தமிழகத்தில் கொரோனா: புதிதாக 98 பேருக்கு தொற்று; 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - அண்மைய தகவல்கள்

கொரோனா விழிப்புணர்வு

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் மேலும் 98 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொடர்பான தினசரி செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ், நாட்டிலேயே இந்த நோயை எதிர்கொள்ள தமிழ்நாடுதான் சிறப்பான நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் தற்போது வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 33,850. அரசுக் கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 136. 28 நாட்கள் கண்காணிப்பை முடித்தவர்கள் எண்ணிக்கை 63,380.

தமிழ்நாட்டில் கொரோனா சோதனையை நடத்துவதற்கு வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாநில பொது சுகாதார சோதனைக்கூடம் என மேலும் இரண்டு சோதனைக் கூடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, மாநிலத்தில் இந்நோயை ஆராயக்கூடிய அரசாங்க ஆய்வகங்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, 9 தனியார் ஆய்வகங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 12,746 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இன்று புதிதாக 98 பேருக்கு அந்நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்றுவரை 1,075 பேருக்கு அந்நோய் இருப்பதாக அறியப்பட்ட நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 1,173ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 பேர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள்.

தமிழ்நாட்டில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11. தற்போது வெளிப்படையாக நோயுடன் இருப்பவர்கள் 7 பேர். இதில் யாருமே வென்டிலேட்டரில் இல்லை. 58 பேர் சிகிச்சை முடிந்து வெளியேறியுள்ளனர்.

தமிழ்நாட்டுக்கு வருவதாகச் சொல்லப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் எப்போது வருமென செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, இது தொடர்பாக சில விளக்கங்களை அளித்தார் பீலா ராஜேஷ்.

"ஜனவரி மாதத்தில்தான் இந்நோயை ஒரு பெருந்தொற்று நோயாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இந்நோய் வூஹானில் மட்டுமே இருந்த அந்த காலகட்டத்திலேயே உடனடியாக நாம் விமான நிலையங்களில் ஆட்களைச் சோதிக்கத் துவங்கிவிட்டோம். அதில் தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலம். அந்த காலகட்டத்திலேயே 146 கோடிக்கு மருந்துகள் வாங்கப்பட்டன.

இந்தியாவில் யாருக்கும் தொற்றே ஏற்படாத அந்த காலகட்டத்திலேயே தமிழகத்தில் மூன்றடுக்கு முகமூடி 5 லட்சம் இருந்தது. என் 95 முகமூடி ஐம்பதாயிரம் இருந்தது. பாதுகாப்பு ஆடை 40,000 இருந்தது. வென்டிலேட்டர்கள் அனைத்தும் உடனடியாக சர்வீஸ் செய்யப்பட்டு, 2500 வென்டிலேட்டர்கள் தயார் செய்யப்பட்டன.

கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 1075 ஆக உயர்வு

பட மூலாதாரம், FAcebook

இந்நோய் எல்லா நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்ததும் 1.5 கோடி மூன்றடுக்கு முகமூடிக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. 40,00,000 என் 95 முகமூடிகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. 21,00,000 பாதுகாப்பு ஆடைகளுக்கு ஆர்டர் தரப்பட்டது. 560 வென்டிலேட்டர்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த நோயை எதிர்கொள்ள மிகச் சிறப்பான நிலையில் இருக்கும் மாநிலம் தமிழ்நாடுதான்.

தற்போது தமிழ்நாட்டில் 65 லட்சம் மூன்றடுக்கு முகமூடி இருக்கிறது. மூன்று லட்சம் என்95 முகமூடி இருக்கிறது. 2 லட்சம் பாதுகாப்பு ஆடைகள் உள்ளன. 3371 வென்டிலேட்டர்கள் உள்ளன.

சோதனை கிட்களைப் பொறுத்தவரை இந்திய அரசிடமிருந்து பத்தாயிரம் வந்தது. மாநில அரசு 14,000 கிட்களை ஆர்டர் செய்தது. இதுபோத 1.3 லட்சம் கிட்களை மேலும் ஆர்டர் செய்திருக்கிறோம்.

இது தவிர, அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் நடப்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

Banner image reading 'more about coronavirus'
Banner

வேகமாக சோதனைகளைச் செய்யக்கூடிய ரேபிட் டெஸ்ட் கிட்கள் 4,00,000 வாங்குவதற்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. அது ஓரிரண்டு நாட்களில் அவை வந்துவிடும். ஆனால், மாநில அரசு அவற்றை நம்பி இல்லை.

கொரோனா நோய் இருப்பதை உறுதிசெய்யக்கூடிய பிசிஆர் கிட் மூலம், எல்லாம் தீவிர சுவாசத் தொற்று நோயாளிகள், இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் உடையவர்கள் என எல்லோரையும் பெரும் எண்ணிக்கையில் சோதிக்கிறோம்" என்று தெரிவித்தார்.

கொரோனாவை எதிர்கொள்வதற்கான மருத்துவ உபகரணங்களை மாநில அரசுகள் நேரடியாக வாங்குவதற்கு மத்திய அரசு கட்டுப்பாடு எதையும் விதித்திருக்கிறதா என்று கேட்டபோது, "இந்த நோயை எல்லோருமே சேர்ந்துதான் எதிர்க்க வேண்டும். எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரு பொதுவான நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன" என்று மட்டும் அவர் தெரிவித்தார்.

ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அவரது உடலைச் சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள இடுகாட்டில் இறுதிச் சடங்குகள் செய்ய கொண்டுசென்றபோது, அங்கிருந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், இறுதிச் சடங்குகளைச் செய்ய முடியவில்லை.

இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, தகவல் தொடர்பில் இருந்த இடைவெளியால் இவ்வாறு நடந்துவிட்டதாகவும் தற்போது இந்த விவகாரம் சரிசெய்யப்பட்டுவருவதாகவும் சுகாதாரத் துறைச் செயலர் தெரிவித்தார்.

இந்த மருத்துவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் சென்னையில் கொரோனாவுக்காக சிகிச்சைபெற்றுவந்தார். அவரது குடும்பத்தினரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனாவைத் தடுக்கும் நடவடிக்கையாக தமிழ்நாட்டில் தற்போது நீடித்துவரும் ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி விடுத்துள்ள அறிவிப்பில், ஊரடங்கை ஏப்ரல் 30ஆம் தேதிவரை நீட்டிப்பது என கடந்த 11ஆம் தேதி நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் பேரிடர் மேலாண்மைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 ஆகியவற்றின் படி தற்போதுள்ள ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு நீட்டிக்கப்படும் காரணத்தால் மே மாதத்திற்கென நியாய விலைக் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் விலையில்லாமல் தரப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டடத் தொழிலாளர் உட்பட பதிவுபெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் இரண்டாவது முறையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மே மாதத்திற்கென 15 கிலோ அரசி, பருப்பு, சமையல் எண்ணை ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும்.

ஊரடங்கிற்கென ஏற்கனவே உள்ள நடைமுறைகள் தொடருமென்றும் முதலமைச்சரின் அறிவிப்பு கூறுகிறது.

கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 1075 ஆக உயர்வு

பட மூலாதாரம், Getty Images

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு முதலில் மார்ச் 24ஆம் தேதி மாலை ஆறு மணி முதல் மார்ச் 31ஆம் தேதிவரை ஊரடங்கை அறிவித்தது. இந்த ஊரடங்கை ஏப்ரல் 14வரை மத்திய அரசு நீட்டித்தது.

நாளை ஏப்ரல் 14ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், அதனை நீட்டிக்கும் அறிவிப்பை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே பஞ்சாப், ஒடிஷா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழகத்திலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவை மருத்துவர்களுக்கு கொரோனா

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து மருத்துவர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதும் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர். இவர்களது சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பரிசோதனை முடிவுகள் இன்று வெளிவந்துள்ளன. அதில், இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

"கொரோனா சிகிச்சையில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை வழங்கியிருந்தும், நோய் தொற்று எப்படி ஏற்பட்டது என தெரியவில்லை" என சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர்.

கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் இன்று மாலை வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தற்போது இரண்டு மருத்துவர்களும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், தங்கியிருந்த அறை, தொடர்பில் இருந்த மற்ற மருத்துவர்கள் மற்றும் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

கோவை அரசு மருத்துவமனை மற்றும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலிருந்து கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1075ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையில் எட்டு மருத்துவர்களும் அடங்குவார்கள் என்றார்.

புதிதாக கொரோனா தாகத்திற்கு ஆளானவர்கள் என இன்று (ஏப்ரல் 12)அடையாளம் காணப்பட்ட 106 நபர்களில், 16 நபர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் சென்றவர்கள் என்றும் மீதமுள்ள 90 நபர்கள் நோய் தொற்று ஏற்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போது வரை கொரோனா தாகத்திற்கு ஆளான மருத்துவர்களில் இரண்டு மருத்துவர்கள் அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் என்றும் இரண்டு மருத்துவர்கள் ரயில்வே மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் என்றும் நான்கு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள் என பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

தமிழகத்தில் தற்போதுவரை 39,401 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அரசின் கண்காணிப்பில் 162 நபர்கள் உள்ளனர் என்றும் கொரோனா அறிகுறி தென்பட்ட நபர்களிடம் இருந்து 10,655 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் ஆராய்ச்சியில் தமிழகம் முன்னோடியாக திகழ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறிய அவர், தமிழகத்தில் இதுவரை 50 நபர்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என்றும் குணம் பெற்ற நபர்களின் பிளாஸ்மாவை சேகரித்து ஆய்வு நடந்துவருகிறது என்றார்.

கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 1075 ஆக உயர்வு

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் கொரோனா அறிகுறிகள் தென்பட்ட 58,189 நபர்களுக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது. மேலும் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளான நபர்களின் தொடர்பில் இருப்பவர்களையும் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டவர்களை கொண்டுள்ள நகரங்களாக உள்ள சென்னையில், இன்று புதிதாக 18 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதியசெய்யப்பட்டுள்ளது என்றும் அடுத்ததாக கோவையில், 22 நபர்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 35 நபர்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார்.

கொரோனா வைரஸ்

மேலும், தமிழகத்தில் 23 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அதில் அரசு மருத்துவமனைகளில் 14 ஆய்வகங்களும், 9 தனியார் ஆய்வகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். தனியார் சோதனை மையங்களில் சோதனை செய்யப்பட்டால், அதற்கான செலவை அரசு ஏற்கும் என்றும் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: