"பாஜக வளர்ச்சிக்கு திமுக உதவுகிறது" - பாஜகவின் புதிய தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம்

வேலூர் இப்ராஹிம்
படக்குறிப்பு, வேலூர் இப்ராஹிம்
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

பா.ஜ.கவின் சிறுபான்மைப் பிரிவின் தேசிய செயலாளராக வேலூர் இப்ராஹிம் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோதியின் ஆதரவாளராகப் பார்க்கப்படும் இப்ராஹிம், `தமிழ்நாட்டில் தி.மு.கவுக்கு உண்மையான எதிர்கட்சி நாங்கள்தான்' என்கிறார்.

`தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமா அத்' என்ற அமைப்பை வேலூரைச் சேர்ந்த சையது இப்ராஹிம் நடத்தி வருகிறார். இந்நிலையில், மே 31ஆம் தேதி பா.ஜ.கவின் சிறுபான்மைப் பிரிவுக்கு துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், தேசிய செயலாளர்கள் ஆகிய பதவிகளுக்கான பெயர்ப் பட்டியல் ஒன்று வெளியானது. அதில், வேலூர் இப்ராஹிமுக்கு தேசிய செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

`உங்களுக்குப் பதவி கிடைத்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?' என பிபிசி தமிழுக்காக இப்ராஹிமிடம் பேசினோம்.

``நான் தேசிய செயலாளராக அறிவிக்கப்பட்ட விஷயமே எனக்குத் தெரியாது. பாஜகவை சேர்ந்த முக்கிய நபர்கள் வாழ்த்து தெரிவித்த பின்புதான் இந்தத் தகவல் எனக்குத் தெரியும். அதன்பிறகு டெல்லியில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்களைக் கொண்டு செல்வதோடு மட்டுமல்லாமல், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் செயல்களை தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன்.

அந்த வகையில் தேசப்பற்றுடன் பிரசாரம் செய்யக் கூடியவர்களை பாஜக கண்ணியப்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மேலும், இஸ்லாமிய மக்களுக்குக் கிடைத்த ஓர் அங்கீகாரமாகத்தான் இந்தப் பதவியை பார்க்கிறேன்.

`மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது' எனும் பொய்ப் பிரசாரத்தை முறியடிக்கவும் மத்திய அரசின் திட்டங்கள் சிறுபான்மை மக்களுக்குச் சென்றடைவதற்காகவும் இந்தப் பொறுப்பை எனக்கு வழங்கியுள்ளனர். முந்தைய காலகட்டங்களைவிடவும் நன்றாகச் செயல்படுவேன்."

வேலூர் இப்ராஹிம்

`தமிழ்நாட்டில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இருந்ததால், சிறுபான்மை சமூக வாக்குகள் தி.மு.க அணிக்கு சென்றதாக பரவலாக கருத்து உள்ளதே. இந்த நிலையில், உங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பை முஸ்லிம் மக்கள் எப்படி பார்க்கிறார்கள்?

``எனக்கு பொறுப்பு கிடைப்பதால் மட்டும் சமூகத்தின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு விடாது. இந்தப் பொறுப்பை பயன்படுத்தி மக்கள் மனதில் உள்ள அச்சத்தைப் போக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை அவர்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். இது நீண்டகால போராட்டம். ஏறக்குறைய 50 ஆண்டுகாலமாக திராவிடக் கட்சிகள் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற பிம்பத்தை உடைக்க சற்று காலதாமதம் ஏற்படும். முடிவில், இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களும் பா.ஜ.கவை வரவேற்பார்கள்."

`தமிழ்நாட்டில் இந்துத்துவாவை வளர்க்கப் பாடுபடுவேன்' என்கிறீர்களே.. இது சாத்தியமா?

``இந்துத்துவா என்பதை தேசத்துக்கு எதிரானது என பார்க்கும் மனநிலை இங்குள்ளது. நாட்டின் கலாசாரம் மற்றும் பண்பாட்டை வளர்ப்பதுதான் இந்துத்துவா. இங்குள்ள கலாசாரத்தை வளர்க்காமல் ஐரோப்பிய மற்றும் அரபு கலாசாரத்தையா நம்மால் வளர்க்க முடியும்? ஒவ்வொருவருக்கும் பண்பாடு, கலாசாரம் இருக்கிறது. அதைத்தான் இந்துத்வா வலியுறுத்துகிறது. வெறுமனே இந்து மதத்தின் வழிபாட்டை வலியுறுத்துவது என்பது இல்லை. ஒரு சிலர் இந்து மதத்துக்கு ஆதரவானது போலப் பேசுகின்றனர். அப்படியில்லை என்பதை வரக் கூடிய காலங்களில் மக்கள் புரிந்து கொள்வார்கள். இந்துத்துவா சித்தாந்தம் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்துவேன்."

`பாஜக அரசு கொண்டு வந்த முத்தலாக் தடை சட்டம், சி.ஏ.ஏ, காஷ்மீர் விவகாரம் போன்றவற்றை மையப்படுத்தியே பா.ஜ.கவுக்கு எதிராக சிறுபான்மை மக்கள் அணி திரள்வதாக கூறப்படுகிறதே.... அது உண்மையா?'

``சி.ஏ.ஏ, என்.ஐ.ஏ ஆகிய விவகாரங்களைப் பற்றி பொதுமேடைகளில் பேசுவதற்கு இஸ்லாமிய தலைவர்கள் தயாராக இருக்கிறார்களா? அவ்வாறு விவாதிக்க வராமல் நாங்கள் எதிர்ப்போம் என்று மட்டும் கூறுவது எந்தவகையில் சரியானது?"

"பா.ஜ.கவின் வளர்ச்சிக்கு தி.மு.க உதவுகிறது" - பா.ஜ.கவில் தேசிய செயலாளரான வேலூர் இப்ராஹிம்

பட மூலாதாரம், PMO INDIA TWITTER PAGE

அதிமுகவை சேர்ந்த அன்வர் ராஜாவும், நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடைச் சட்டத்தை எதிர்த்துப் பேசினாரே?

அது அ.தி.மு.கவின் நிலைப்பாடு இல்லை என மறுக்கத்தானே செய்தார்கள்? திராவிட கட்சிகளின் நிலைப்பாட்டைத்தான் அ.தி.மு.க கொண்டுள்ளது. அவர்கள் ஒரு சில நேரங்களில் ஆதரிப்பார்கள், ஒரு சில நேரங்களில் எதிர்ப்பார்கள். அது அவர்களின் நிலைப்பாடு. பா.ஜ.கவின் நிலைப்பாடு என்பது அனைத்து மக்களுக்கான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுதான்.

மத்திய அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்களில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக எதாவது இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம். அதனை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம். மத்திய அரசின் செயல்பாடுகளை தவறு எனச் சான்றுகளோடு நிரூபித்தால் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்."

`அண்மைக்காலமாக, பா.ஜ.கவின் மூத்த நிர்வாகிகளை தி.மு.க அமைச்சர்கள் சாடுவது அதிகரித்துள்ளதே?'

`` சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் அ.தி.மு.க எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனாலும், தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்குமான எதிர் எதிர் கொள்கைகள்தான் மக்கள் மத்தியில் வேகமாகப் பேசப்படுகிறது. எங்களுக்கு நான்கு எம்.எல்.ஏக்கள் இருந்தாலும் அதிகப்படியான பணிகளைச் செய்து மக்களிடம் செல்லக் கூடிய கட்டமைப்பை பா.ஜ.க ஏற்படுத்தியுள்ளது. இதனை தி.மு.கவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருவகையில் இது நன்மையும்கூட. கட்சியின் வளர்ச்சிக்கு உதவுவதால் தி.மு.கவுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்."

`பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதால் சொந்த சமூக மக்களின் எதிர்ப்பை எதிர்கொண்ட அனுபவம் இருக்கிறதா?'

``ஆமாம். கடந்த காலங்களில் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறேன். உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நபர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறேன். இதை விட இஸ்லாமிய மக்கள் தொடர்ந்து சிந்திக்கிறார்கள். மத்திய அரசை தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே இருந்தால் நலத்திட்ட உதவிகளை எப்படிப் பெறுவது என யோசிக்கிறார்கள். இந்தச் சிந்தனை மாற்றம் படிப்படியாக நடக்கும். இதன் பிறகு அடிப்படைவாத சக்திகள் முழுமையாக முடங்குவார்கள்."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :