சந்திரயான்-2: "விக்ரம் லேண்டர் தரையிறங்க திட்டமிட்ட இடத்தில் காணவில்லை" - படங்களை வெளியிட்ட நாசா

தரையிறங்குவதற்கு திட்டமிட்ட இடத்தில் சந்திரயான்-2 விக்ரம் லேண்டரை காணவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள நாசா, ஒருவேளை சந்திரயான், நிலவின் நிழலில் மறைந்திருக்க வாய்ப்புண்டு என்று தெரிவித்துள்ளது.

அறுந்துபோன தொடர்பு

ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் நிலவுப் பயணத் திட்டம் சந்திரயான்-2ன் தரையிறங்கு கலன் விக்ரம் லேண்டர் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் மெதுவாகத் தரையிறங்க முயன்றபோது அதனுடன் தொடர்பு அறுந்துபோனது.

விக்ரம் லேண்டருடனான தொடர்பை ஏற்படுத்துவதற்கு இஸ்ரோ முயற்சித்து வந்தது. அதனைக் கண்டறியும் முயற்சியில் நாசாவும் ஈடுபட்டது.

இந்நிலையில், விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு திட்டமிட்ட இடத்தை தனது செயற்கைக்கோள் கடந்து சென்றபோது படங்கள் எடுத்ததாகவும், அவற்றை ஆராய்ந்துவருவதாகவும் நாசா அப்போது தெரிவித்தது. அந்தப் படங்களை தற்போது வெளியிட்டுள்ள நாசா அந்தப் படங்களில் விக்ரம் லேண்டரைக் காண முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.

அக்டோபரில் மீண்டும் முயற்சி

விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்கு உத்தேசிக்கப்பட்ட இடத்தை 150 கிலோமீட்டர் உயரத்திலிருந்து தனது எல்ஆர்ஓ எனும் சுற்றுவட்ட கலனை கொண்டு படம் எடுத்ததாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"எங்களது சுற்றுவட்ட கலன் நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதாக இருந்த இடத்தை கடந்த 17ஆம் தேதி படமெடுத்தது. அதை ஆராய்ந்த எங்களது அணியால் விக்ரம் லேண்டரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த படங்கள் எடுக்கப்பட்ட சமயத்தில் நிலவின் அந்தப் பகுதியில் அரையிருள் சூழ்ந்திருந்த காரணத்தினால், அதில் விக்ரம் லேண்டர் மறைப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.

எனவே, வரும் அக்டோபர் மாதம் வெளிச்சம் திரும்பும்போது, விக்ரம் லேண்டரை கண்டறிந்து அதை படம் எடுக்கும் பணியில் எங்களது சுற்றுவட்ட கலன் ஈடுபடுத்தப்படும்" என்று நாசா வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவில் ஒரு பகல் பொழுது என்பது புவியின் கணக்கில் 14 நாள்களாகும். நிலவின் தென் துருவப் பகுதியில் இந்த பகல் பொழுது தொடங்கும்போது விக்ரம் லேண்டர் தரையிறங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. சூரிய விசை உதவியோடு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த லேண்டர் இந்த 14 நாள் பகல் பொழுதில் மட்டுமே செயல்பட்டிருக்கும்.

நிலவில் இந்த லேண்டர் தரையிறங்கும் பகுதியில் இரவின் இருள் கவியும்போது அதன் செயல்பாடு முடங்கிவிடும். செப்டம்பர் 7-ம் தேதி தரையிறங்கும்போது விக்ரம் லேண்டருடன் தொடர்பு அறுந்துபோனாலும், மீண்டும் தொடர்பை உயிர்ப்பிக்க முயல்வதற்கு இருந்த 14 நாள்கள் அவகாசம் கடந்த 21ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்ததாக இஸ்ரோ தெரிவித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :