பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அமேசான் காடுகளில் விவசாயம் பார்த்த மக்கள் - சுவாரஸ்ய தகவல்

பட மூலாதாரம், Getty Images
மிகவும் அடர்த்தியான அழகிய வனப்பகுதியாக நாம் அறியும் அமேசான் காடுகளில் 10,000 ஆண்டுகளுக்கு முன்பே பயிர் இடப்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
10,000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளடங்கிய பகுதியாக கருதப்பட்ட தற்போதைய வடக்கு போலியாவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஆராய்ச்சி குழு ஒன்று கண்டறிந்துள்ளது. இந்த பகுதியில் வசித்த மக்கள் மக்காச்சோளம், பூசனி, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட கிழங்கு வகைகளை பயிர் செய்துள்ளனர் என்றும் இந்த ஆராய்ச்சி குழுவினர் குறிப்பிடுகின்றனர்.
மழைக்காலத்தில் வெள்ளக்காடாகிவிடும் இந்த நிலப்பரப்பில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் எப்படி விவசாயம் செய்தார்கள் என்ற விதத்தையும் இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆங்காங்கே தீவுகளைப் போல மேடுகளை உருவாக்கி அந்த மேடுகளின் மீது அவர்கள் விவசாயம் செய்துவந்தனர் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பனி யுகத்திற்கு பிறகு, உலகின் வெப்பநிலை தொடர்ச்சியாக உயர்ந்தது. இதனால் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இவற்றில் மிக முக்கியமானது என்னவென்றால், ஆரம்பகால நாகரிகங்கள் வேட்டையாடி, வனப் பொருள் திரட்டி வாழும் வாழ்க்கையில் இருந்து முன்னேறி, உணவைப் பயிரிடத் தொடங்கினர்.

பட மூலாதாரம், UMBERTO LOMBARDO
உலகில் இப்படி ஆதியில் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட இடங்கள் என நான்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன.
சீனா நெல் பயிர் செய்துள்ளது, மத்திய கிழக்கு நாடுகளில் தானியங்கள் பயிரிடப்பட்டுள்ளன, மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் மக்காசோளம் பயிரிடப்பட்டுள்ளது, சீமைத்தினை மற்றும் கிழங்கு வகைகள் தென் அமெரிக்காவின் அண்டெஸ் மலைப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
தென்மேற்கு அமேசானின் லானோஸ் டி மோக்சோஸ் பகுதியை ஆதியில் விவசாயம் நடந்த ஐந்தாவது முக்கியப் பகுதியாகப் பார்க்க வேண்டும் என்று தற்போதைய புதிய ஆய்வு குறிப்பிடுகிறது. தற்போது இந்த பகுதிகள் மரங்கள் அடர்ந்த நிலப்பரப்புகளாக விளங்குகின்றன. இந்த மேட்டுத் தீவுகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை.
இப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் குறிப்பிட்ட இடங்களைத் தேர்வு செய்து அங்கு தங்கள் கழிவுப் பொருள்களை கொட்டிக்கொண்டிருந்ததால் நாளடைவில் இந்த மேடுகள் தீவுகளைப் போல உருவாகின என சுவிஸ்சர்லாந்தின் பெர்ன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அம்பேர்ட்டோ லொம்பர்டோ கூறுகிறார். நிச்சயமாக, குப்பைகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இப்படி உருவான மேடுகளில் முளைக்கும் மரங்கள், தாவரங்கள் மழைக் காலத்தில் இங்கே தேங்கும்போது, நீர்மட்டத்துக்கு மேலே இருந்தன. மண்ணும் வளம் மிக்கதாக இருந்ததால் இந்த மேட்டுத் தீவுகள் மக்கள் குடியேறவும் உகந்ததாக அமைந்தன.
இதைப் போல 4,700 மேட்டுத் தீவுகள் இன்றும் காணப்படுகின்றன.
இத்தகைய தீவுகளில் 30 சதவீதத்தை ஆராச்சியாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

பட மூலாதாரம், UMBERTO LOMBARDO
தாவரங்களின் உயிரணுக்களுக்குள் உருவாகும் பைட்டோலித்ஸ் எனப்படும் சிலிக்காவின் நுண் துகள்களை அவர்கள் கண்டுபிடித்தனர். இந்த பைட்டோலித்ஸ் சிறிய கண்ணாடி துண்டுகள் போல காட்சி அளிக்கும். வெவ்வேறு தவரங்களில் பைட்டோலித்ஸ் வெவ்வேறு வகையாக காட்சி அளிக்கும்.
இவற்றை வைத்து மரவள்ளிக்கிழங்கு 10,350 ஆண்டுகளுக்கு முன்பே பயிரிடப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பூசனி வகை காய்கள் 10,250 ஆண்டுகளுக்கு முன்பும், மக்காசோளம் 6,850 ஆண்டுகளுக்கு முன்பும் பயிரிடப்பட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மனிதர்கள் தடம்படாத காடுகள் என்று நாம் கருதும் அமேசான் காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்து விவசாயம் மேற்கொண்டுள்ளனர் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் அந்த காலக்கட்டத்தில் வாழ்ந்த மனிதர்கள் இனிப்பு கிழங்கு வகைகள், வேர்க்கடலை, மற்றும் மீன் இறைச்சியையும் உட்கொண்டு வாழ்ந்து வந்தனர் என்பதற்கான ஆதாரமும் கிடைத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

பட மூலாதாரம், UMBERTO LOMBARDO
உலகம் வெப்பமடைந்து வரும் நிலையில் சுற்றுசூழல் மாற்றங்களின் உலகளாவிய தாக்கத்திற்கு இந்த ஆய்வு முக்கிய எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
மனித வரலாறு தோன்றும் காலக்கட்டத்திற்கு முன்பே விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை இந்த ஆய்வின் மூலம் மீண்டும் தெளிவுபடுத்த முடிகிறது, பனியுகத்தில் இருந்து விடைபெற்று கால நிலை மாற்றம் நிகழ துவங்கிய காலகட்டத்தில் விவசாயம் மேற்கொண்டுள்ளனர் என்பது நல்ல செய்தியும் கூட என்கிறார் முனைவர் லோம்பர்டோ.
வெப்பம் நிறைந்த காலக்கட்டத்திற்குள் நாம் நுழையும்போது, உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் விவசாயம் செய்ய துவங்கியுள்ளார்கள்.
பிற செய்திகள்:












