You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிளாஸ்டிக்கை தின்னும் பாக்டீரியாக்கள்: கண்டுபிடித்த ஷிவ் நாடார் பல்கலைக்கழகம்
உலகத்துக்கே மிகப் பெரிய பிரச்சனையான விளங்குகின்றன பிளாஸ்டிக் கழிவுகள். இந்நிலையில், பிளாஸ்டிக்கை தின்னும் இரண்டு வகை பாக்டீரியாக்களை டெல்லி ஷிவ் நாடார் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது.
டெல்லியை அடுத்துள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தங்களது இந்த கண்டுபிடிப்பு தொடர்பான கட்டுரையை ஆர்.எஸ்.சி. (ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி) அட்வான்ஸஸ் என்ற சஞ்சிகையில் வெளியிட்டுள்ளனர்.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக்கில் உள்ள முக்கிய வேதிப்பொருளான பாலிஸ்டைரீனின் கட்டமைப்பை உடைத்து அதை மட்க செய்யும் திறன் படைத்த எக்ஸிகியூயோபாக்டீரியம் சிபிரிகம் ஸ்ட்ரைன் டிஆர்11, எக்ஸிகியூயோபாக்டீரியம் உண்டே ஸ்ட்ரைன் டிஆர்14 ஆகிய இரண்டு வகை பாக்டிரியாக்களை தங்களது பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள நீர் நிலையில் கண்டறிந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய கோப்பைகள், உறிஞ்சு குழல்கள், பொட்டலம் இடும் தாள்கள் உள்ளிட்டவற்றின் கழிவுகள் உலகம் முழுவதும் பல்கி பெருகி வருகின்றன. இதன் காரணமாக நீர் நிலைகள் தொடங்கி பல்வேறு நிலைகளிலும் சூழலியல் சீர்கேடு ஏற்படுகிறது.
இந்நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த இரண்டு பாக்டீரியாக்கள் பிளாஸ்டிக்கை கார்பன் ஆதாரமாக பயன்படுத்துவதுடன், பையோபிலிம்கள் எனும் ஒருவித உயிர் மென்படலத்தை உருவாக்கி பாலிஸ்டைரீனின் பண்புகளை மாற்றிவிடுகின்றன.
பாலிஸ்டைரீன் சங்கிலிகளை உடைக்க ஹைட்ரோலைசிங் என்சைம்களை வெளியிடுவதன் மூலம் இயற்கையான சிதைவுறுதலுக்கு இந்த பாக்டீரியாக்கள் வழி செய்கின்றன.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் ரூபா மஞ்சரி கோஸ், பேராசிரியர் பிரியதர்ஷினி தலைமையிலான ஆய்வாளர்கள் குழுவினருக்கு தான் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதாகவும், இதன் மூலம் உலகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பிளாஸ்டிக்கை இயற்கையான முறையின் மூலம் மட்க செய்யும் கனவு நனவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டை 2022ஆம் ஆண்டிற்குள் முற்றிலும் தடை செய்யும் இந்திய அரசின் நோக்கத்துக்கு இந்த கண்டுபிடிப்பு பெரிதும் துணையாக இருக்கும் என்று இந்த ஆய்வு குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் பிரச்சனைக்கு உயிரியல் தீர்வு காணும் வகையில் இந்த இரண்டு வகை பாக்டீரியாக்களின் வளர்சிதை மாற்றம் குறித்து ஆராயும் பணியில் தாங்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாக ஷிவ் நாடார் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிறசெய்திகள்:
- குர்து மக்கள் தனி நாடு கேட்டு போராடுவது ஏன்? அவர்களின் வரலாறு என்ன?
- கடலில் திசை மாறி 20 நாள்கள் தத்தளித்த இலங்கை மீனவர்கள்: பசி தீர்த்த ஆமை ரத்தம்
- ‘ஜீரோ’ ‘ஓ’ - இரண்டுக்கும் இடையேயான ஒற்றுமையால் பரிதவிக்கும் விவசாயிகள் - வங்கி குளறுபடி
- "பொருளாதாரம் குறித்து நான் கூறியதைத் திரும்பப் பெறுகிறேன்" - ரவிசங்கர் பிரசாத்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்