பிறப்பு விகிதம் குறைவு: 2100-ல் உலகில் என்ன மாற்றங்கள் நிகழும்?

பட மூலாதாரம், Empics
- எழுதியவர், ஜேம்ஸ் கலாகெர்
- பதவி, சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர், பிபிசி
உலகளவில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் குறைந்து வருவது, சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.இதனால் இந்த நூற்றாண்டின் இறுதியில், ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தொகை குறையும்.
2100-ம் ஆண்டில் ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட 23 நாடுகளில் நாடுகளில் மக்கள் தொகை பாதியாகக் குறையும் எனக் கருதப்படுகிறது.
மேலும் இந்த நாடுகளில் வயதானவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். புதிதாகப் பிறக்கும் குழந்தைகளை விட, 80 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
என்ன நடக்கிறது?
பெண்கள், குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது.
இந்த எண்ணிக்கை ஏறக்குறைய 2.1க்கும் குறைவாக இருந்தால், மக்கள் தொகை குறையத் தொடங்கும்.

பட மூலாதாரம், Getty Images
1950களில் ஒவ்வொரு பெண்ணும் தங்களது வாழ்நாளில் கிட்டதட்ட 4.7 குழந்தைகளைப் பெற்றுக்கொண்டனர்.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடு மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில், 2017-ம் ஆண்டில் பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் எண்ணிக்கை 2.4ஆக குறைந்துள்ளது எனவும், 2100-ம் ஆண்டில் அது 1.7ஆக குறையும் எனவும் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் 2064-ம் ஆண்டில் இந்த உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 9.7 பில்லியன் மக்கள் இருப்பார்கள் என்றும், இந்த நூற்றாண்டின் இறுதியில் அது 8.8 பில்லியனாக குறையும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
’’இது ஒரு பெரிய விஷயம். உலகின் பெரும்பகுதியில் இயற்கையாகவே மக்கள் தொகை வீழ்ச்சியடைந்து வருகிறது’’ என்கிறார் ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் கிறிஸ்டோபர் முர்ரே.
குழந்தைகள் பிறப்பு விகிதம் ஏன் குறைகிறது?
தற்காலத்தில் குழந்தைகள் பிறப்பு குறைகிறது எனக் கூறினால், உடனே பலருக்கு நினைவுக்கு வருவது விந்தணுக்களின் எண்ணிக்கை பற்றித்தான். ஆனால், தற்போது இந்த பிரச்சனைக்கும் விந்தணுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

பட மூலாதாரம், Getty Images
நன்கு படித்து பின்னர் வேலைக்குச் செல்லும் பெண்கள், குறைவான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவே விரும்புகின்றனர்.
எந்த நாடு அதிகம் பாதிக்கப்படும்?
2017-ம் ஆண்டு 128 மில்லியனாக இருந்த ஜப்பானின் அதிகபட்ச மக்கள் தொகை, இந்த நூற்றாண்டின் இறுதியில் 53 மில்லியனாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் இத்தாலியிலும், 61 மில்லியனில் இருந்து 28 மில்லியனாக மக்கள் தொகை குறையும்.
மேலும், ஸ்பெயின், போர்ச்சுகல், தாய்லாந்து, தென் கொரியா போன்ற 23 நாடுகளில் இந்த நூற்றாண்டின் இறுதியில் மக்கள் தொகை பாதியாகக் குறையும்.
தற்போது உலகிலே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில், அதிகபட்சமாக 1.4 பில்லியனில் இருந்து 2100-ம் ஆண்டு 732 மில்லியனாக மக்கள் தொகை குறையும். சீனா விட்டுச்சென்ற முதலிடத்தை இந்தியா பிடிக்கும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டனில் 2063-ம் ஆண்டு அதிகபட்சமாக 75 மில்லியனாக இருக்கும் மக்கள் தொகை, 2100-ம் ஆண்டு 71 மில்லியனாக குறையும்.
இது நிச்சயம் ஒரு உலகப்பிரச்சனையாக உருவெடுக்கக்கூடும். ஏனெனில் உலகில் மொத்தமுள்ள 195 நாடுகளில் 183 நாடுகளில் வயதானவர்களை விடப் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் விகிதம் குறைவாக இருக்கும்.
இது ஏன் பிரச்சனை?
குறைவான மக்கள் தொகையால், சுற்றுச்சூழலுக்கு நல்லதுதானே எனச் சிலர் நினைக்கலாம்.
‘’சமூக கட்டமைப்பில் பல விளைவுகளை இது ஏற்படுத்தும். குழந்தைகளை விட வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.’’ என்கிறார் பேராசிரியர் கிறிஸ்டோபர் முர்ரே.
ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை 2017-ல் 681 மில்லியனாக இருந்தநிலையில், 2100-ல் அது 401 மில்லியனாக குறையும்.
அதே போல 2017-ல் 141 மில்லியனாக இருந்த 80 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை, 2100-ல் 866 மில்லியனாக அதிகரிக்கும் என ஆய்வு கூறுகிறது.
வயதானவர்கள் அதிகம் இருக்கும் அந்த உலகில் யார் வரி கட்டுவது? வயதானவர்களின் மருத்துவச் செலவுகளை யார் கவனித்துக்கொள்வது? அவர்களை யார் பார்த்துக்கொள்வது? போன்ற கேள்விகள் இப்போதே அச்சத்தை ஏற்படுத்துகின்றன என்கிறார் கிறிஸ்டோபர்.
இதற்குத் தீர்வு என்ன?
குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை குறைவதைச் சமாளிக்க, பிரிட்டன் போன்ற நாடுகள் குடியேற்றத்துக்கு ஆதரவளிக்கின்றன. ஆனால், அனைத்து நாடுகளிலும் மக்கள் தொகை குறைந்துவரும் நிலையில், இது தீர்வாக இருக்காது.
சில நாடுகள் மேம்பட்ட மகப்பேறு வசதி, தந்தைக்கு விடுப்பு, இலவச குழந்தை பராமரிப்பு, நிதி சலுகைகள் மற்றும் கூடுதல் வேலைவாய்ப்பு உரிமைகள் போன்ற கொள்கைகளை முயன்றுள்ளன.
ஸ்வீடன், ஒவ்வொரு பெண்ணும் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணிக்கையை 1.7ல் இருந்து 1.9ஆக அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இது இன்னும் 1.3ஆகவே உள்ளது.
’’விரைவில் இதற்கு நாம் தீர்வு கண்டுபிடிக்காவிட்டால், அடுத்த சில நூற்றாண்டுகளில் மனித இனமே அழிந்துபோகும் வாய்ப்பு உள்ளது’’ என எச்சரிக்கிறார் கிறிஸ்டோபர்.
அதே சமயம் பெண்களின் சுதந்திரத்தில் தலையிடக்கூடாது எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
‘’குழந்தைகள் பிறப்பு குறைவது பல நாடுகளுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகப் பெண்களின் உரிமையிலும், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தலையிடக்கூடாது’’ என்கிறார் பேராசிரியர் ஸ்டின் எமில் வோல்செட்.
ஆப்பிரிக்காவில் என்ன நிலவரம்?
ஆப்பிரிக்க பிராந்தியத்தில் 2100-ம் ஆண்டு மக்கள் தொகை மூன்று பில்லியனாக அதிகரிக்கும்.

பட மூலாதாரம், Getty Images
உலகளவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக நைஜீரியா மாறும் என்கிறது ஆய்வு.
’’இதே நிலை நீடித்தால், உலக நாடுகளில் அதிகஎண்ணிக்கையில் ஆப்பிரிக்க மக்கள் வாழ்வார்கள்.’’ என்கிறார் கிறிஸ்டோபர்.
ஏன் 2.1 என்ற விகிதத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்?
ஒரு தாய் தந்தையும், இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் மக்கள் தொலை அதே அளவில் இருக்கும் என நினைக்கலாம்.
ஆனால், என்னதான் சுகாதாரத்துறை வளர்ச்சியடைந்திருந்தாலும், குழந்தைப் பருவத்தில் அனைத்து குழந்தைகளும் உயிர்வாழ்வது சாத்தியம் இல்லை.
எனவே வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒரு பெண், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் எண்ணிக்கை 2.1ஆக இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பட மூலாதாரம், Alamy
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












