You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குழந்தையின் சடலத்தை தர மறுத்த இந்தோனீஷிய மருத்துவமனை: மீட்டு வந்த டாக்சி ஓட்டுநர்கள்
இந்தோனீஷியாவில் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணத்தைச் செலுத்தாததால், இறந்த குழந்தையின் உடலைத் தர மறுத்ததாகக் கூறி அந்த மருத்துவமனையை முற்றுகையிட்ட வாடகைக்கு இரு சக்கர வாகனம் ஓட்டும் 'மோட்டர் சைக்கிள் டாக்சி' ஓட்டுநர்கள், அந்தக் குழந்தையின் உடலை வெளியே எடுத்து வந்துள்ளனர்.
இந்தோனீஷிய நகரமான படாங்கில் உள்ள ஜமீல் மருத்துவமனை, கடந்த செவ்வாயன்று, ஆலிஃப் புத்ர் என்ற ஆறு மாத குழந்தையின் இறந்த உடலை கட்டணம் செலுத்தாததால் வழங்க மறுத்துவிட்டது.
இஸ்லாமிய வழக்கப்படி இறந்தவர்களின் இறுதிச் சடங்கை எவ்வளவு விரைவில் நடத்த முடியுமோ அவ்வளவு விரைவில் நடத்தி முடிக்க வேண்டும்.
அதனால் குழந்தையின் உறவினர் ஒருவர் வாடகை இரு சக்கர ஓட்டுநர் என்பதாலும், மனிதாபிமான அடிப்படையிலும் குழந்தையின் உடலை மீட்க 'மோட்டர் சைக்கிள் டாக்சி' ஓட்டுநர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
குழந்தையின் உடலை ஏந்தியவாறு ஒருவர் வர அவருடன் பல இருசக்கர வாகன ஓட்டுநர்கள் மருத்துவமனையை விட்டு வெளியேருவதைக் காட்டும் காணொளி வெளியாகியுள்ளது.
"அந்தக் குழந்தையின் குடும்பம் கட்டணத் தொகையான 25 மில்லியன் ருப்யாவை செலுத்தாமல் முடியாமல் இருந்ததால் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்," என இந்த முற்றுகையில் கலந்துகொண்ட வாடியன்சியா எனும் 'மோட்டர் சைக்கிள் டாக்சி' ஓட்டுநர் கூறினார்.
இதே போன்று இந்தோனீஷியாவில் பிறந்த குழந்தையைக் மருத்துவ கட்டணம் செலுத்தாமல் பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்த மருத்துவமனைகள் பற்றி பல வழக்குகள் உள்ளன.
இந்தோனீஷிய அதிபர் ஜோகோ விடோடோவின் கீழ் செயல்படும் அனைவருக்குமான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் நாடு முழுவதும் செயல்பாட்டில் உள்ளது. ஆனால் நிதி பிரச்சனையால் இந்த திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில ஏழை குடும்பங்கள் இன்னும் இந்த திட்டத்தில் இணையவில்லை.
"ஆலிஃப் உடல் நலம் மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இந்த திட்டத்தில் சேர முடிவு செய்தோம். ஆனால் கடந்த செவ்வாய் அன்று காலை அறுவை சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. இதனால் ஆலிஃப் இறுதிச் சடங்கிற்காக பல மணிநேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று," என குழந்தையின் தாய் டேவி சூர்யா கூறுகிறார்.
பின்னர் மருத்துவமனை இந்த நிகழ்வு குறித்து மன்னிப்பு கேட்டதுடன் இவ்வாறு இனிமேல் நடக்காது என உறுதி அளித்துள்ளது.
பின்னர், மருத்துவமனை நிர்வாகக் குழுவால் இந்தக் கட்டணம் வழங்கப்பட்டது. இது சரியான புரிதல் இல்லாததால் ஏற்பட்ட சிக்கல் என மருத்துவமனை இயக்குநர் யுசிர்வான் யூசுஃப் தெரிவித்தார்.
மேலும் அவர், இந்த குடும்பம் எங்கள் மருத்துவமனை அதிகாரியை சந்தித்து புகார் அளித்தவுடன் பிரச்சனையைப் புரிந்து கொண்டோம் என்றார்.
"ஆனால் மருத்துவமனையை முற்றுகையிட்டு குழந்தையின் உடலை எடுத்துச் செல்வது தவறு. பிறருக்குப் பரவும் தன்மையுள்ள தொற்று நோய் அந்தக் குழந்தைக்கு இருந்திருந்தால் என்ன செய்வது? அதன் மூலம் நோய் பரவினால் யார் பொறுப்பு," எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
"உடலை ஒப்படைப்பதில் எங்களுக்கும் சில நடைமுறை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்," என்றும் யுசிர்வான் யூசுஃப் கூறினார்.
இதைத் தொடர்ந்து ஓட்டுநர்கள் அல்ஃபியான்ரி என்பவர் தங்கள் சகாக்கள் சார்பாக மன்னிப்பு கோரியுள்ளார்.
"எங்களுக்கு இந்த நடைமுறைகள் குறித்துத் தெரியாது. உடலை வழங்கத் தாமதம் ஆனதால்தான் நாங்கள் இவ்வாறு செய்தோம்," என்று அவர் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்