சுமத்ரான் காண்டாமிருக இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக மலேசியா அறிவிப்பு

மலேசியாவிலுள்ள போர்னியோ தீவில் வசித்து வந்த 25 வயதான சுமத்ரான் வகை பெண் காண்டாமிருகம் ஒன்று நேற்று (சனிக்கிழமை) புற்றுநோயின் காரணமாக உயிரிழந்தது. இதன் மூலம், சுமத்ரான் வகை காண்டாமிருக இனம் தங்களது நாட்டில் முற்றிலும் அழிந்துவிட்டதாக மலேசிய அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

மலேசியாவின் கடைசி ஆண் சுமத்ரான் காண்டாமிருகம் கடந்த மே மாதம் உயிரிழந்தது.

ஒரு காலத்தில் ஆசிய கண்டம் முழுவதும் பரந்து காணப்பட்ட சுமத்ரான் காண்டாமிருகத்தின் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து தற்போது வெறும் 100 மட்டுமே வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினமாக கருதப்படுகிறது.

இமான் என்ற பெயரை கொண்ட அந்த பெண் சுமத்ரான் காண்டாமிருகம், உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5:35 மணியளவில் உயிரிழந்ததாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"கடந்த 2014ஆம் ஆண்டு எங்களது வசம் வந்ததில் இருந்து உயிரிழந்தது வரை நாங்கள் இமானை மிகச் சிறந்த முறையில் பராமரித்து வந்தோம்" என்று மலேசியாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களின் வேட்டைகளினாலும், வாழிட பரப்பு அழிப்பினாலும் இதற்கு முன்புவரை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருந்த சுமத்ரான் காண்டாமிருகங்களுக்கு, தற்போது குறைந்து வரும் அவற்றின் எண்ணிக்கையே மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

முன்னதாக, சுமத்ரான் வகை காண்டாமிருகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மலேசிய அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்தன.

சுமத்ரான் காண்டாமிருகம் குறித்த சில தகவல்கள்

  • உலகிலுள்ள ஐந்து வகை காண்டாமிருகங்களில் இரண்டு ஆப்பிரிக்காவிலும், மூன்று ஆசியாவிலும் உள்ளன.
  • ஆசியாவில் காணப்படும் காண்டாமிருகங்களில் சுமத்ரானும், மிகச் சிறிய வகையை சேர்ந்த டைசரோஹினஸ் சுமட்ரென்சிஸும் அடக்கம்.
  • சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துபோன, கம்பளி போன்ற உரோம அமைப்பை கொண்ட காண்டாமிருகத்துக்கும் இவற்றிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
  • 100க்கும் குறைவாக சுமத்ரான் ரக காண்டாமிருகங்களே தற்போது உலகில் உள்ளன. (சிலர் 30க்கும் குறைவாக என்றும் வாதிடுகின்றனர்). அவற்றில் பெரும்பாலானவை இந்தோனீஷியாவிலுள்ள சுமத்ரா தீவுகளில் வாழ்ந்து வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: