‘ஜீரோ’ ‘ஓ’ - இரண்டுக்கும் இடையேயான ஒற்றுமையால் பரிதவிக்கும் விவசாயிகள் - வங்கி குளறுபடி

ஆங்கில எழுத்து "O" மற்றும் "0" அதாவது பூஜ்ஜியம் இரண்டுக்கும் இடையே ஏற்பட்ட குழப்பத்தால் சத்தீஸ்கரில் விவசாயிகள் கவலைக்குள்ளானார்கள்.

இந்த இரண்டு எழுத்துக்கும் உள்ள ஒரே மாதிரியான தோற்றத்தால் மஹாசமுந்த் என்ற நகரத்தில் விவசாயிகள் குழப்பத்தில் தவிக்கின்றனர்.

பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா என்ற விவசாயிகளுக்கு நிதி அளிக்கும் திட்டத்தின்படி விவசாயிகளுக்கு ஒரு வருடத்தில் மூன்று தவணையில் 6000 ரூபாய் கொடுக்கப்பட வேண்டும். இந்த நகரத்தில் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் உள்ளனர், ஆனால் 556 விவசாயிகளுக்கு மட்டுமே இந்த திட்டத்தின் மூன்றாவது தவணை ரூபாய் கிடைத்தது.

இந்த நகரத்தின் கூட்டுறவு வங்கியைச் சென்று சிலர் கேட்டபோது இணையதளத்தில் பணப்பரிமாற்றம் செய்தபோது வங்கியின் ஐஎஃப்எஸ்சி கோடின் கடைசி நான்கு இலக்கங்களில் உள்ள பி ஆர் பூஜ்ஜியம் ஒன்று(BR01) என்பதற்குப் பதில் பி ஆர் ஒ ஒன்று(BRO1) என்று தவறாகப் பதிவேற்றம் செய்ததால் பலருக்கு அவர்கள் கணக்கில் பணம் ஏறவில்லை.

"எல்லா வேடிக்கையும் விவசாயிகளுடன் மட்டுமே ஏன் நடக்க வேண்டும்? பூஜ்ஜியத்திற்கு பதிலாக ஓ என்ற ஆங்கில எழுத்து அடித்தது கவனமின்மையின் உச்சக்கட்டம் ஆகும். இந்த தகவல் பதிவின் போது தவறு நடந்து விட்டதாகக் கருதினாலும் இதைத் திருத்த எவ்வளவு நாள் ஆகும்? ஆனால் இதைத் திருத்த அரசு விரும்பவில்லை. இதனால் நாங்கள் ஆயிரக்கணக்கானோர் கவலையில் உள்ளோம்" என்கிறார் விவசாயிகளில் ஒருவரான ஜாகேஷ்வர் சந்திரகார்.

இந்த கிசான் சம்மான் நிதி யோஜனா திட்ட்த்தின் நோடல் அதிகாரி சீமா டாகூர் இந்த விஷயத்தில் விவசாயிகள் யாரும் இன்னும் புகார் கொடுக்கவில்லை அப்படிக் கொடுத்தால்தான் இதைப் பற்றி நாங்கள் விசாரணை நடத்த முடியும் என்கிறார்.

ஆனால் மாவட்ட கூட்டுறவு வங்கியின் அதிகாரி டோங்கர்லால் நாயக் இதைப் பற்றி விவசாயிகள் தன்னிடம் புகார் கொடுத்தாக ஒப்புக்கொண்டார்.

"எங்கள் வங்கியின் ஐஎஃப்எஸ்சி கோட் சரியாக உள்ளது ஆனால் தகவல் பதிவு செய்யும்போதுதான் இந்த குழப்பம் நிகழ்ந்துள்ளது. எங்கே மக்கள் இதற்கான விண்ணப்பங்களைச் செய்தார்களோ அங்கேயிருந்துதான் அவர்கள் இதைப் பற்றிய தகவல்களைப் பெற முடியும்." என்றார்.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில பாஜக செய்தி தொடர்பாளர் ஸ்ரீசந்த் சுந்தரானி இந்த தவறுக்கு மத்திய அரசின் மேல் குற்றம் சாட்டுகின்றனர்.

"வங்கியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் அதனைச் சரிசெய்து விவசாயிகளுக்கு கூடிய விரைவில் நன்மை செய்ய வேண்டும். ஆனால் மாநில அரசாக இருக்கும் காங்கிரஸ் அரசு இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசின் திட்டத்தைக் குறை கூறுகிறது. O எப்படி 0 ஆகும்? மத்திய அரசின் திட்டத்தை பற்றி அவதூறு பரப்ப மாநில அரசு செய்யும் சதிதான் இது" எனக் கூறினார் சுந்தரானி.

இது குறித்து பேசிய முதலமைச்சர் பூபேஷ் பகேல் "இந்த திட்டம் தொடக்கத்திலிருந்து பிரச்சனையாகத்தான் உள்ளது. சில நேரங்களில் ஆதார் பிரச்சனை சில நேரங்களில் வங்கியில் ஆவணங்களை ஒப்படைப்பதில் பிரச்சனை. மத்திய அரசின் சொல்லுக்கும் செயலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது இதுவரை விவசாயிகளுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாம் தவணை கிடைக்கவில்லை நான் மத்திய விவசாய அமைச்சர் தோமருக்கு இந்த நிதி யோஜனா திட்டத்தின் பணத்தைத் தருமாறு கடிதம் எழுதினேன்" என்றார்.

மத்திய அரசு மாநில அரசைக் குற்றம் சாட்டுகிறது. இன்னொரு புறம் மாநில அரசு மத்திய அரசை குறை கூறுகிறது. ஆனால் உண்மையில் இந்த திட்டத்தில் மூன்றாவது தவணை இதுவரை 1.74% விவசாயிகளுக்கு மட்டுமே கிடைத்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :