காஷ்மீரில் தீவிரவாதிகள் இலக்கு வைக்கும் குடியேறி தொழிலாளர்கள் - அதிர்ச்சிப் பின்னணி

காஷ்மீர் வன்முறை குடியேறிகள் அச்சம்

பட மூலாதாரம், sanjeev srivastav

    • எழுதியவர், பிகாரிலிருந்து சீட்டூ திவாரி, உத்தர பிரதேசத்திலிருந்து ஷஹ்பாஸ் அன்வர்
    • பதவி, பிபிசி இந்திக்காக

பிகாரிலிருந்து சீட்டு திவாரி, பிபிசி ந்திக்காக

"இப்போது எதற்கு காஷ்மீர்? அங்கு போய் என்ன செய்வது? இங்கேயே வேலை செய்து வயிறு வளர்க்கலாம். காஷ்மீர் போக மாட்டோம்"

30 வயதான தனது தம்பி அரவிந்த் குமார் ஷாவின் சடலத்துக்கு அருகே இருந்த 33 வயதான மன்டூ சா இவ்வாறு கூறுகிறார்.

அரவிந்த் குமார் சா, அக்டோபர் 16 அன்று ஸ்ரீநகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டார்.

பிகாரின் பாங்கா மாவட்டத்தின் பாராகாட் பகுதியின் பட்கரியில் வசிக்கும் அரவிந்த், ஸ்ரீநகரின் ஈத்கா பகுதியில் 17 ஆண்டுகளாக பானிபூரி விற்று வந்தார். அர்விந்தின் மூத்த சகோதரர் மன்டூ சா-வும் அருகிலுள்ள பகுதியில் ஒரு பானி பூரி கடை வைத்திருந்தார்.

'பானிபூரி வியாபாரி கொலை'

சம்பவத்தை நினைவுகூர்ந்த மன்டூ, அர்விந்த இருந்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் தமது கடை இருந்ததாகவும் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகவும் கூறுகிறார்.

மேலும் அவர், "நான் அரவிந்துக்கு ஃபோன் செய்தேன். ஆனால் பதில் இல்லை. பிறகு திடீரென பானிபூரிகாரரைக் கொன்று விட்டனர் என்ற சத்தமும் கேட்டது. நான் மீண்டும் மீண்டும் ஃபோன் செய்தேன். பின்னர் சில காஷ்மீரிகள் தொலைபேசியை எடுத்து அரவிந்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறினார்கள். நான் மருத்துவமனைக்குச் சென்ற போது அவன் இறந்து போயிருந்தான்," என்று கூறினார்.

"அடுத்த நாள் சடலத்தை எங்களிடம் கொடுத்தார்கள். முதலில் டெல்லிக்கு வந்து பின்னர் அங்கிருந்து பிகார் வந்தோம். காஷ்மீர் அரசு தன்னிடம் 50,000 ரூபாய் ரொக்கமும் 50,000 ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளது." என்றும் அவர் கூறினார்.

காஷ்மீர் வன்முறை குடியேறிகள் அச்சம்

பட மூலாதாரம், iStock

பிகாரின் பட்கரியில் பரபரப்பு

அரவிந்த், பட்கரி கிராமத்தைச் சேர்ந்தவர் உள்ளூர் பத்திரிகையாளர் தீப் ரஞ்சன். அவர் பிபிசியிடம் பேசும்போது, "இந்த கிராமத்தில் சுமார் 250 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மக்கள் சம்பாதிக்க ஜம்மு-காஷ்மீருக்குச் சென்றுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் இனிப்பு, பானிபூரி, சாட் வகைகள் விற்பவவர்களாக உள்ளனர்," என்று கூறுகிறார்.

ஐந்து சகோதரர்கள் கொண்ட அரவிந்தின் குடும்பத்தில் மூன்று பேர் தொழிலுக்காக ஜம்மு -காஷ்மீர் சென்றனர். முதலில், அரவிந்தின் மூத்த சகோதரர் பப்லு ஷா காஷ்மீர் சென்று அங்கு ஒரு பக்கோடா கடையை வைத்தார்.

"அரவிந்த் மூத்த சகோதரர் பப்லு ஷாவை பின்தொடர்ந்தார், நான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் சென்றேன். பின்னர் பப்லு சா பிகார் திரும்பினார். ஆனால், அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு கோவிட் காரணமாக அவர் இறந்து போனார். நாங்கள் ஒவ்வொரு மாதமும் 20,000-25,000 ரூபாயை வீட்டுக்கு அனுப்புவோம். கோடை காலத்தில் நாங்கள் பானிபூரியும் குளிர்காலத்தில் பட்டாணியும் விற்போம். ஆனால் இப்போது பெயர்கள் கேட்டுக் கேட்டுக் கொலை செய்யும் போக்கு இருக்கிறது. கிராமமே பயத்தில் இருக்கிறது. மக்கள் விரைவில் வீடு திரும்ப விரும்புகிறார்கள்," என்றார் அரவிந்தின் சகோதரர் மன்டூ.

காஷ்மீர் வன்முறை குடியேறிகள் அச்சம்

பட மூலாதாரம், sanjeev srivastav

இறுதி நிகழ்வில் துக்கம் அனுசரித்த ஊர்மக்கள்

பட்கரியின் இந்தப் பரபரப்பு, அண்டை மாவட்டமான பகல்பூர் மாவட்டத்தின் ஜகதீஷ்பூர் தொகுதி சைத்பூருக்கு வரை பரவியது. இங்கு 18 வயதான விக்ரம் தனது தந்தை வீரேந்திர பாஸ்வானின் இறுதிச் சடங்கு பூஜைகளை செய்தார். இவரது தந்தையும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.

ஆறு குழந்தைகளின் தந்தையான வீரேந்திர பாஸ்வானின் சடலத்தை பாட்னாவிலிருந்து அவர்களது சொந்த கிராமத்திற்குக் கொண்டு செல்லக் கூட வசதி இல்லாத அளவு வறுமையில் அவரது குடும்பம் வாடுகிறது.

விக்ரம் பிபிசியிடம் கூறுகையில், "எங்கள் தந்தையின் உடலை பார்க்க கூட முடியவில்லை. அவரை பாட்னாவிலிருந்து இங்கு கொண்டு வர பணம் இல்லை. காஷ்மீர் அரசு பாட்னாவுக்கு கொண்டு வரத் தயாராக இருந்தது, ஆனால் பாட்னாவிலிருந்து இங்கு கொண்டு வரக் கூடப் பணம் தேவையாயிற்றே. அதனால்தான் எனது சித்தப்பா காஷ்மீரிலேயே தந்தையின் உடலை தகனம் செய்தார், நாங்கள் இங்கே மற்ற சடங்குகளைச் செய்கிறோம்." என்றார்.

வீரேந்திரா முன்னர் கொல்கத்தாவில் பணிபுரிந்தார். அவர் தான் குடும்பத்தில் ஒரே ஆதாரமாக இருந்தார், மேலும் போதுமான வருமானம் இல்லை. அதனால் அவர் ஸ்ரீநகர் சென்றார்.

18 வயதான விக்ரம், "அப்பா ஒரு மாதத்திற்கு ஒன்பதாயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அனுப்புவார். கொரொனா ஊரடங்கால் வியாபாரம் முடங்கியது, ஆனால் வீடு திரும்புவதற்கு அவரிடம் போதுமான பணம் இல்லை. அக்டோபர் 10ஆம் தேதி இங்கு வருவதாக இருந்தார். ஆனால், விதி அவரது சடலம் கூட இங்கு வராமல் செய்து விட்டது," என்றார்.

காஷ்மீர் வன்முறை குடியேறிகள் அச்சம்

பட மூலாதாரம், ANI

'20 ஆயிரம் உதவி'

வீரேந்திராவின் மனைவி புதுல் தேவி, தற்போது வரை அரசாங்கத்திடமிருந்து 20 ஆயிரம் ரூபாய் உதவி கிடைத்துள்ளதாகவும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, இழப்பீடு மற்றும் குழந்தைகளின் கல்விக்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்று கூறுகிறார்.

வீரேந்திர பாஸ்வான் மற்றும் அரவிந்த் சா ஆகியோரின் கொலைக்குப் பிறகு, ஜம்மு -காஷ்மீரின் அனந்த்நாக் வானாபோஹில் இரண்டு பிஹாரி தொழிலாளர்கள் ராஜா ரிஷிதேவ் மற்றும் யோகேந்திர ரிஷிதேவ் கொல்லப்பட்டனர். இது தவிர, சுன்சுன் ரிஷிதேவ் காயமடைந்தார்.

மூவரும் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ராஜா ரிஷிதேவ் அராரியாவின் ராணிகஞ்சைச் சேர்ந்த பௌன்சி கிராமத்தைச் சேர்ந்தவர். 19 வயதான ராஜா ரிஷிதேவின் சித்தப்பாவான வித்யானந்த் ரிஷிதேவ், "அவர் நான்கு மாதங்களுக்கு முன்புதான் அனந்த்நாக் சென்றிருந்தார். அங்கு அவர் ஒரு கட்டடத் தொழிலாளியாக இருந்தார். அருகில் உள்ள கிராமத்தின் ஒப்பந்தக்காரர் அவரை அழைத்துச் சென்றார். இப்போது வரை வீட்டிற்கு 2000 ரூபாய் மட்டுமே அனுப்பியிருக்கிறார்." என்று கூறுகிறார்.

காஷ்மீர் வன்முறை குடியேறிகள் அச்சம்

பட மூலாதாரம், sanjeev srivastav

எதிர்கட்சிகளின் கேள்வி

தந்தையின் மனநிலை சரியில்லாத நிலையில் ராஜாவின் தாய் ஏற்கனவே இறந்துவிட்டார். அத்தகைய சூழ்நிலையில், அவருடைய 15 வயது சகோதரியை யார் கவனிப்பார்கள், இது ராஜாவின் குடும்பத்திற்கு முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வி.

இந்தக் கொலைகள் அனைத்திற்கும் முதல்வர் நிதிஷ்குமார் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜம்மு -காஷ்மீர் மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவையும் அவர் அழைத்துப் பேசியுள்ளார். தவிர, இறந்தவர்களின் குடும்பத்திற்குத் தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மறுபுறம், ஆர்ஜேடி எம்பி மனோஜ் ஜா மாநில மற்றும் மத்திய அரசின் அணுகுமுறை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். ஜம்மு -காஷ்மீரில் சிக்கியுள்ள பிஹார் மக்களை இங்கு அழைத்து வந்து, மாதம் 10 ஆயிரம் ரூபாயை அரசு வழங்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

அதே நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் அரசாங்கத்தை கிண்டல் செய்து, "பாம்புக்கடி போன்ற வழக்குகளுக்கு அரசாங்கம் நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குகிறது, ஆனால் அரசாங்கத்தின் தோல்வியால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 2 லட்சம் இழப்பீடு வழங்குகிறது!" என்று கூறியுள்ளார்.

அக்டோபர் 5 முதல் அக்டோபர் 17 வரை, ஜம்மு -காஷ்மீரில் நான்கு பிஹாரி தொழிலாளர்கள் இறந்துள்ளனர் மற்றும் ஒரு தொழிலாளி சுன்சுன் ரிஷிதேவ் காயமடைந்தார். பிகாரிகள் மீதான இந்தத் தொடர்ச்சியான தாக்குதலுக்கு எதிராக மக்கள் சமூக ஊடகங்களில் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

காஷ்மீர் வன்முறை குடியேறிகள் அச்சம்

பட மூலாதாரம், ANI

பாட்னாவின் டாடா சமூக அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் புஷ்பேந்திரா, "இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலில், 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அமைதி திரும்பி விட்டதாக அரசு கூறுவது வெற்றுப் பேச்சு என்று நிரூபணமாகியுள்ளது. இரண்டாவதாக, பயங்கரவாதிகளுக்கு எளிதான வழி பலவீனமான மனிதனை குறிவைப்பது," என்று கூறுகிறார்.

"எந்த இடத்திலும் பலவீனமான நபர் ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளியாகத் தான் இருக்க முடியும். ஒரு உள்ளூர்வாசி கொல்லப்பட்டால் அச்செய்து உள்ளூர்ச் செய்தியாக நின்று விடும். ஆனால் வேற்று மாநிலத்தவர் கொல்லப்பட்டால், அச்செய்தி தொலை தூரம் செல்லும்."

காஷ்மீர் வன்முறை குடியேறிகள் அச்சம்

பட மூலாதாரம், SHAHBAZ ANWAR

சஹரன்பூரிலிருந்து ஷஹபாஸ் அன்வர், பி பி சி ஹிந்திக்காக

ஜம்மு -காஷ்மீரில் தீவிரவாதிகளின் தோட்டாவுக்கு பலியான சஹரன்பூரைச் சேர்ந்த சகீர் அகமதுவின் உடல் திங்கள்கிழமை அதிகாலை அவரது வீட்டை அடைந்து காலை 9 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. மகன் ஜஹாங்கீர் தனது தந்தையின் மரணத்திற்காக அழுது கொண்டிருக்கிறார்.

அவர், "பணம் சம்பாதிக்கச் சென்ற அப்பா அங்கிருந்து ஒரு போர்வையில் சுற்றப்பட்டுச் சவமாகத் தான் வந்தார். இப்போது நான் மட்டும் தான் வீட்டில் எஞ்சியிருக்கிறேன். எங்கள் அம்மா ஆறு மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் இறந்துவிட்டார். நாங்கள் இன்னும் அந்தத் துயரத்திலிருந்தே மீளவில்லை" என்கிறார்.

சகீர் அகமது சனிக்கிழமை தீவிரவாதிகளால் சுடப்பட்டார். இந்த தகவல் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

சஹரன்பூரில் உள்ள குதுப்ஷேர் காவல் நிலையப் பகுதியின் சராய் ஹிசாமுதீன் வார்டு கவுன்சிலர் மன்சூர் பதர், "சகீர் அகமது ஒரு தச்சர். அவர் கைவினைப்பொருட்களையும் செய்து வந்தார். அவர் புல்வாமாவில் அஜாஸ் அகமதுவுடன் பணிபுரிந்து வந்தார். அவர் தான் ஜாகீர் அகமது துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியைத் தெரிவித்தார். " என்று கூறுகிறார்.

காஷ்மீர் வன்முறை குடியேறிகள் அச்சம்

பட மூலாதாரம், SHAHBAZ ANWAR

படக்குறிப்பு, ஜாகிர் அகமது குடும்பம்

பெரும் குடும்பம் குறைந்த வருமானம்

சகீர் அகமதுக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மூன்று மகள்களுக்கும் மகனுக்கும் திருமணமாகிவிட்டது, இளைய மகளுக்கு இன்னும் திருமணமாகவில்லை. சகீர் அகமதுவுக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். அவரது மகன் ஜஹாங்கீர் ராஜஸ்தானில் கூலி வேலை செய்கிறார்.

அவர், "எங்கள் தாய் மாமாவுக்கு அடுத்த மாதம் இங்கு திருமணம் இருந்தது. சிறிது பணம் ஏற்பாடு செய்து கொண்டு நவம்பரில் வீட்டுக்கு வருவதாக அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். இங்கு வேலை கிடைப்பது சிரமமாக இருந்தது. அதனால் தான் அவர் வேலை தேடி புல்வாமா சென்றார். அங்கே அவருக்கு வேலை கிடைத்தது. அவர் ஒரு மொபைல் கூட வைத்துக்கொள்ளாத ஒரு எளிமையான மனிதர்." என்று கூறுகிறார்.

சகீர் அகமதுவின் குடும்பம் பண நெருக்கடியால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவரது சடலத்தை எடுத்து வரக்கூட குடும்ப உறுப்பினர்களிடம் பணம் இல்லை என்பது இதைத் தெளிவாகக் காட்டுகிறது.

சகீரின் உறவினரின் சகோதரர் நயீம் அகமது, "சகீர் அகமதுவின் உடலைப் பெற, அவரது இளைய சகோதரரும் மருமகனும் சனிக்கிழமை இரவு புறப்பட்டனர். வாகன வாடகைக்குக் கொடுக்கக் கூட வீட்டில் போதுமான பணம் இல்லை. மக்கள் நன்கொடைகளைச் சேகரித்து ரயில் பயணத்திற்கான பணத்தைக் கொடுத்தனர். சகீர் அகமதுவின் உடல் புல்வாமா நிர்வாகத்தால் ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு அனுப்பப்பட்டது." என்று கூறுகிறார்.

சகீர் அகமதுவின் மரணம், அவரது குடும்ப உறுப்பினர்களை மிகவும் மோசமாக பாதித்துள்ளது. உறவினரின் சகோதரர் நயீம் கூறுகிறார், "பாருங்கள், எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் உயிர்களைக் கொன்றாலும், அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். தாக்குதல்களால் யாராவது ஒருவர் உயிரிழந்து கொண்டு தான் இருக்கிறார்கள். சகீர் குடும்பத்தின் வறுமையைக் கருத்தில் கொண்டு, யோகி அரசு அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு"

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :