர் ஊதா நிறத்தில் காணப்பட்டன. ஆனால் வலிமிகுந்த காயங்கள் அல்ல"

சிகிச்சை எதிர்பார்த்தபடி நடந்ததாக அய்ல்சா கூறுகிறார். ஆனால் சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு அதிக வித்தியாசம் எதுவும் தெரியவில்லை.

சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கன்றிப் போகும் சிராய்ப்பு, கொட்டுவது போன்ற உணர்வு, உணர்வின்மை, அரிப்பு போன்றவை இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளில் அடங்கும்.

"எனக்கு உண்மையில் எந்த விளைவுகளும் தெரியவில்லை. எதுவுமில்லா ஒன்றுக்கு 875 டாலர்கள் செலவழித்தேன் என்று நினைக்கிறேன்" என்றார் அவர்.

சிகிச்சைக்கு மலிவான இடத்தைத் தேர்வு செய்ததால் எந்த விளைவுகளும் இல்லாமல் போயிருக்கலாம் என்று அய்ல்சா சந்தேகிக்கிறார்.

"ஒருவேளை விலை உயர்ந்த அந்த டிபார்ட்மென்டல் ஸ்டோர் அழகு மையத்துக்குச் சென்றிருந்தால் நல்ல மாற்றங்கள் கிடைத்திருக்கலாம் " என்கிறார்.

அந்தச் சிகிச்சை இப்போது அய்ல்சாவை எங்கே கொண்டு போயிருக்கிறது?

"நான் புத்திசாலி. என் உடல் ஒரு பிரச்னை அல்ல. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த விரும்பினால், மேலோட்டமாக கொழுப்புக்குச் சிகிச்சை செய்வது அதற்கான வழி அல்ல என்பதை நான் புரிந்துகொள்கிறேன்."

கொழுப்பு உறைதல் சிகிச்சை என்றால் என்ன?

இது கிரையோலிபோலிசிஸ் என்ற நுட்பத்தைப் பயன்படுத்தும் சிகிச்சை. விடாப்பிடியான கொழுப்பு செல்களை மிகக் குறைந்த வெப்பநிலையில் குளிர்விப்பதன் மூலம் அவற்றை அழிப்பதாக அந்தச் சிகிச்சையை செய்வோர் கூறுகிறார்கள்.

லிண்டா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சூப்பர் மாடல் லிண்டா

உலகெங்கிலும் உள்ள பல கிளினிக்குகள், கொழுப்பால் ஏற்பட்ட வீக்கங்களை சுருங்கச் செய்வதாகக் கூறும் சிகிச்சையை வழங்குகின்றன. பொதுவாக கன்னத்தின் கீழ், தொடைகள், அடிவயிறு, முதுகு, கைகளில் இத்தகைய வீக்கங்கள் காணப்படும்.

உடல் பருமன் கொண்ட, எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது பொருத்தமானது அல்ல.

கன்றிப் போகும் சிராய்ப்பு, கொட்டுவது போன்ற உணர்வு, உணர்வின்மை, அரிப்பு போன்றவை இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளில் அடங்கும்.

சூப்பர்மாடல் லிண்டா எவாஞ்சலிஸ்டாவுக்கு ஏற்பட்ட PAH என்ற பக்கவிளைவு மிகவும் அரிதானது. அதில் கொழுப்பு செல்கள் சுருங்குவதற்குப் பதிலாக விரிவடைந்து அதிகரிக்கும்.

இந்தப் பக்கவிளைவுக்கு காரணம் எதுவும் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் ஆண்களுக்கு இது அதிகமாக ஏற்படுகிறது.

லண்டன் புகைப்படக் கலைஞர் ஜோவான் முகம்மது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஆரோக்கிய முயற்சியின்போது 15.9 கிலோ எடையை இழந்த பிறகு கொழுப்பு-உறைதல் சிகிச்சையை எடுத்துக் கொண்டார்.

"எனக்கு கொஞ்சம் தொப்பை இருப்பதை நான் கவனித்தேன். அது விடாப்பிடியான கொழுப்பாக இருந்தது. நான் எத்தனை வெவ்வேறு சிட்-அப் உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும் அது போகவில்லை" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"என் முடிவு சுய பிம்பத்தைப் பற்றியது. என்னைப் பற்றி நான் எப்படி உணர்ந்தேன் என்பது பற்றியது" என்று அவர் கூறுகிறார்.

இந்தச் சிகிச்சையை எடுத்துக் கொள்வது வெறுமனே சுய-அன்பைப் பற்றியதே அல்லாமல், மிகச் சிறந்த உடலை அடைவது அல்ல என்று ஜோவான் வலியுறுத்துகிறார்.

"நான் காலையில் எழுந்து கண்ணாடியில் பார்க்கும்போது, ​​எனக்கே ஒரு கட்டைவிரலை உயர்த்தி கண் சிமிட்டிக் கொள்ள முடியும்."

ஜோன் முகமது

பட மூலாதாரம், JOANNE MUHAMMAD

படக்குறிப்பு, "நான் ஒரு தாயாக இருக்கிறேன், கொஞ்சமாக அந்த விடாப்பிடி தொப்பை போய்விட்டதை என்னால் உணர முடிந்தது"

பல ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு லண்டனில் ஒரு சிறப்புச் சலுகையில் 613 டாலருக்கு அவர் கொழுப்பு உறைதல் சிகிச்சையை மேற்கொண்டார். அமர்வுகளின் போது மேற்பார்வையாளரின் கீழ் பயிற்சி பெறும் ஒருவரால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

"ஒவ்வொரு அடியிலும் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தனர். செயல்முறைக்கு முன்னால் ஒரு மருத்துவர் என்னிடம் பேசினார்."

"அவர்கள் மிகவும் தெளிவாக இருந்தனர். பக்கவிளைவுகள் பற்றி எச்சரிக்கைகள் கொடுத்தனர்" என்று அவர் கூறினார்.

இயந்திரத்தின் காரணமாக ஏதேனும் தவறு நடந்தால், PAH பக்க விளைவு ஏற்பட்டால் அவர்கள் கொழுப்பு நீக்க லிபோசக்ஷன் சிகிச்சைக்கு பணம் கொடுப்பார்கள்.

"நான் ஒரு தாயாக இருக்கிறேன், கொஞ்சமாக அந்த விடாப்பிடி தொப்பை போய்விட்டதை என்னால் உணர முடிந்தது. சிகிச்சை அந்த பகுதியில் இருந்து கொழுப்பு செல்களை நீக்கியது. அது அற்புதமாகத் தோன்றியது. ஆனால் பின்னர் பொதுமுடக்கம் வந்தது."

50களில் இருக்கும் ஜோன் அதே பகுதியில் சிகிச்சை செய்வதற்காக அதே கிளினிக்கிற்கு மீண்டும் சென்றார். ஆனால் இத்தகைய அழகியல் சிகிச்சைகளை விரைவான தீர்வுகளாகப் பார்க்கக்கூடாது என்று அவர் கூறுகிறார்.

"இந்த [சிகிச்சைகள்] வேலை செய்கின்றன" என்று அவர் கூறுகிறார். ஆனால் நீங்கள் உடற்பயிற்சி, நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை போன்ற சரியான விஷயங்களைச் செய்ய வேண்டும்."

'ஒவ்வொருவரும் அவரவர் உடம்பால் தங்களுக்கு வேண்டியதைச் செய்ய வேண்டும்'

கானாவின் அக்ராவைச் சேர்ந்த சுரங்க பொறியாளர் ரெய்னர் ஜுவாட்டி தனது தோற்றத்தை மாற்றுவதற்கான அழுத்தத்தை உணர்ந்தார்.

ரெய்னர்

பட மூலாதாரம், RAINER JUATI

படக்குறிப்பு, ரெய்னரைப் பொறுத்தவரை, உடலை மாற்ற விரும்புவதற்கு கலாச்சாரமும் சமூக ஊடகங்களும் முக்கிய காரணங்கள்.

சிகிச்சை பெறுவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தார். ஆனால் மாடல் லிண்டா எவாஞ்சலிஸ்டாவின் வழக்கு பற்றிய செய்திகளில் PAH பற்றி அறிந்த பிறகு அது சிறந்த தேர்வாக இருக்காது என்று இப்போது உணர்கிறார்.

வளர்ந்த பிறகு, ரெய்னர் தனது எடையில் ஏற்ற இறக்கத்தைக் கண்டார். பள்ளியில் ஒல்லியாக இருப்பதற்காகவும் பின்னர் குண்டாக இருப்பதற்காகவும் கிண்டல் செய்யப்பட்டார்.

ரெய்னரைப் பொறுத்தவரை, உடலை மாற்ற விரும்புவதற்கு கலாசாரமும் சமூக ஊடகங்களும் முக்கிய காரணங்கள்.

ஒரு வருட உணவுக் கட்டுப்பாடு மற்றும் சீரற்ற உடற்பயிற்சிகளை முயற்சி செய்த பின்னர், "சுலபமான வழியை" யோசித்தார்.

'ஆப்பிரிக்கப் பின்னணியில் இருந்து வருபவர்களிடம் [வெளிப்படையாக] குடும்ப உறுப்பினர்கள் கேலி செய்கிறார்கள் அல்லது குண்டாக இருப்பதாகச் சிரிக்கிறார்கள்" என்று 29 வயதான ரெய்ரனர் கூறுகிறார்.

"கானாவின் ட்வி மொழியில் 'ஒபோலோ' என்ற வழக்குச் சொல் உள்ளது. இது அதிக எடை அல்லது கொழுப்பைக் கொண்ட ஒருவரை கேலி செய்யப் பயன்படுத்தப்படுகிறது" என்கிறார் அவர்.

"நான் மிகவும் நேர்மறையானவள். அவரவர் விருப்பத்தைத் தேர்வு செய்து கொள்வதற்கு ஆதரவானவள். அதாவது ஒவ்வொருவரும் தங்கள் உடலைக் கொண்டு அவர்கள் விரும்பியதைச் செய்ய முடிய வேண்டும் என்று நான் நம்புகிறேன்"

உருவத்தில் மாற்றங்களைக் காண நீண்ட காலம் காத்திருக்காமல் எடை இழக்க அவர் விரும்பினார்.

"ஆனால் இறுதியில் மக்கள் சொல்லும் விஷயங்கள்தான் உங்களுக்குக் கிடைக்கும். பிறகு நீங்கள் எளிதான வழியைத் தேடுகிறீர்கள்."

கானாவில் அறுவை சிகிச்சை இன்னும் இயல்பானது அல்ல. ஆனால் அதை இயல்பாக்கும் வகையில் சிறு மாற்றம் ஏற்பட்டிருப்பதாக ரெய்னர் கூறுகிறார்.

"இது மறுக்கப்படுவது இப்போது குறைந்திருக்கிறது. ஏனென்றால் கடந்த காலங்களில் அறுவை சிகிச்சை பற்றி யாரும் பகிரந்து கொள்ளவோ அல்லது பேசவோ விரும்பியதில்லை. ஆனால் உங்களுக்குத் தெரிந்த ஒருவர் வெளிநாட்டுக்குச் சென்று சென்று வித்தியாசமாக திரும்பி வருவார்."

கொழுப்பை உறைய வைக்கும் சிகிச்சை தொடர்பான அபாயங்கள், சிக்கல்கள் பற்றி விழிப்புணர்வு இருந்தபோதிலும், அது அவளைத் தடுத்திருந்தாலும், பெரும்பாலான மக்களைத் தடுக்காது என்று ரெய்னர் கருதுகிறார்.

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் பிரிட்டிஷ் அழகியல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை சங்கத்தின் துணைத் தலைவர் மார்க் பசிஃபிகோ இந்தச் சிகிச்சை பற்றி எச்சரிக்கிறார். முறையாக மருத்துவப் பயிற்சி பெறாதவர்கள் சிகிச்சையளிப்பதாக அவர் கூறுகிறார்.

"சிகிச்சை அளிப்பவர்கள் தங்கள் நோயாளிகளை வாடிக்கையாளர்களாகக் கருதாமல் நேர்மையாக இருப்பதை உறுதி செய்வது முக்கியம். ஏனெனில் இது மருத்துவ சிகிச்சை" என்று அவர் கூறுகிறார்.

கொழுப்பை உறைய வைக்கும் மக்கள் "இது வலியற்றது அல்ல, அது எப்போதும் கணிக்க முடியாதது" என்பதை அறிந்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

பிரிட்டிஷ் அழகியல் பிளாஸ்டிக் சர்ஜன்களின் அசோசியேஷன் சமீபத்திய விவரங்களின்படி, கொழுப்பு உறைதல் சிகிச்சையால் ஏற்பட்ட பின்விளைவுகளைக் கொண்ட 21 நோயாளிகளை அதன் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பார்த்ததாக கூறுகிறது.

"PAH என்ற பின்விளைவு பொதுவானது அல்ல. ஆனால் குறிப்பிடத் தகுந்தது" என்கிறார் பசிஃபிகோ.

"PAH க்கு சிகிச்சையளிக்க இந்த நோயாளிகள் லிபோசக்ஷன் முதல் மிகப் பெரிய வயிற்றுப் புண்கள் வரை எதற்கும் உட்படுத்த வேண்டியிருந்தது"

இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகள் தொடர்பாக ஓர் ஒழுங்குமுறை இருக்க வேண்டும் என்று இந்த அமைப்பு வலியுறுத்துகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :