You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை ஆதிக்குடிகள்: 200 ஆண்டுகள் பழமையான வேடர்களின் மண்டை ஓடுகள் ஒப்படைப்பு
தங்களது வசமிருந்த இலங்கையை சேர்ந்த பழங்குடிகளின் ஒன்பது மண்டை ஓடுகளை அவர்களது வழித்தோன்றல்களிடம் எடின்பர்க் பல்கலைக்கழகம் ஒப்படைத்துள்ளது.
இலங்கையிலுள்ள வேடர் இனத்தைச் சேர்ந்த இந்த மண்டை ஓடுகள் 200 ஆண்டுகளுக்கும் பழமையானது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மண்டை ஓடுகள் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் சேகரிப்பின் அங்கமாகக் கடந்த ஒரு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்தது.
இந்நிலையில், இந்த ஒன்பது மண்டை ஓடுகள் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்த விழாவில் வேடர் இனத்தின் தலைவர் வன்னியா உருவாரிகேவிடம் ஒப்படைக்கப்பட்டது.
"எங்களது இனத்தில் இறந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவர்களது நினைவைப் போற்றும் வகையில் நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விழா நடத்தி வருகிறோம்" என்று அவர் கூறினார்.
"இந்த மண்டை ஓடுகள் பல ஆண்டுகளாக எடின்பர்கில் இருந்தாலும், அவர்களது ஆத்மா இத்தனை ஆண்டுகளாக எங்களுடன் இலங்கையிலிருந்து வந்துள்ளது. இந்நிலையில், எங்களது மூதாதையர்களின் ஆத்மாவும், உடல் எச்சங்களும் ஒன்று சேரும் இந்த நிகழ்வு எங்களது இனத்திற்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம்" என்று உருவாரிகே மேலும் கூறுகிறார்.
12,000க்கும் மேற்பட்ட உடற்கூறியல் சேகரிப்புகள் காணப்படும் எடின்பர்கில், இந்த மண்டை ஓடுகள் எப்படி வந்தன என்ற கேள்விக்குத் தெளிவான பதில் இல்லை.
ஜெர்மனி மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் மண்டை ஓடுகள் பற்றிய ஆய்வில், தாங்கள்தான் இலங்கையின் பழங்கால மக்கள் என்ற வேடர்களின் கூற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதுமட்டுமின்றி, வேடர்கள் முன்னொரு காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வெப்பமண்டல மழைக்காடுகளில் வேட்டையாடி வாழ்ந்ததையும் இந்த ஆய்வு கண்டறிந்தது.
முன்னதாக, தங்களது வசமுள்ள மண்டை ஓடுகளைத் திரும்ப ஒப்படைக்கும் பல்கலைக்கழகத்தின் முடிவை வேடர்கள் ஏற்றுக்கொண்டனர்.
தங்களது வரலாற்றைப் பாரம்பரிய வேட்டைக்காரர்கள் மற்றும் வனவாசிகள் என்று காட்டும் தொகுப்பில் இந்த மண்டை ஓடுகளைக் காட்சிப்படுத்த வேடர்கள் திட்டமிட்டுள்ளனர்.
நீண்ட நெடுங்கால வரலாறு கொண்ட இலங்கையிலுள்ள வேடர்களின் பாரம்பரியமிக்க வாழ்க்கைமுறை, நிலம் அழிப்பு மற்றும் உள்நாட்டுப் போர் ஆகியவற்றின் காரணமாக அடுத்த இரண்டு தலைமுறைகளில் அழிந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிற செய்திகள்:
- மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பம்: பாஜகவின் பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்பு
- இலங்கையில் தேர்தலுக்குப் பின் பெயர் பலகைகளில் இருந்து அழிக்கப்படும் தமிழ் எழுத்துகள்
- உலகெங்கும் நடக்கும் போராட்டங்கள், கிளர்ந்தெழுந்த மக்கள் - என்ன காரணம்?
- 'உத்தவ் தாக்ரே தலைமையில் அரசு' - மகாராஷ்டிரா அரசியல் இழுபறி முடிவுக்கு வருகிறதா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: