பெர்சவரன்ஸ் ரோவர்: செவ்வாயில் பாறை மாதிரிகள் சேகரிப்பு பணி என்ன ஆனது? காத்திருக்கும் அமெரிக்காவின் நாசா

பெர்சவரன்ஸ் ரோவர் துளையிட்ட பாறை

பட மூலாதாரம், NASA/JPL-CALTECH

படக்குறிப்பு, பெர்சவரன்ஸ் ரோவர் துளையிட்ட பாறை
    • எழுதியவர், ஜொனாதன் ஆமோஸ்
    • பதவி, அறிவியல் செய்தியாளர்

செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட பெர்சவரன்ஸ் ரோவர் இரண்டாவது முயற்சியில் பாறை மாதிரிகளை சேகரித்து இருப்பதாகத் தெரிகிறது.

ராஷெட் (Rochette) என்றழைக்கப்படும் ஒரு தடிமனான திட்டில், ரோவர் இயந்திரம் நேர்த்தியாக ஒரு துளையிட்டு மாதிரிகளைச் சேகரித்து இருக்கிறது.

கடந்த வியாழக்கிழமை வெளியான படத்தில், பாறை மாதிரிகள் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டிருப்பது போலத் தெரிகிறது. இதற்கு முன் கடந்த ஆகஸ்ட் மாதம் பாறை மாதிரிகளைச் சேகரிக்க முயற்சிக்கப்பட்டது, ஆனால் பாறைகள் நொறுங்கிவிட்டன.

ஒருவேளை பாறை மாதிரிகள் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டால், பூமிக்கு கொண்டு வரும் நோக்கத்தோடு, வேற்று கிரகத்தில் முதல்முறையாக சேகரிக்கப்பட்ட பாறை மாதிரிகளாக இது இருக்கும்.

அடுத்தடுத்த ஆண்டுகளில், மொத்தம் 24 பாறை மாதிரிகளைச் சேகரிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த மாதிரிகள் இந்த தசாப்த காலத்துக்குள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சி மூலம் பூமிக்கு கொண்டு வரப்படும்.

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பாறைகள் சேகரிக்கப்பட்டதா இல்லையா என்பதை உறுதி செய்ய நாசா புகைப்படங்களுக்காக காத்திருக்கின்றன. ஆனால் இந்த முறை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கலாம் என நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.

ரோவர் தரையிறங்கிய இடம்
படக்குறிப்பு, ரோவர் தரையிறங்கிய இடம்

"பாறை மாதிரிகள் சேகரிக்கப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்ய நல்ல வெளிச்சத்தில் மேலும் சில படங்கள் எடுக்கப்பட வேண்டும்" என ரோவர் இயந்திரத்தின் முதன்மை பொறியாளரான ஆடம் ஸ்டெல்ட்ஸ்னர் ட்விட் செய்திருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஜெசெரோ க்ரேடர் என்கிற இடத்தில் தரையிறங்கியது. அப்பகுதியில் கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஏரி இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

எனவே ஜெசெரோ க்ரேடர் படிமங்களில் நுண்ணுயிரிகளின் தடயங்கள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ரோவர் தரையிறக்கப்பட்டதில் இருந்து இரண்டு கிலோமீட்டருக்கு மேல் சற்றே உயரத்தில் இருக்கும் சிடாடெல் (Citadelle) என்கிற மேட்டுப் பகுதி நோக்கி இயக்கப்பட்டது. ராஷெட் (Rochette) என குறிப்பிடப்பட்டிருக்கும் இடத்தில் துளையிட்டு பாறை மாதிரிகளைச் சேகரிக்க பெர்சவரன்ஸ் ரோவர் குழுவினர் தேர்வு செய்தனர்.

விரல் அளவுக்கு தடிமனான பாறை மாதிரிகளை துளையிட்டு, டைட்டானியம் குழாய்க்குள் சேகரிக்கும் அளவுக்கு ரோவரில் இயந்திரங்கள் இருக்கின்றன.

பாறை மாதிரிகளை சிலிண்டரில் சேகரித்து மூடுவதற்கு முன், ரோவர் படம் எடுக்கும்.

ஆகஸ்ட் மாத முயற்சியில் துளைக்கு அருகிலேயே நொறுங்கிய பாறைத் துகள்கள்

பட மூலாதாரம், NASA/JPL-CALTECH

படக்குறிப்பு, ஆகஸ்ட் மாத முயற்சியில் துளைக்கு அருகிலேயே நொறுங்கிய பாறைத் துகள்கள்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பாறை மாதிரிகளைச் சேகரிக்க முயன்ற போது, இந்த கட்டத்தில்தான் குழாயில் பாறை மாதிரிகள் எதுவும் இல்லை என்று உணர்ந்தனர். துளையிட்டு பாறை மாதிரிகளைச் சேகரிக்கும் அமைப்பு, பாறையை நொறுக்கி பொடியாக்கி இருந்தது. நொறுக்கப்பட்ட பாறை, அத்துளைக்கு அருகிலேயே விழுந்தன.

ஆனால் இந்த முறை ராஷெட்டில் பாறை மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாகத்தான் தெரிகிறது. அதை அடுத்தடுத்து வரும் படங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இந்த முறை பாறை மாதிரிகள் சேகரிக்கப்பட்டது போலத் தான் தெரிகிறது

பட மூலாதாரம், NASA/JPL-CALTECH

படக்குறிப்பு, இந்த முறை பாறை மாதிரிகள் சேகரிக்கப்பட்டது போலத் தான் தெரிகிறது

பெர்சவரன்ஸ் ரோவர் இயந்திரத்தை, இன்ஜெனியூட்டி என்கிற சிறிய ஹெலிகாப்டர் கண்காணித்து வருகிறது.

சோதனை முயற்சியாக செவ்வாய் கிரகத்துக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த ட்ரோன், தற்போது ரோவர் பயணிக்கும் செவ்வாய் கிரகத்தின் நில அமைப்புகளை கண்காணிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இன்ஜெனியூட்டி 12 முறை பறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :