எரி நட்சத்திரங்கள்: விரைவில் விண்கல் பொழிவு – ஆச்சரியம் தரும் தகவல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், இவா ஓண்டிவீரோஸ்
- பதவி, பிபிசி
அது அழகாக இருக்கும், எளிதாக அந்தக் காட்சி கிடைக்கும், அது இலவசமானது: எரி நட்சத்திரங்களின் கண்ணைக் கவரும் காட்சிகள் உங்களுக்கு அருகே வானத்தில் தோன்றப் போகிறது. எப்படி, எப்போது அதை நீங்கள் அனுபவிக்கலாம் என்பதையும், அது ஏன் நடக்கிறது என்பதையும் இங்கே அறியலாம்.
தூசிகள் மற்றும் குப்பைகளுக்கு இடையில் நடந்து செல்வதற்கு யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் சில நேரங்களில் ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள். ஆகஸ்ட் மாத மத்தியில் விண்வெளி குப்பைகளுக்கு இடையில் பூமி கடந்து செல்லும் போது, இரவு நேரத்தில் வானில் இதைப் பார்க்கலாம்.
எரிநட்சத்திரங்களின் கண்கொள்ளா காட்சியைக் கண்டு அனுபவிப்பதற்கான வாய்ப்பு இது. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நெருப்புக் கோளங்களையும் கூட பார்க்கலாம்.
எரிநட்சத்திரங்கள் என்பவை என்ன?
ஸ்விப்ஃட்-டட்டில் எனப்படும் வால் நட்சத்திரம் தனது சுற்றுப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. பூமியைப் போல இந்த வால் நட்சத்திரமும் சூரியனை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சுற்றி வருகிறது.
``ஒவ்வொரு ஆண்டும் அந்த வால் நட்சத்திரத்தின் சுற்றுப்பாதையில் பூமி மோதும் போது, இடிபாடுகள் குப்பைகளாக சிதறுகின்றன'' என்று கிரீன்விச் ராயல் அருங்காட்சியக வானவியல் நிபுணர் எட்வர்டு புளூமர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
பனிக்கட்டி, தூசி, அரசியின் அளவிலான சிறிய கற்கள் என்ற அளவில் வால் நட்சத்திரத்தின் சிதறிய பகுதிகள் காற்று மண்டலத்தின் மேல் அடுக்கில் மோதும் போது, ``அது தீப் பிடித்து ஆச்சர்யமான தோற்றத்தை உருவாக்குகின்றன. ஒரு விநாடிக்கும் குறைவான நேரமே இந்தக் காட்சி தோன்றும் என்றாலும் அது அற்புதமானதாக இருக்கும்'' என்கிறார் புளூமர்.
``இது நிச்சயம் நடக்கக் கூடியது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மத்தியில் இதன் அதிகபட்ச செயல்பாடு இருக்கும் என்றாலும் ஜூலை மாதத்தின் பிற்பகுதியிலும் இதைக் காணலாம்'' என்பது தான் இதன் சிறப்பு என்று அவர் தெரிவித்தார்.
வெறும் கண்களால் இதைப் பார்க்க முடியும். எப்போதாவது ஒரு நாள் தான் இது தோன்றும் என்பதால், பல இரவுகள் நீங்கள் வானைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
சில நேரங்களில் பெரிய அளவிலான வால் நட்சத்திர பகுதிகளைக் காண முடியும். ``உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், இன்னும் பிரமிக்கத்தக்க வகையில், நெருப்புக் கோளத்தையும் காணலாம்'' என்றும் புளூமர் கூறினார். பல ஆண்டுகள் இவர் கவனித்து வருகிறபோதிலும், தனது கண்களால் சில விநாடிகளுக்கு மட்டுமே இதுபோன்ற காட்சிகளை இவர் கண்டிருக்கிறார்.
அவ்வளவு மதிப்பு மிக்கதா?
``நிச்சயமாக!'' என்கிறார் புளூமர். ``எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு இதைப் பாருங்கள்'' என்கிறார் அவர்.
இயற்கை நடத்தும் வாணவேடிக்கை தான் இந்த எரிநட்சத்திரங்களின் காட்சி. உன்னிப்பாகக் கவனித்து வந்தால், சில நேரங்களில் ஒரு மணி நேரத்தில் 100 எரிநட்சத்திரங்களை கூட பார்க்க முடியும்.

பட மூலாதாரம், Getty Images
விண்கற்கள் பூமியின் காற்று மண்டலத்தில் மணிக்கு 2,15,000 கிலோ மீட்டர் வேகத்தில் நுழைகின்றன என்றாலும், அவற்றால் எந்த ஆபத்தும் நேர்வதில்லை.
``படுக்கையை விரித்து, படுத்துக் கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருங்கள், கண்கொள்ளா காட்சிகளைக் காணலாம்'' என்கிறார் புளூமர்.
``அது அற்புதமாக இருக்கும்'' உலகெங்கும் இருந்து இந்தக் காட்சிகளைக் காணலாம்.
பெயரில் என்ன இருக்கிறது?
``பெர்சியஸ் விண்மீன் குழுவில் இருந்து தெறித்து விழுவதைப் போல இருப்பதால் இவற்றை எரிநட்சத்திரம் என்கிறோம்'' என்று புளூமர் தெரிவித்தார். ஆனால் இந்தக் காட்சியை பலரும் பார்த்து, அவரவர் கலாசாரத்துக்கு ஏற்ப வெவ்வேறு பெயர்கள் வைத்துள்ளனர்.
கத்தோலிக்க மரபில் இது ``புனித லாரன்ஸின் கண்ணீர் துளிகள்'' என்று குறிப்பிடுகிறார்கள். கி.பி. 258 ஆம் ஆண்டில் ரோமானியர்களால் மத துவேஷம் காரணமாக கிறிஸ்தவர்களை கொலை செய்தபோது, ரோம் நகரில் இறந்த ஏழு மதகுருமார்களில் ஒருவரான லாரன்சியஸ்-ஐ அது குறிப்பிடுகிறது.
அந்தத் துறவி, ஆகஸ்ட் 10 ஆம் தேதி உயிருடன் எரிக்கப்பட்ட காரணத்தால் அந்த நெருப்பின் மிச்சங்கள்தான், ஆண்டின் அந்தப் பகுதியில் எரிநட்சத்திரங்களாகத் தோன்றுகின்றன என்று மத்திய தரைக்கடல் பகுதியில் கிராமியக் கதைகளில் சொல்லப்படுகிறது.
ஆனால், ரோமானியர்களுக்கு முன்பிருந்தே பெர்சியா, பாபிலோன், எகிப்து, கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் இதுகுறித்த துல்லியமான வானசாஸ்திரப் பதிவுகள் காணப்படுகின்றன. விண்கற்கள் பொழிவு பற்றி அவற்றில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
முதன்முதலில் சீனாவில் ஹான் ஆட்சிக் காலத்தில் இந்த எரிநட்சத்திரங்கள் பற்றி முதலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ``காலை நேரத்தில் 100க்கும் மேற்பட்ட விண்கற்கள் பறந்து வந்தன'' என்று கி.பி. 36 ஆம் ஆண்டில் வானியல் நிபுணர்கள் பதிவு செய்து வைத்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
எரிநட்சத்திரங்களைக் காண்பதற்கு சில டிப்ஸ்கள்
வானியல் நிபுணர் பின்வரும் யோசனைகளைக் கூறுகிறார்:
- கிழக்கு, வட கிழக்கு திசையில் பரவலான ஒரு பகுதியில் கவனம் செலுத்துங்கள். விண்மீன் கூட்டத்தைத் தெரியும் என்றால், கேசியோப்பியா அருகில் எரிநட்சத்திரத்தை காண கவனத்தை செலுத்துங்கள். அப்படி தெரியாது என்றால், உங்களுக்கு உதவ ஆப் உதவியை நாடுங்கள்
- நோய்த் தொற்றுக்கு முன்பு நட்சத்திரங்களைக் கவனிப்பது எளிதாக இருந்தது. ஆனால் இப்போதும் சமூக இடைவெளியைப் பின்பற்றி நீங்கள் அதைச் செய்யலாம்.
- பாதி இருட்டில் ஒரு நேரத்தைத் தேர்வு செய்து, படுக்கையை விரித்து, சௌகரியமாகப் படுத்துக் கொண்டு முழு இருட்டு வரும் வரை காத்திருங்கள். எல்லா விளக்குகள், செல்போன்கள் மற்றும் வெளிச்சம் தரும் எல்லா சாதனங்களையும் நீங்கள் அணைத்துவிட வேண்டும்.
- இயற்கையின் அற்புதமான பரிசை அனுபவிக்க தயாராக தளர்ந்த மனதுடன் இருங்கள்: நீங்கள் ஒரு மணி நேரத்துக்கு 100 விண்கற்களைப் பார்க்கப் போகிறீர்கள். ஒருவேளை நெருப்புக் கோளத்தைக்கூட நீங்கள் பார்க்கலாம்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்:
- உலகிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கியது ரஷ்யா
- பெண்களும், பிராமணர் அல்லாதோரும் கல்வி கற்பதை எதிர்த்தாரா திலகர்?
- 1989-இல் இந்தி உரையை மொழிபெயர்த்தாரா கனிமொழி? வைரலாகும் புகைப்படங்களின் பின்னணி என்ன?
- பாகிஸ்தான் வரைபடத்தில் குஜராத்தின் ஜுனாகத் பகுதி: இம்ரான் கான் அரசுக்கு என்ன லாபம்?
- திருப்பதி கோயில் ஊழியர்கள் 743 பேருக்கு கொரோனா: சமூக வலைத் தளங்களில் கடும் விமர்சனம்
- ஐக்கிய அரபு அமீரக விசா, பர்மிட்டுகளுக்கு 1 மாதம் காலக்கெடு நீட்டிப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












