வெள்ளி ஆராய்ச்சிக்கு அடித்தது சுக்கிர தசை: கடல் இருந்ததா? எரிமலை சீறுகிறதா? நாசா அனுப்பும் விண்கலன் ஆராயும்

வெள்ளியின் படம். இரண்டு விண்கலன்களும் வெள்ளியில் இன்னும் எரிமலை சீறுகிறதா என்பது முதல் அங்கே கடல் இருந்ததா என்பது வரை பல கேள்விகளை ஆராயும்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இரண்டு விண்கலன்களும் வெள்ளியில் இன்னும் எரிமலை சீறுகிறதா என்பது முதல் அங்கே கடல் இருந்ததா என்பது வரை பல கேள்விகளை ஆராயும்.

சூரிய குடும்பத்தில் மிக வெப்பமான கோளான வெள்ளிக்கு இரண்டு விண்கலன்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா.

இந்த இரண்டு விண்கலன்களும் புவிக்கு அருகில் உள்ள கோளான வெள்ளியின் வளி மண்டலத்தையும், மண்ணியல் கூறுகளையும் ஆராயும்.

இந்த விண்கலன் ஒவ்வொன்றையும் அனுப்புவதற்கு தலா 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் விண்கலன் 2028ம் ஆண்டும், இரண்டாவது கலன் 2030-ம் ஆண்டும் செலுத்தப்படும்.

கடந்த 30 ஆண்டு காலமாக அமெரிக்கா வெள்ளிக்கு விண்கலன் எதையும் அனுப்பியதில்லை. எனவே, இந்த இரண்டு விண்கலன்களும் வெள்ளி கோளை ஆராய வாய்ப்பளிக்கும் என்று நாசா அமைப்பின் தலைவர் பில் நெல்சன் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு வெள்ளிக்கு அமெரிக்கா அனுப்பிய கடைசி விண்கலன் மெகல்லன். இந்த சுற்றுவட்டக் கலன் 1990ல் செலுத்தப்பட்டது. அதற்குப் பிறகு ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அனுப்பிய விண்கலன்கள் வெள்ளியை சுற்றிவந்துள்ளன. இந்த விண்கல திட்டம் தொடர்பான ஆய்வேடுகளை சக ஆய்வாளர்கள் ஆராய்ந்து ஏற்றதை அடுத்து, இந்த விண்கலன்களால் ஏற்பட சாத்தியமான அறிவியல் பலன்களையும், இந்த விண்கலன்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்த பிறகு இந்த திட்டங்கள் ஏற்கப்பட்டன.

வெள்ளியை ஆராய்வதற்காக இரண்டு விண்கலன்களை அனுப்பும் முடிவை புதன்கிழமை அறிவித்த நாசா தலைவர் பில் நெல்சன்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, வெள்ளியை ஆராய்வதற்காக இரண்டு விண்கலன்களை அனுப்பும் முடிவை புதன்கிழமை அறிவித்த நாசா தலைவர் பில் நெல்சன்.

"ஈயத்தை வைத்தால் தானாக உருகும் அளவுக்கு வெள்ளி கோளின் தரை வெப்பநிலை உள்ளது. இப்படி நரகத் தீயாக வெள்ளி ஏன் தகித்துக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதே இந்த இரண்டு விண்கலப் பயணங்களின் நோக்கம்" என்று தெரிவித்துள்ளார் நெல்சன்.

சூரியனிடம் இருந்து வரிசையில் இரண்டாவதாக உள்ள வெள்ளிதான் சூரிய குடும்பத்திலேயே மிக வெப்பமான கோள். இதன் தரை வெப்பநிலை சுமார் 500 டிகிரி செல்ஷியஸ். இது ஈயத்தை உருக்கப் போதுமானது.

முதல் விண்கலனான டாவின்சி+ (Deep Atmosphere Venus Investigation of Noble gases, Chemistry, and Imaging) விண்கலன் வெள்ளி கோளின் வளி மண்டலத்தை ஆராயும். இந்த கோள் எப்படி உருவானது, வளர்ந்தது என்பது குறித்து அறிந்துகொள்ள புலம் தேடுவதே இந்தப் பயணத்தின் நோக்கம். கடந்த காலத்தில் எப்போதாவது வெள்ளியில் கடல் இருந்ததா என்று ஆராய்வதும் இந்தப் பயணத்தின் நோக்கமாக இருக்கும்.

வெள்ளியின் கல் பாவியது போன்ற மண்ணியல் கூறுகளை காட்டும் உயர் தெளிவான படங்களை முதல் முறையாக டாவின்சி+ எடுத்து அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மண்ணியல் கூறு புவியின் கண்ட அமைப்புடன் ஒப்புநோக்கும் வகையில் இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் நினைக்கின்றனர். இந்த ஒப்பீடு வெள்ளியில் கண்டத் திட்டு இருப்பதை உறுதி செய்யலாம் என்றும் அவர்கள் நினைக்கின்றனர்.

இரண்டாவது விண்கலன் பெயர் வெரிட்டாஸ் (Venus Emissivity, Radio Science, InSAR, Topography, and Spectroscopy). இந்த விண்கலன் வெள்ளியின் புறப்பரப்பை படம் பிடித்து அதன் மண்ணியல் வரலாற்றையும், இது எப்படி புவியைப் போல அல்லாமல் மாறுபட்ட முறையில் உருவானது என்பதையும் ஆராயும்.

இந்த விண்கலன் ஒருவிதமான ரேடாரைப் பயன்படுத்தும். இதன் மூலம் எரிமலைகளும், நில நடுக்கங்களும் இன்னும் வெள்ளியில் நிகழ்கின்றனவா என்பதை பதிவு செய்யும்.

"வெள்ளியைப் பற்றி நாம் எவ்வளவு குறைவாக அறிந்துவைத்திருக்கிறோம் என்பது வியப்பூட்டக்கூடியது. இந்த இரண்டு விண்கலப் பயணங்களும் வெள்ளியின் விண்ணில் உலவும் மேகங்களில் இருந்து, அதன் தரைப்பரப்பில் உள்ள எரிமலைகள், அதன் உட்கரு வரை ஆராய்ந்து கூறும்" என்கிறார் நாசாவின் கோள் அறிவியல் பிரிவைச் சேர்ந்த டாம் வேக்னர்.

"அந்த தகவல்கள், நாம் மீண்டும் புதிதாக வெள்ளியைக் கண்டுபிடித்துள்ளோமா என்று ஆச்சரியப்படும் வகையில் இருக்கும்," என்று அவர் கூறினார்.

line
வரைகலை: வெள்ளியில் இன்னும் எரிமலைகள் சீறிக்கொண்டிருக்கலாம்.

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, வரைகலை: வெள்ளியில் இன்னும் எரிமலைகள் சீறிக்கொண்டிருக்கலாம்.
line

வெள்ளி கவனம் பெறுவதில் விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சி

அறிவியல் ஆசிரியர் பால் ரின்கன் எழுதிய பகுப்பாய்வு

கடந்த சில பதிற்றாண்டுகளாக நாசாவின் கோள் ஆராய்ச்சி செலவுத் திட்டங்களில் செவ்வாய் கோளுக்கான விண்கலன்களே பெரும்பகுதியை விழுங்கின.

வெள்ளி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் இந்த காலப் பகுதியில், தங்கள் கோளுக்குப் போதிய முன்னுரிமை வழங்கப்படவில்லை என்று வருந்தினர்.சமீப காலத்தில் நிலைமை மாறிவருகிறது. புதிய கருத்துகள், புதிய விளக்கங்கள், புதிய விஞ்ஞானிகள் நம்முடைய அருகாமையில் உள்ள வெள்ளி கோள் பற்றிய நமது புரிதலை மாற்றியமைக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

வெள்ளியை இறந்தகோள் என்று பலர் நீண்டகாலம் கருதி வந்தனர். ஆனால், மண்ணியல் ரீதியாக நிறைய செயல்பாடு உள்ள கோள் வெள்ளி என்று இப்போது பலரும் நினைக்கிறார்கள். வெள்ளியில் காலந்தோறும், எரிமலைகள் தோன்றுவதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள். வெள்ளியின் வரலாற்றில் ஒரு நூறு கோடி ஆண்டுகளுக்கு அதில் பெருங்கடல்கள் இருந்திருக்கலாம்.

வெள்ளியின் அடர்த்தியான வளி மண்டலத்தில் ஒரு பகுதியில் நுண்ணுயிரிகள் மேகங்களோடு இணைந்து உலவிக்கொண்டிருக்கலாம். உலையாகத் தகித்துக்கொண்டிருக்கும் வெள்ளியைப் பற்றிய ஆராய்ச்சிக்காக தமது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட விஞ்ஞானிகளுக்கு நாசாவின் கண்கள் மீண்டும் வெள்ளியின் மீது விழுந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :