மகாராஷ்டிர அரசியல்: "கட்சியும் குடும்பமும் உடைந்துவிட்டது" - சரத் பவார் மகள் சுப்ரியா சுலே

தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்கு அக்கட்சியின் தலைவர் சரத் பவார் அழைப்பு விடுத்துள்ளார்.

மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இன்று (சனிக்கிழமை)காலை முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சிக்குத் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். அந்த கட்சியைச் சேர்ந்தவரும், பவாரின் மருமகனுமான அஜித் பவார் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராகப் பதவியேற்றார்.

நிலையான ஆட்சி அமையவே பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்ந்ததாக அஜித் பவார் தெரிவித்தார்.

"மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க அஜித் பவார் ஆதரவு அளித்திருப்பது அவரது தனிப்பட்ட முடிவே தவிர தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அல்ல. அவருடைய இந்த முடிவை நாங்கள் ஆதரிக்கவில்லை என்பதை பதிவு செய்கிறோம்" என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இப்படியான சூழலில் இன்று மாலை தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

கட்சியும், குடும்பமும்

கட்சியும், குடும்பமும் உடைந்துவிட்டது என சரத்பவார் மகள் சுப்ரியா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், "தேசியவாத காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிக்கையை 12.30 மணிக்கு வெளியிடும்" என்றும் தெரிவித்தார்.

மாலை 4.30 மணிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

அஜித் பவார் மீது குற்றச்சாட்டு

பா.ஜ.கவுடன் கரம் கோர்த்துள்ள அஜித் பவார் மீது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நவாப் மாலிக் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சரத் பவாருடனே இருக்கின்றனர் என்றும், வருகை பதிவேட்டிற்காக பெறப்பட்ட கையெழுத்துகள் தவறாக பயன்படுத்தப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கூட்டம்

தற்போதைய நிலையை விவாதிக்க காங்கிரஸ் கட்சி அவசர கூட்டத்தைக் கூட்டி உள்ளது. மும்பை கட்சி அலுவலகத்தில் நடக்க உள்ள இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: